என் மலர்
விளையாட்டு
- ஜோதி சிங் கேப்டனாக நீடிக்கிறார்.
- மாற்று வீராங்கனைகளாக பிரியங்கா யாதவ், பார்வதி டாப்னோ இடம் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
11-வது மகளிர் ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி தலைநகர் சான்டியாகோவில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் 2 சிறந்த அணிகள் என மொத்தம் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதலாவது ஆட்டத்தில் நமிபியாவையும் (டிச.1), 2-வது ஆட்டத்தில் ஜெர்மனியையும் (டிச.3), 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அயர்லாந்தையும் (டிச.5) சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஜூனியர் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் கேப்டனாக நீடிக்கிறார். மாற்று வீராங்கனைகளாக பிரியங்கா யாதவ், பார்வதி டாப்னோ இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: நிதி, ஹர்ஷா ராணி மின்ஸ், பின்களம்: மனிஷா, லால்தான்லுஅலங்கி, சாக்ஷி சுக்லா, பூஜா சாஹூ, நந்தினி, நடுகளம்: சாக்ஷி ராணா, இஷிகா, சுனெலிதா தோப்போ, ஜோதி சிங், கைடிம் ஷிலீமா சானு, பினிமா தான், முன்களம்: சோனம், பூர்ணிமா யாதவ், கனிகா சிவாச், ஹினா பானோ, சுக்வீர் கவுர்.
- உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது.
- இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
கெய்ரோ:
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சம்ரத் ராணா அசத்தினார். அவர் 8 பேர் இடையிலான இறுதி சுற்றில் மொத்தம் 243.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரராக ராணா சாதனை படைத்தார்.
20 வயதான சம்ரத் ராணா அரியானாவைச் சேர்ந்தவர். சீனாவின் ஹூ காய் 243.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்திய வீரர் வருண் தோமர் 221.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திரம் மனு பாக்கர் ஏமாற்றம் அளித்தார். அவர் 139.5 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை இஷா சிங் 6-வது இடம் பெற்றார். அணிகள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங், சுருச்சி சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 6 தங்கம் உள்பட 12 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
- வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகளிர் அணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரிச்சா கோஷும் ஒருவர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிலிகுரியில் ரிச்சா கோஷின் பெயரில் கிரிக்கெட் மைதானம் கட்ட உள்ளதாக அறிவித்தார்.
சில தினங்கள் முன் முதல்வர் மம்தா பானர்ஜி ரிச்சாவுக்கு மாநில காவல்துறையில் டிஎஸ்பி வேலை வழங்கியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மம்தா கூறுகையில், "வெறும் 22 வயதில் ரிச்சா உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
கிரிக்கெட் பிரியர்களுக்கு அவரது பெயரில் ஒரு மைதானத்தை பரிசளிக்க விரும்புகிறோம்.
இப்போது, ரிச்சாவின் பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். அதற்கான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும், வங்காள கிரிக்கெட் சங்கம் (CAB) தங்கப் பெண்ணுக்கு ரூ.34 லட்சம் நிதி வெகுமதியையும், தங்க முலாம் பூசப்பட்ட மட்டை மற்றும் பந்தையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
- ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சாம்சனை வாங்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் வாரம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணியில் எம் எஸ் தோனிக்கு வயதாகி விட்டதால் அவர் 20 ஓவரும் கீப்பிங் செய்வார் என்பது சந்தேகம்தான். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவை என்பதால் சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் எடுக்க அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினால் அந்த அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சீசனில் சாம்சன் இல்லாத போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அவர்தான் கேப்டன் என சில தகவல்கள் வந்த நிலையில் அவரையும் ராஜஸ்தான் அணி விடுவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இவர்களுக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜூரல் உள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
- சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் ஜடேஜா, துபே, பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.
- அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூறியது.
மும்பை:
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது. இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.
