என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவர்களுக்கிடையே மீண்டும் நடுக்கடலில் மோதல் ஏற்படாமல் இருக்க கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே கடலுக்குள் மோதல் ஏற்பட்டது. நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் செயல்பட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மோதலை தடுத்தனர். இதனை தொடர்ந்து 3 மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை, அரியாங்குப்பம், தவளக்குப்பம் போலீசார் 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், நமச்சிவாயம் தலைமையில் 3 மீனவ கிராம பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, 3 மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே மோதல் வழக்கில் தொடர்புடைய மீனவர்கள் சிலர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதில் நேற்று 30 பேருக்கு கோர்ட்டு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் பலரின் முன்ஜாமீன் மனு விசாரணையில் உள்ளது.

    இதற்கிடையே தற்போது மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். எனவே மீண்டும் நடுக்கடலில் மோதல் ஏற்படாமல் இருக்க கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஜிப்மருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். ஏனென்றால் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாகும்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினமும் 8 ஆயிரம் வெளி நோயாளிகள், 2 ஆயிரம் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சிவப்பு ரே‌ஷன்கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜிப்மரில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவமனையில் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரத்து 499 வரை ஊதியம் பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜிப்மருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். ஏனென்றால் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாகும்.

    இந்த நிலையில்,  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரே‌ஷன் கார்டு (சிவப்பு அட்டை) வைத்திருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் ஜிப்மரில் இலவசமாக வெளிப்புற, உட்புற சிகிச்சை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    சிவப்பு ரே‌ஷன்கார்டு

    எனவே சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரே‌ஷன் கார்டை கொண்டு வர வேண்டும்.

    வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். அதன் பிறகு வேறு எந்த வருமான சான்றிதழும் ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


    திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இந்திரஜித் என்ற இப்ராகிம் (வயது 46), அவரது நண்பர்கள் நேரு (45), செல்வம் (44) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கோர்ட்டு விசாரணையின் போது ஆஜராகாமல் இந்திரஜித் தலைமறைவானார். தொடர்ந்து வழக்கை காரைக்கால் மாவட்ட கோர்ட்டு விசாரித்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து குற்றவாளிகள் நேரு, செல்வம் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

    ஆனால் இந்திரஜித் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்பேரில் காரைக்கால் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்திரஜித் மன்னார்குடியில் இரும்புக் கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மன்னார்குடி சென்று இந்திரஜித்தை கைது செய்தனர். பின்னர் அவர் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    வயதான முதியவர்கள் பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களது ஆர்வத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் திட்டத்துடன் இணைந்து புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் துர்கா நகரில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, உலக அளவில் நடந்த ஆய்வு ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அக்டோபர் 2-ந்தேதிக்கு முன்பாக 100 சதவீத தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாற்ற மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் 200-வது நபராக 85 வயது அஞ்சலையம்மாள் என்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்தினார். மேலும் வயதான முதியவர்கள் பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களது ஆர்வத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டினார். நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் திட்டத்தின் தலைவர் ஆதவன், மாநில அலுவலக செயலர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஏற்பாடு செய்த நோயாளிகள் பாதுகாப்பு வார விழாவில் கலந்துகொண்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 3-ம் ஆண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    மக்கள் மனதில் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்த எண்ணம் ஆழமாக பதிந்துள்ளது. அதனைபோக்கும் விதமாக மருந்துகளின் சரியான அளவு, அவற்றின் பக்கவிளைவுகள் குறித்து மருந்து வழங்கும்போதே தெளிவுபடுத்த வேண்டும். நோயாளிகளின் வயது வரம்பு மற்றும் நோயின் தாக்கத்தை பொறுத்து துல்லியமான அளவுகளில் மருந்து வழங்கப்பட வேண்டும்.

