search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும்- நிர்வாகம் அறிவிப்பு

    பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடரும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மாத வருமானம் ரூ.2 ஆயிரத்து 499 வரை உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே இலவச சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக வருமானம் உடையவர்களும் வருமானம் குறைவாக இருப்பதாக வருவாய்த்துறையிடம் சான்றிதழ் பெற்று இலவச சிகிச்சையை பெற்று வருகின்றனர்.

    இத்தகைய சூழ்நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஜிப்மர் மருத்துவமனையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக நோயாளிகள் தங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க மாநில அரசுகள் வழங்கிய ரேஷன்கார்டுகளை (சிவப்பு கார்டு) கொண்டுவர வேண்டும். இதர வகையில் வருமானத்தை குறிக்கும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த உத்தரவு அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜிப்மரில் தற்போது உள்ள நிலை தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதே போல் அரசியல் கட்சியினரும் ஜிப்மரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் தனது முடிவில் இருந்து பின்வாங்கியது.

    இது குறித்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    18.9.2021 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ பதிவுகள் துறையால் ஒரு நோயாளியை பதிவு செய்யும் போது சிவப்பு ரேஷன்கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று எந்த வலியுறுத்தலும் இருக்காது. இது முற்றிலும் தன்னார்வமாக இருக்கும். இருப்பினும் நோயாளிகள் தங்கள் வசதிக்காக அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள இலவச சிகிச்சையானது தொடரும். வருமானத்தை பொருட்படுத்தாமல் அனைத்து நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×