என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெற்றிருந்தது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது. புதுவையில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது.

    இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. இடம்பெற்றது. பா.ம.க. இடம்பெறவில்லை.

    இந்த நிலையில் புதுவை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ம.க. ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்துக்கு பின் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு, புதுவையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறது. புதுவையில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கூட்டணி தலைவரான ரங்கசாமி, பா.ம.க.வை அழைக்கவில்லை.

    இதன் காரணம் தெரியவில்லை. புதுவை உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளிடம் இருந்து முறையான அழைப்பு வரவில்லை.

    இச்சூழலில் கூட்டணிக்கு காத்திருக்காமல் பா.ம.க. தேர்தல் பணிகளை தொடங்குகிறது. அனைத்து இடங்களிலும் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக்குழுவில் எடுத்த முடிவுகள் கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    முதியோர் உதவித் தொகையை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவும், கொரோனா நிவாரணம் வழங்கவும் ஒப்புதல் கேட்டோம். அப்போதைய கவர்னர் எதற்கும் ஒப்புதல் தரவில்லை. காங்கிரஸ் திட்டங்களைத்தான் இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி செயல்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசின் வியூகம் என்ன? என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியனிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- சட்ட மன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளதா?

    பதில்:- புதுவை, காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியிட ஆர்வத்துடன் மனு வாங்கி செல்கின்றனர். இதுவரை சுமார் 500 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தலை சந்திக்க காங்கிரசும், காங்கிரசாரும் தயாராக உள்ளனர்.

    கே:- தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என காங்கிரசார் கருத்து தெரிவித்துள்ளார்களே?

    ப:- சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக காங்கிரசாரிடையே எண்ணம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசிலிருந்து 9 வேட்பாளர்கள் திடீரென வெளியேறிவிட்டனர். ஒருவர் போட்டியிட முன்வரவில்லை. இதனால்தான் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாற்று கட்சி மீது குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. ஆளும்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. வழக்கமாகவே ஆளும்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.

     

    காங்கிரஸ்

    தி.மு.க. ஆளும்கட்சியாக இல்லாததால் கெட்ட பெயர் இல்லை. பா.ஜனதாவினர் மூட்டை, மூட்டையாக பணத்தை கொண்டுவந்து தேர்தலை சந்தித்தனர். இதையும் காங்கிரசார் உணர்ந்துள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கு விளக்கி வருகிறோம்.

    கே:- சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யார் தலைமை என பிரச்சினை எழுந்தது? உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு யார் தலைமை?

    ப:- தலைமை என்பது முக்கியத்துவம் அல்ல. ஒருங்கிணைந்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். மதவாத சக்திகளை தடுக்க வேண்டியது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கடமை. அதை உணர்ந்து செயல்படுவோம்.

    கே:- உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    ப:- ஆட்சியாளர்கள் பண பலத்துடன் உள்ளனர். பணபலம் உள்ள 3 கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால் தி.மு.க.வின் பலம் காங்கிரசுக்கு உள்ளது. பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதுவை உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

    கே:- என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து முதியார் உதவித்தொகை, கொரோனா நிவாரணம் வழங்கியுள்ளனர். இது ஆளும்கட்சிக்கு சாதகமாக இருக்காதா?

    ப:- முதியோர் உதவித் தொகையை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவும், கொரோனா நிவாரணம் வழங்கவும் ஒப்புதல் கேட்டோம். அப்போதைய கவர்னர் எதற்கும் ஒப்புதல் தரவில்லை. காங்கிரஸ் திட்டங்களைத்தான் இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி செயல்படுத்தியுள்ளது.

    இப்போது தமிழ் பேசும் கவர்னரை நியமித்து ஆட்சிக்கு சாதகமான செயல்பாடுகளை செய்கின்றனர். புதுவையில் தற்போதும் கவர்னர் மூலம் மறைமுகமாக பா.ஜனதா ஆட்சி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.

    ஏனெனில் பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டு வெற்றி பெற மாட்டார்கள். அதற்கு பதிலாக ஆள் பிடிக்கும் வேலை, கவர்னர் மூலமாக அதிகாரத்தை கைப்பற்றுவதையே செய்வார்கள்.

