search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதிய காட்சி.
    X
    சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதிய காட்சி.

    விடுமுறை தினத்தையொட்டி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    புதுச்சேரி காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் அதிகம் கூடினர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று வார இறுதிநாள் என்பதால் புதுச்சேரிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    கடற்கரை சாலை, பாண்டி மெரினா கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.

    நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் நேற்று காலை முதல் இதமான சூழல் நிலவியது. கடற்கரையில் தலைமை செயலகம், பழைய கோர்ட்டு முன்பு, பழைய துறைமுக பாலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மணல் பரப்பு உருவாகி உள்ளது. இந்த இடங்களிலும், பாண்டி மெரினா கடற்கரையிலும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    ஒயிட் டவுன் பகுதியில் பல இடங்களில் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகுகுழாமில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

    புதுச்சேரி காந்திவீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் அதிகம் கூடினர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    Next Story
    ×