search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    புதுவையில் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தக்க நேரம் பார்க்கிறது- ஏ.வி.சுப்ரமணியன்

    முதியோர் உதவித் தொகையை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவும், கொரோனா நிவாரணம் வழங்கவும் ஒப்புதல் கேட்டோம். அப்போதைய கவர்னர் எதற்கும் ஒப்புதல் தரவில்லை. காங்கிரஸ் திட்டங்களைத்தான் இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி செயல்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசின் வியூகம் என்ன? என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியனிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- சட்ட மன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளதா?

    பதில்:- புதுவை, காரைக்காலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியிட ஆர்வத்துடன் மனு வாங்கி செல்கின்றனர். இதுவரை சுமார் 500 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தலை சந்திக்க காங்கிரசும், காங்கிரசாரும் தயாராக உள்ளனர்.

    கே:- தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என காங்கிரசார் கருத்து தெரிவித்துள்ளார்களே?

    ப:- சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக காங்கிரசாரிடையே எண்ணம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசிலிருந்து 9 வேட்பாளர்கள் திடீரென வெளியேறிவிட்டனர். ஒருவர் போட்டியிட முன்வரவில்லை. இதனால்தான் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாற்று கட்சி மீது குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. ஆளும்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. வழக்கமாகவே ஆளும்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.

     

    காங்கிரஸ்

    தி.மு.க. ஆளும்கட்சியாக இல்லாததால் கெட்ட பெயர் இல்லை. பா.ஜனதாவினர் மூட்டை, மூட்டையாக பணத்தை கொண்டுவந்து தேர்தலை சந்தித்தனர். இதையும் காங்கிரசார் உணர்ந்துள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கு விளக்கி வருகிறோம்.

    கே:- சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யார் தலைமை என பிரச்சினை எழுந்தது? உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு யார் தலைமை?

    ப:- தலைமை என்பது முக்கியத்துவம் அல்ல. ஒருங்கிணைந்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். மதவாத சக்திகளை தடுக்க வேண்டியது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் கடமை. அதை உணர்ந்து செயல்படுவோம்.

    கே:- உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    ப:- ஆட்சியாளர்கள் பண பலத்துடன் உள்ளனர். பணபலம் உள்ள 3 கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால் தி.மு.க.வின் பலம் காங்கிரசுக்கு உள்ளது. பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. புதுவை உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

    கே:- என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து முதியார் உதவித்தொகை, கொரோனா நிவாரணம் வழங்கியுள்ளனர். இது ஆளும்கட்சிக்கு சாதகமாக இருக்காதா?

    ப:- முதியோர் உதவித் தொகையை காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தவும், கொரோனா நிவாரணம் வழங்கவும் ஒப்புதல் கேட்டோம். அப்போதைய கவர்னர் எதற்கும் ஒப்புதல் தரவில்லை. காங்கிரஸ் திட்டங்களைத்தான் இப்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி செயல்படுத்தியுள்ளது.

    இப்போது தமிழ் பேசும் கவர்னரை நியமித்து ஆட்சிக்கு சாதகமான செயல்பாடுகளை செய்கின்றனர். புதுவையில் தற்போதும் கவர்னர் மூலம் மறைமுகமாக பா.ஜனதா ஆட்சி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.

    ஏனெனில் பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்டு வெற்றி பெற மாட்டார்கள். அதற்கு பதிலாக ஆள் பிடிக்கும் வேலை, கவர்னர் மூலமாக அதிகாரத்தை கைப்பற்றுவதையே செய்வார்கள்.

    இந்த ஆட்சியிலும் இது தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் போராடினோம். இப்போதைய ஆட்சி கவர்னரிடம் சரணடைந்துள்ளது. ஓடு மீன் ஓட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு என்பதுபோல என்ஆர்.காங்கிரசை கவிழ்த்து ஆட்சியை கவிழ்த்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் தருணத்துக்கு காத்திருக்கிறது. இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி தான் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடை இல்லை- இளைஞர்கள் கொண்டாட்டம்

    Next Story
    ×