    இந்த ஆட்சியிலும் இது தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் போராடினோம். இப்போதைய ஆட்சி கவர்னரிடம் சரணடைந்துள்ளது. ஓடு மீன் ஓட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு என்பதுபோல என்ஆர்.காங்கிரசை கவிழ்த்து ஆட்சியை கவிழ்த்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் தருணத்துக்கு காத்திருக்கிறது. இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தான் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடை இல்லை- இளைஞர்கள் கொண்டாட்டம்

    புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    புதுச்சேரி:

    புதுவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

    மாநிலத்தில் உள்ள 1,149 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22-ந் தேதி அறிவித்தது.

    முதல் கட்டமாக காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நகராட்சிகள், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர். பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துக்களில் உள்ள 276 பதவிகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான மனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அக்டோபர் 7-ந்தேதி மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.

    அக்டோபர் 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 11-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.

    முதல் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 364 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுவையில் முதல் முறையாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    நமக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தயாரிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகிதக்கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

    தலைமை அஞ்சல் நிலையம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் உறைகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குனர் சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல்துறை தலைமை அதிகாரி வீணா ஸ்ரீநிவாஸ், தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், மக்கள் தொடர்பு ஆய்வாளர் கருணாகரன், தேசிய விருதுபெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து பிரபலப்படுத்துவது ஆகும்.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள், காகிதக்கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிடுவதற்காக தலைமை அஞ்சலகத்தை பாராட்டுகிறேன்.

    தற்போது கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்து இருக்கிறது. வரலாறு படைத்துள்ளது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

    நமக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன. வரலாறுகளையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும், நாம் பாதுகாக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலமானது கை, கால்களை கழுவுவது போன்ற நம் முன்னோர்களின் சில பழக்க வழக்கங்களை நமக்கு சொல்லி கொடுத்துள்ளது.

    நாம் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    காரைக்காலில் ஒரே நாள் இரவில் கோவில்களில் புகுந்து கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் என்.எஸ்.சி. போஸ் தெரு அருகே, உஜ்ஜைனி காளியம்மன் கோவில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல், கோவில் பூசாரியின் சைக்கிள் கடந்த 10 நாட்களுக்கு முன் திருடப்பட்டது.

    இதுகுறித்து, கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர்.

    அதேநாள் இரவில் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் மேற்கூரையை அகற்றி, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சாமி கழுத்தில் இருந்த தங்ககாசு, வெள்ளி பொருட்கள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து, நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் மதகடி பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் நாகை மாவட்டம் நாகூர் தெற்கு வீதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் மகன் ஆசிக் (வயது 24), அவரது நண்பர் கீவளூரைச் சேர்ந்த முத்து (20) என்பதும், காரைக்கால் உஜ்ஜைனி கோவில், ஏழை மாரியம்மன் ஆகிய கோவில்களில் திருடியதையும், வேறு கோவில்களில் திருடுவதற்காக நோட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, தங்ககாசு, உண்டியல் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மாத வருமானம் ரூ.2 ஆயிரத்து 499 வரை உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே இலவச சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக வருமானம் உடையவர்களும் வருமானம் குறைவாக இருப்பதாக வருவாய்த்துறையிடம் சான்றிதழ் பெற்று இலவச சிகிச்சையை பெற்று வருகின்றனர்.

    இத்தகைய சூழ்நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஜிப்மர் மருத்துவமனையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக நோயாளிகள் தங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க மாநில அரசுகள் வழங்கிய ரேஷன்கார்டுகளை (சிவப்பு கார்டு) கொண்டுவர வேண்டும். இதர வகையில் வருமானத்தை குறிக்கும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த உத்தரவு அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜிப்மரில் தற்போது உள்ள நிலை தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதே போல் அரசியல் கட்சியினரும் ஜிப்மரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் தனது முடிவில் இருந்து பின்வாங்கியது.