    நோயாளிகளுக்கு அவரது நோயின் தாக்கம் மற்றும் மருந்தின் விளைவுகள் பற்றி சிறிது நேரம் ஒதுக்கி விளக்கவேண்டும். டாக்டர்களும், நர்சுகளும் மருந்துகளை பற்றிய அறிவை தொடர்ந்து சேகரித்துக்கொள்ள வேண்டும். ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் பதிவு செய்ய சுகாதாரத்துறை உரிய முயற்சி எடுக்கவேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
    புதுச்சேரி- நாகர்கோவில் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காரைக்கால், மாகி, ஏனாம், குமுளி, நாகர்கோவில், பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ் கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம், வேப்பூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது. புதுவையில் உள்ள மக்கள் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்வதற்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

    கொரோனா பரவல் காரணமாக வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நோய் தாக்கம் தற்போது குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, காரைக்கால், குமுளி ஆகிய ஊர்களுக்கு மட்டும் பஸ்கள் இயங்கப்படுகிறது. நாகர்கோவில், மாகிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் இருந்து தென்தமிழகத்திற்கு நேரடி பஸ் போக்குவரத்து இல்லை.

    புதுச்சேரி, கடலூர் பகுதியில் வசிக்கும் தென் தமிழக மக்கள் விழுப்புரம் சென்று அங்கிருந்து பஸ் ஏறி சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் இருந்து வரும் பஸ்கள் பெரும்பாலும் இருக்கைகள் முழுவதும் நிரம்பி தான் வருகிறது. பல பஸ்கள் விழுப்புரம் உள்ளே வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.

    புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் கூட இன்னும் இயக்கப்படவில்லை. எனவே புதுச்சேரி பகுதியை சேர்ந்த மக்கள் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல வேண்டும் என்றால் விழுப்புரம், திருச்சி, மதுரை போன்ற ஒவ்வொரு ஊராக மாறி, மாறி செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு செல்பவர்கள், முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனவே புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

    இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார். 

    அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும், 3ம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெடட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 
    டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. எனவே வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கவிடாமல் தூய்மையாக பராமரிக்கவேண்டும்.
    காரைக்கால்:

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், நோய் கட்டுப்பாட்டு திட்ட மலேரியா பிரிவு இயக்குனர் கணேஷ் ஆகியோர் டெங்கு கொசு மற்றும் லார்வா புழுக்களை ஒழிக்க நலவழித்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் காரைக்கால் மாவட்ட நலவழித்துறை தொழில்நுட்ப உதவியாளர் சேகர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேலு, உதவியாளர்கள் ராஜாராம், மதிவாணன், ஜெயச்சந்திரன், வெங்கட்ராமன், சேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், பொது இடம், கட்டுமான பணிகள் நடக்கும் இடம், அரசு கட்டிடங்கள் ஆகிய இடங்களில் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. எனவே வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கவிடாமல் தூய்மையாக பராமரிக்கவேண்டும், காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி மற்றும் வாந்தி, உடல் சோர்வு இருந்தால், சுயமாக மருத்து எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    தவளக்குப்பம் அருகே நடந்த விவசாயி படுகொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் உடையார் தெருவை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன் (வயது 51). விவசாயி. இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். அனந்தராமனுக்கு அப்பகுதியில் உள்ள இருளர்குடியிருப்பு கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

    நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் அனந்தராமன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அனந்தராமனை சரமாரியாக கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதை அறிந்த அனந்தராமனின் உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டு, கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக அனந்தராமனின் மனைவி தனபாக்கியம் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது கணவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், பணத்தை தர மறுத்து எங்களிடம் தகராறு செய்து கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், டி.என்.பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சண்முகம் (22), சிவஞானம் மகன் சதீஷ் (21) ஆகியோர் அனந்தராமனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் விசாரணைக்காக அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர். கொலை செய்தது ஏன்?, இதற்கு பின்னால் யாராவது இருக்கிறார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பா.ஜ.க.வுக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர்.

    இந்த சூழலில் புதுவையில் இருக்கும் ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு இன்று நிறைவடைகிறது.

    ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் இடையில் மாநிலங்களவை எம்.பியை பெறுவதில் போட்டி நிலவியது. இரு  கட்சிகளும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக பா.ஜ.க.வின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்படி புதுச்சேரி பா.ஜ.க. பொருளாளராக உள்ள செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
    புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், 10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.ராமஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் புதுவையில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான, வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலானது, வாக்காளர் பதிவு அதிகாரிகளால் நகராட்சி வார்டுகள் வாரியாகவும், கிராம பஞ்சாயத்து வார்டுகள் வாரியாகவும் பிரிக்கப்பட்டு பொதுமக்களின் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை பெறுவதற்காக கடந்த 21.6.2021 முதல் 27.6.2021 வரை அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.

    இவ்வாறு பெறப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆராய்ந்து பின்னர் களஆய்வு செய்தனர். அதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்கள் செய்து பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 ஆண்களும், 5 லட்சத்து 30 ஆயிரத்து 936 பெண்களும், 117 பேர் திருநங்கைகளும் ஆவர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4 பிராந்தியங்களில் புதுச்சேரி மண்டலத்தில் அதிக எண்ணிக்கையாக (2 நகராட்சிகள் மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்துகள்) 7லட்சத்து 72 ஆயிரத்து 753 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்காலில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 556 வாக்காளர்களும், ஏனாமில் 37 ஆயிரத்து 817 வாக்காளர்களும், மாகியில் 31 ஆயிரத்து 139 வாக்காளர்களும் உள்ளனர்.

    இந்த வார்டு வாரியான வாக்காளர் பட்டியலானது வாக்காளர்களின் இறப்பு, இடமாற்றம், பிற மாநிலங்களுக்கு குடியேறுதல், விடுபட்ட மற்றும் இருமுறை பதியப்பட்ட வாக்காளர்கள் ஆகியவை நீக்கிய பின் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலுக்கும் தற்போது தயாரிக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலுக்கும் எண்ணிக்கையில் 940 குறைவாக உள்ளது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரியில் மொத்தம் 6 லட்சத்து 59 ஆயிரத்து 716 வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 182 பேர் வாக்களித்தனர். இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தின் இணைய தளமான https://sec.py.gov.in/ ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதன் மூலம் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து கொள்வதோடு தங்களின் வார்டு மற்றும் வாக்குச்சாவடி பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

    புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன்களில் உள்ள 1149 பதவிகளுக்கும் (5 நகராட்சி சேர்மன் பதவிகள்) 116 நகராட்சி கவுன்சிலர் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 108 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர்கள், 108 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் 812 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    பட்டாசுகளை பற்ற வைக்கும் திரி தயாரித்து உலர வைக்கும் பணியில் குருவிநத்தம் கிராம மக்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    பாகூர்:

    தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு வகைகள் தான். இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 4 தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பட்டாசு ஆலைகள், ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் தங்களது தயாரிப்புகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

    புதுவை மாநிலம் பாகூர் அருகே குருவிநத்தம் கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு குடிசை தொழிலாக காலம் காலமாக நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கி வந்து, பட்டாசு தயாரிக்கப்படுகிறது. பட்டாசுகளை பற்ற வைக்கும் திரி தயாரித்து உலர வைக்கும் பணியில் கிராம மக்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த திரி பட்டாசுகளில் இணைத்து விற்பனைக்காக பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.
    வில்லியனூர் அருகே திருமண மண்டப காவலாளி மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை அருகே தைலா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது55). இவரது முதல் மனைவி மாலதி இறந்து விட்டதால் 2-வதாக விஜயகுமாரி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக சுப்பிரமணி தனது 2-வது மனைவி மற்றும் மகள்களுடன் கூடப்பாக்கம் குளத்துமேட்டுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுப்பிரமணி வழுதாவூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் சுப்பிரமணிய திடீரென மயங்கி பேச்சுமூச்சின்றி கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்த அவரது மனைவி விஜயகுமாரி அருகில் உள்ள தனது சகோதரர் ராஜாவுக்கு போன் செய்து ஆம்புலன்சை வரவழைத்து கணவரை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியின் மனைவி விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×