இதன் மூலம் சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது உறுதியாக உள்ளது. அவருடன் செல்லும் மற்றொரு வீரர் பத்திரனா, துபே ஆகியோரை கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. அதனால் ஜடேஜாவுடன் செல்லும் சிஎஸ்கே வீரர் யார் என்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மேலும் அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்த ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது வருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் பெற்று கொடுத்த வெற்றி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
- தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.
- வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட டிரேடிங்காக வாஷிங்டன் சுந்தரின் டிரேடிங் செய்தி அமைந்தது. ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல் அதிகளவு வைரலாகி வருகிறது.
ஆனால் இது குறித்து குஜராத் அணியின் நிர்வாகமும் சரி, சென்னை அணியின் நிர்வாகமும் சரி உறுதியான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி மறுத்துவிட்டது.
- நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
- இதன் இறுதி போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், கனடாவின் இமான் ஷகீனை எதிர்கொண்டார்.
சிட்னி:
நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், கனடாவின் இமான் ஷகீனை எதிர்கொண்டார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஷகீன் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை ராதிகா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 5-வது செட்டை ஷகீன் கைப்பற்றி வெற்றி பெற்றார். 61 நிமிடங்கள் போராடிய ராதிகா 8-11, 3-11, 11-4, 12-10 மற்றும் 10-21 என்ற செட் கணக்கில் தோற்று கோப்பையை நழுவ விட்டார்.
- 11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
- நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
பனாஜி:
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம் பெற்றனர். 2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தியான் கோஷ் ஆகிய 5 வீரர்களும் 3-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.
இன்று ஓய்வு நாளாகும். 4-வது சுற்று ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் ஆட்டமும், 12-ந்தேதி 2-வது ஆட்டமும், தேவைப்பட்டால் 13-ந்தேதி டை பிரேக்கரும் நடைபெறும். இந்த சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் ஆடுவார்கள்.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியல் டுபோவுடன் மோதுகிறார். அர்ஜூன் எரிகைசி அங்கேரியை சேர்ந்த பீட்டர் லிகோவை சந்திக்கிறார்.
பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீடனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகுவாங்குடனும் மோதுகிறார்கள்.
- ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடர் வருகிற 21-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
- இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம்.
சிட்னி:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடர் வருகிற 21-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் அனுபவமே தங்களது பலம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அனுபவமே எங்களது பிரதான பலம் என கருதுகிறேன். டெஸ்ட் போட்டி அல்லாமல் அனைத்து நிலைகளும் (ஒருநாள் ஆட்டம் , 20 ஓவர்) இதில் அடங்கும். இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம். களத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்.
அதிக வயதுள்ள வீரர்கள் கொண்ட அணி என்ற காலம் நிச்சயம் வரும். ஆனால் அதை நாங்கள் இன்னும் எட்டவில்லை என கருதுகிறேன்.
இவ்வாறு ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
டெஸ்டில் 300 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை எட்ட இன்னும் 5 விக்கெட்டுகளே அவருக்கு தேவை.
ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் 14 பேர் 30-க்கும் மேற்பட்ட வயதை கடந்தவர்கள். பந்து வீச்சாளர்களான நாதன் லயன் (38), ஹேசில் வுட் (34), ஸ்டார்க் (35), போலண்ட் (36) ஆகியோர் இதில் அடங்குவார்கள்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-3, 7-6 (8-6) என வென்றார்.
- இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.
சாக்ஸ்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.
முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 177 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து டி20 தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், நியூசிலாந்தின் இஷ் சோதி நேற்று 3 விக்கெட் சாய்த்தார். அவர் டி20 கிரிக்கெட்டில் 156 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமான் 155 விக்கெட் எடுத்த சாதனையை முறியடித்தார்.
இந்தப் பட்டியலில் ரஷித் கான் 182 விக்கெட், டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
- குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
- மேகாலயாவின் ஆகாஷ் குமார் அதிவேகமாக அரை சதம் கடந்து சாதனை படைத்தார்.
அகமதாபாத்:
குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார்.
வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆகாஷ் 50 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார்.
முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.