    இது குறித்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    18.9.2021 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ பதிவுகள் துறையால் ஒரு நோயாளியை பதிவு செய்யும் போது சிவப்பு ரேஷன்கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று எந்த வலியுறுத்தலும் இருக்காது. இது முற்றிலும் தன்னார்வமாக இருக்கும். இருப்பினும் நோயாளிகள் தங்கள் வசதிக்காக அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள இலவச சிகிச்சையானது தொடரும். வருமானத்தை பொருட்படுத்தாமல் அனைத்து நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் அதிகம் கூடினர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று வார இறுதிநாள் என்பதால் புதுச்சேரிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    கடற்கரை சாலை, பாண்டி மெரினா கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.

    நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் நேற்று காலை முதல் இதமான சூழல் நிலவியது. கடற்கரையில் தலைமை செயலகம், பழைய கோர்ட்டு முன்பு, பழைய துறைமுக பாலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மணல் பரப்பு உருவாகி உள்ளது. இந்த இடங்களிலும், பாண்டி மெரினா கடற்கரையிலும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    ஒயிட் டவுன் பகுதியில் பல இடங்களில் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகுகுழாமில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

    புதுச்சேரி காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் அதிகம் கூடினர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    பாகூர் பகுதியில் நேற்று ஒரே இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுவதாகும் தெரிவிக்கின்றனர்.

    பாகூர்:

    பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகலில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. பின்னர் இரவு 11.30 மணி அளவில் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    இந்த மழை சுமார் நள்ளிரவு 2.30 மணி வரை நீடித்தது இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள பகுதியிலும், தெருவிலும் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

    இந்த நிலையில் பாகூர் செல்லும் உயர்ரக மின்கம்பம் பழுது ஏற்பட்டதால் நேற்று மாலையில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலையில், நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.

    இதேபோன்று குருவி நத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சி குப்பம், சேலியமேடு, குடியிருப்பு பாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் இரவு முழுக்க தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    பொதுப்பணித்துறை கணக்கெடுப்பின்படி பாகூர் பகுதியில் நேற்று ஒரே இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுவதாகும் தெரிவிக்கின்றனர்.

    இந்த மழையின் காரணமாக தற்போது சித்தரை சம்பா சொர்ணவாரி பயிர் அறுவடை நிலையிலிருந்த நிலையில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் மழை நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

    பல இடங்களில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த நெல் பயிர்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இப்குதியில் முறையான வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருந்ததால் மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். சித்திரை சொர்ணவாரி பயிரில் ஐ.ஆர்.50, சின்னப்பொன்னி, எ.டி.டீ. 51, 45 ரக நெற்பயிர்கள் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

    திருக்கனூர் அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). விவசாயி. இவருக்கு பனிமலை என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் மாலை கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அவரை வி‌ஷபாம்பு கடித்து விட்டது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணமூர்த்தி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி பனிமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் டோல்கேட் அரவிந்த் நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (வயது22). இவர் பி.ஏ.பி.எட். படித்து விட்டு வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பத்துக்கு சென்றார். நோணாங்குப்பம் படகு குழாம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து மோகன்ராசை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மோகன்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்யவும் அ.தி.மு.க.வின் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவும் புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:-

    1. அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை.

    2. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.

    3. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்.

    4. புதுச்சேரி மாநில (கிழக்கு) மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன்.

    5. புதுச்சேரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர்.

    6. காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஓமலிங்கம்.

    அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு, புதுச்சேரி மாநிலம் (கிழக்கு), புதுச்சேரி (மேற்கு) மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி. மு.க. நிர்வாகிகளும், உடன் பிறப்புகளும் இணைந்து அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
    மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பந்த் போராட்டம் நடக்கிறது. புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியின் தொழிற்சங்கத்தினரும், பல்வேறு அமைப்புகளும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

    இதன்படி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், மாவட்ட, வட்டார அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியிருந்தனர். கூட்டணி கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு (எம்.எல்), விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றியிருந்தனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

    இன்று மாலை அண்ணாசிலை அருகே கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

    கருப்புக்கொடி போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கவில்லை. தி.மு.க. கட்சி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட வில்லை. ஏற்கனவே பந்த் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திலும் தி.மு.க.வினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×