search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்"

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு ஜூன் வரை பதவியில் இருந்தனர். அதன் பிறகு புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு புதுவை மாநில தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்தலட்சுமி என்பவர் பிறபடுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தும் தேர்தல் நடைபெறாமல் போனது.

    இதற்கிடையே புதுவை அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசிடம் தருமாறு கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு மக்கள் தொகை விவரத்தை வழங்கவில்லை இதனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் 7 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை அரசுக்கு உத்தரவிடுமாறு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு 4 வார காலத்துக்குள் பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து தேர்தலை நடத்தி வெற்றி பெற்றோர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழல் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் இன்று தலைமை செயலகத்தில் உள்ள 4-வது மாடி கருத்தரங்கு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில், உள்ளாட்சிதுறை செயலர் ஜவகர், இயக்குனர் மலர்க்கண்ணன், சட்டத்துறை சார்பு செயலர் முருகவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் உத்தரவுகளை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். #tamilnews
    ×