என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry Accident"
- விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.
- கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தமிழகத்தை விட குறைந்த விலைக்கு மதுபானங்கள் கிடைப்பதால் கடலூர், விழுப்புரம், சென்னையை சேர்ந்த வாலிபர்கள் புதுவைக்கு வாரவிடுமுறையில் படையெடுத்து வருவார்கள். அவர்கள் அங்குள்ள கடற்கரையில் சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
புதுவை பாண்டிமெரீனா கடற்கரையிலிருந்து நேற்று மதியம் 2.15 மணிக்கு கருப்புநிற கார் வம்பா கீரப்பாளையம் அருகே ஒரு பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
அந்த பகுதி இளைஞர்கள் காரை துரத்தினர். கார் செஞ்சி சாலை, ரங்கப்பிள்ளை வீதி வழியாக மிஷன்வீதிக்குள் நுழைந்து அங்கிருந்து ஒருவழிப்பாதையான நேருவீதியில் திரும்பி ராஜா தியேட்டர் நோக்கி அதிவேகமாக சென்றது. போக்குவரத்து போலீசார் தடுத்தும் கார் நிற்காமல் சென்றது.
அப்போது எதிரில் வந்த 5 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி சென்றது. ஒரு மோட்டார் சைக்கிள் காரின் அடியில் சிக்கியது. அந்த மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே கார் அசுர வேகத்தில் சென்றது. காரைப் பார்த்து பொதுமக்கள் பலர் பதறியடித்து ஓடினர். பலர் சினிமா ஷூட்டிங் நடக்கிறது என நினைத்து நின்று வேடிக்கை பார்த்தனர்.
அப்போது கார் சாலையோர தடுப்பில் மோதியதால் காரின் இடதுபுற முன்சக்கர டயர் பஞ்சரானது. காரின் ரிம் தரையில் தேய்ந்து தீப்பொறி பறக்க கார் அண்ணாசாலையில் சென்றது. வளைவில் திரும்பிய போது காரில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது.
இதன்பின் அண்ணா சாலையில் 2 மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் சென்று இடையஞ்சாவடி சாலையில் நுழைந்தது.
அங்கும் சாலையோரம் நின்றிருந்த 5 பைக்குகளை இடித்து தள்ளி விட்டு சென்றது. போலீசார், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காரை துரத்தினர். சுமார் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளி கார் தாறுமாறாக சென்றது.
விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.
அப்போது பின்னால் விரட்டி சென்ற பொது மக்கள் காரை சூழ்ந்து நின்றனர்.
அந்த காரிலிருந்த 5 வாலிபர்களை காரில் இருந்து வெளியே இழுத்தனர். வாலிபர்கள் 5 பேரும் மித மிஞ்சிய மதுபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
சிறப்பு அதிரடிப்படை போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்தது சென்னை மேடவாக்கம் பள்ளிக்கரணையை சேர்ந்த சுனில்(30), உடன் இருந்தவர்கள் அவரின் நண்பர்களான ஸ்ரீநாத்(25), ஆஷிக்(21), மேடவாக்கம் விவேகானந்தர் நகர் திலீப்(27), சென்னை நன்னாங்குளம் எபிநேசர்(21) என தெரியவந்தது.
2 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர்கள் புதுவை மெரீனா கடற்கரையில் மது அருந்தி கும்மாளமிட்டுள்ளனர். மதியம் நகர பகுதிக்கு வந்து மதுபோதையுடன், கஞ்சா புகைத்ததால் போதை தலைக்கேறி காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. 5 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதை ஆசாமிகள் சினிமா சேஸிங் போல காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பகல் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஒரு மணி நேரம் நகர பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கார் அசுர வேகத்தில் பறந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இந்த சம்பவம் நடந்திருந்தால் நகர பகுதியில் பள்ளிகள் விட்டு நெரிசல் அதிகமாக இருந்திருக்கும்.
அப்போது காரை தாறுமாறாக ஓட்டியிருந்தால் பெரும் விபத்தும், அசம்பாவித சம்பவங்களும் நடந்திருக்கும். பிடிப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் மோதியதில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- சம்பவ இடத்திற்குவந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலையில் எந்நேரமும் மக்கள் கூட்டம் இருக்கும்.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருகைதந்து கடற்கரை அழகை ரசிப்பார்கள். மேலும் பலர் நடைபயிற்சியும் மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு கடற்கரை சாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர். இரவு 11:15 மணிக்கு டூப்ளக்ஸ் சிலையில் இருந்து போலீஸ் தடைகளை மீறி பைக் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது.
இந்த பைக் தாறுமாறாக ஓடி தலைமை செயலகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட பெண் மீது மோதியது.
பைக் மோதியதில் காயமடைந்த பெண், சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்குவந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் மரக்காணத்தைச் சேர்ந்த கார்த்திக் வேலு (வயது 28) என்பதும், நண்பர்களுடன் மதுகுடிக்க புதுச்சேரி வந்த இவர், போதையில் கடற்கரைச் சாலையில் பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
விபத்து ஏற்பட்ட போது கார்த்திக்வேலு பைக்கில் வைத்திருந்த முழு பிராந்தி பாட்டில் தரையில் விழுந்து உடைந்து கிடந்தது.
இந்த சம்பவத்தால் கடற்கரை சாலையில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.
- மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது52). இவர் மதகடிப்பட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
நேற்று இரவு இவர் மதகடிபட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் முகிலன்(37) என்பவருடன் காரில் வந்தார். காரை முகிலன் ஓட்டி வந்தார்.
இதுபோல் சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன்(57). இவர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏஞ்சல் (50) என்ற மனைவி உள்ளார். இவர்களது உறவினர் விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்ப்பதற்காக பிரபாகரன் தனது மனைவி ஏஞ்சல் மற்றும் உறவினர் மகள் சிந்து (12) ஆகியோருடன் ரெயிலில் விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை பானாம்பட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரன் (38) என்பவர் ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 11.30 மணியளவில் மதகடிபட்டு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது இவர்களது காரும், முகிலன் ஓட்டி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கதிரவன் மற்றும் அவரது நண்பர் முகிலன் மற்றொரு கார் டிரைவர் சந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
பிரபாகரன், அவரது மனைவி ஏஞ்சல் மற்றும் சிறுமி சிந்து ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக முண்டியப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






