search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுபோதையில் 7 கி.மீ. தூரம் காரை தாறுமாறாக ஓட்டி சென்ற சென்னை வாலிபர்கள்
    X

    மதுபோதையில் 7 கி.மீ. தூரம் காரை தாறுமாறாக ஓட்டி சென்ற சென்னை வாலிபர்கள்

    • விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.
    • கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழகத்தை விட குறைந்த விலைக்கு மதுபானங்கள் கிடைப்பதால் கடலூர், விழுப்புரம், சென்னையை சேர்ந்த வாலிபர்கள் புதுவைக்கு வாரவிடுமுறையில் படையெடுத்து வருவார்கள். அவர்கள் அங்குள்ள கடற்கரையில் சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    புதுவை பாண்டிமெரீனா கடற்கரையிலிருந்து நேற்று மதியம் 2.15 மணிக்கு கருப்புநிற கார் வம்பா கீரப்பாளையம் அருகே ஒரு பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    அந்த பகுதி இளைஞர்கள் காரை துரத்தினர். கார் செஞ்சி சாலை, ரங்கப்பிள்ளை வீதி வழியாக மிஷன்வீதிக்குள் நுழைந்து அங்கிருந்து ஒருவழிப்பாதையான நேருவீதியில் திரும்பி ராஜா தியேட்டர் நோக்கி அதிவேகமாக சென்றது. போக்குவரத்து போலீசார் தடுத்தும் கார் நிற்காமல் சென்றது.

    அப்போது எதிரில் வந்த 5 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி சென்றது. ஒரு மோட்டார் சைக்கிள் காரின் அடியில் சிக்கியது. அந்த மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே கார் அசுர வேகத்தில் சென்றது. காரைப் பார்த்து பொதுமக்கள் பலர் பதறியடித்து ஓடினர். பலர் சினிமா ஷூட்டிங் நடக்கிறது என நினைத்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

    அப்போது கார் சாலையோர தடுப்பில் மோதியதால் காரின் இடதுபுற முன்சக்கர டயர் பஞ்சரானது. காரின் ரிம் தரையில் தேய்ந்து தீப்பொறி பறக்க கார் அண்ணாசாலையில் சென்றது. வளைவில் திரும்பிய போது காரில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது.

    இதன்பின் அண்ணா சாலையில் 2 மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் சென்று இடையஞ்சாவடி சாலையில் நுழைந்தது.

    அங்கும் சாலையோரம் நின்றிருந்த 5 பைக்குகளை இடித்து தள்ளி விட்டு சென்றது. போலீசார், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காரை துரத்தினர். சுமார் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளி கார் தாறுமாறாக சென்றது.

    விமான நிலையம் நோக்கி சென்ற கார் நரிக்குறவர் குடியிருப்பு அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் அங்கிருந்து நகர முடியாமல் நின்றது.

    அப்போது பின்னால் விரட்டி சென்ற பொது மக்கள் காரை சூழ்ந்து நின்றனர்.

    அந்த காரிலிருந்த 5 வாலிபர்களை காரில் இருந்து வெளியே இழுத்தனர். வாலிபர்கள் 5 பேரும் மித மிஞ்சிய மதுபோதையில் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    சிறப்பு அதிரடிப்படை போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், காரை ஓட்டி வந்தது சென்னை மேடவாக்கம் பள்ளிக்கரணையை சேர்ந்த சுனில்(30), உடன் இருந்தவர்கள் அவரின் நண்பர்களான ஸ்ரீநாத்(25), ஆஷிக்(21), மேடவாக்கம் விவேகானந்தர் நகர் திலீப்(27), சென்னை நன்னாங்குளம் எபிநேசர்(21) என தெரியவந்தது.

    2 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர்கள் புதுவை மெரீனா கடற்கரையில் மது அருந்தி கும்மாளமிட்டுள்ளனர். மதியம் நகர பகுதிக்கு வந்து மதுபோதையுடன், கஞ்சா புகைத்ததால் போதை தலைக்கேறி காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. 5 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கார் மோதி காயமடைந்த பாலமுருகன், சக்திவேல், காயத்ரி ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    போதை ஆசாமிகள் சினிமா சேஸிங் போல காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பகல் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஒரு மணி நேரம் நகர பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    கார் அசுர வேகத்தில் பறந்தது. இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இந்த சம்பவம் நடந்திருந்தால் நகர பகுதியில் பள்ளிகள் விட்டு நெரிசல் அதிகமாக இருந்திருக்கும்.

    அப்போது காரை தாறுமாறாக ஓட்டியிருந்தால் பெரும் விபத்தும், அசம்பாவித சம்பவங்களும் நடந்திருக்கும். பிடிப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×