search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் முன்னிலையில் முதியவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
    X
    கவர்னர் முன்னிலையில் முதியவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

    கொரோனா தடுப்பூசிபோட முதியவர்கள் ஆர்வம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

    வயதான முதியவர்கள் பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களது ஆர்வத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் திட்டத்துடன் இணைந்து புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் துர்கா நகரில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, உலக அளவில் நடந்த ஆய்வு ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அக்டோபர் 2-ந்தேதிக்கு முன்பாக 100 சதவீத தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாற்ற மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் 200-வது நபராக 85 வயது அஞ்சலையம்மாள் என்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்தினார். மேலும் வயதான முதியவர்கள் பலரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களது ஆர்வத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டினார். நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் திட்டத்தின் தலைவர் ஆதவன், மாநில அலுவலக செயலர் சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஏற்பாடு செய்த நோயாளிகள் பாதுகாப்பு வார விழாவில் கலந்துகொண்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 3-ம் ஆண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    மக்கள் மனதில் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்த எண்ணம் ஆழமாக பதிந்துள்ளது. அதனைபோக்கும் விதமாக மருந்துகளின் சரியான அளவு, அவற்றின் பக்கவிளைவுகள் குறித்து மருந்து வழங்கும்போதே தெளிவுபடுத்த வேண்டும். நோயாளிகளின் வயது வரம்பு மற்றும் நோயின் தாக்கத்தை பொறுத்து துல்லியமான அளவுகளில் மருந்து வழங்கப்பட வேண்டும்.

    நோயாளிகளுக்கு அவரது நோயின் தாக்கம் மற்றும் மருந்தின் விளைவுகள் பற்றி சிறிது நேரம் ஒதுக்கி விளக்கவேண்டும். டாக்டர்களும், நர்சுகளும் மருந்துகளை பற்றிய அறிவை தொடர்ந்து சேகரித்துக்கொள்ள வேண்டும். ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் பதிவு செய்ய சுகாதாரத்துறை உரிய முயற்சி எடுக்கவேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
    Next Story
    ×