என் மலர்
புதுச்சேரி
புதுவை பெரிய காலாபட்டு சோலை வீதியை சேர்ந்தவர் அருள் (வயது39). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது நண்பர் லியோ பிரபுடன் அங்குள்ள பங்களா தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியக்காலாப்பட்டு பெருமாள்நகரை சேர்ந்த புகழேந்தி (25) என்பவர் அங்கு வந்தார். அவரிடம் அருள் வேலைக்கு செல்லவில்லையா என்று கேட்டார்.
அதற்கு புகழேந்தி நீ யார்? என்னை கேட்பது என்று கேள்வி கேட்டு தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் புகழேந்தியை அருள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரையும் லியோபிரபு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அருள் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். மாத்தூர் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த புகழேந்தி திடீரென அருளை வழிமறித்து என்னிடம் பிரச்சினை செய்கிறாயா? எனக்கூறி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார்.
மேலும் இனிமேல் என்னிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அருளை அவருடன் வேலை பார்க்கும் சின்னப்பதுரை மற்றும் அருளின் சகோதரர் ஆறுமுகம் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அருள் நடந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து புகழேந்தியை தேடி வருகிறார்கள்.
நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் கமுதி. இவரது மகன் கலைவேலு (25). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவு கலைவேலு தனது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த விக்னேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி கலைவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த கலைவேலு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து கலைவேலுவின் தந்தை கமுதி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை ஏம்பலம் அருகே உள்ள தமிழக பகுதியான தெண்ணம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிமாறன். டிப்ளமோ எலக்ட்ரானிக் என்ஜினீயர்.
இவர் பூகம்பம் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்கூட்டியே அதனை கண்டுபிடித்து எச்சரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். அதற்கு எர்த் குவாக் சென்சார் என பெயர் வைத்துள்ளார்.
15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இந்த நவீன கருவியை உருவாக்கியுள்ளார். இந்த கருவியில் 2 லட்சம் கோடிங் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு கருவிகள், தானியங்கி கருவிகள் ஆகியவையும் உள்ளது. இந்த கருவியை வைத்து பூகம்பம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து எச்சரிக்க முடியும்.
இந்த கருவியின் மூலம் பூமிக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும். பூகம்பம் மட்டுமல்லாமல் இந்த கருவி உள்ள இடத்திலிருந்து 150 கிலோ மீட்டர் வரை ஈரப்பதம், வெப்பநிலை, பருவநிலை மாற்றம், காற்றின் தன்மை உள்ளிட்டவைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
எர்த் குவாக் கருவி, அதன் செயல்பாடுகள் குறித்து மத்திய அரக்கும், தமிழக அரசுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறேன். இத்தாலி உள்ளிட்ட அயல் நாடுகளில் கருவி பற்றி விளக்க என்னை நேரில் வந்து செய்து காட்டும்படியும் கேட்டிருக்கிறார்கள்.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு போதிய வரவேற்பு நமது நாட்டில் இல்லை. கருவியை ஆய்வுக்கு உட்படுத்தி பயன்படுத்தினால் இயற்கை சீற்றங்களை முன்னரே தெரிந்து பேரழிவை தடுக்க முடியும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்
பெங்களூர் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ராஜன் உதவி செய்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் படியே இந்த கருவியை உருவாக்கி உள்ளேன்.
இவ்வாறு மணிமாறன் தெரிவித்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர் அனந்தபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் ராமதாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (வயது40). நேற்று முன்தினம் ராமதாஸ் சவுக்கு மிளா ஏற்றுவதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்தார்.
இரவு வீட்டில் இந்திராவும், அவரது மகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். காற்றுக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தனர்.
நள்ளிரவு திடீரென வீட்டில் இருந்து சத்தம் கேட்கவே இந்திரா எழுந்து சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின்வாசல் வழியாக ஒரு மர்மநபர் ஓடினார். உடனே சந்தேகமடைந்த இந்திரா வீட்டின் அறைக்கு சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் நகையை காணவில்லை. மர்மநபர் வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததை நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். இதன் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து இந்திரா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 57 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 86 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 158 பேர், வீடுகளில் 761 பேர் என 919 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 129 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுவை ராஜா நகரை சேர்ந்த 68 வயது மூதாட்டி பலியானார். இவரை சேர்த்து பலி எண்ணிக்கை 1,828 ஆனது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 100-க்கு மேல் இருந்தது. பலியும் அதிகரித்த நிலையில் நேற்று தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழ் வந்தது.
புதுவையில் கொரோனா பாதிப்பு 1.70 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 4 பேர், பொதுமக்கள் 1,601 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 88 ஆயிரத்து 894 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் ஒரு பியூட்டி பார்லர் கடந்த சில மாதங்களாக இயங்கி வந்தது. இந்த பியூட்டி பார்லரில் மசாஜ் சென்டரும் (ஸ்பா) செயல்பட்டு வந்தது.
இந்த மசாஜ் சென்டருக்கு அடிக்கடி வெளியூர்களில் இருந்து டிப்-டாப் உடை அணிந்த ஆண்களும், பெண்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
இதனால் அங்கு விபசாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உருளையன் பேட்டை போலீசாருக்கும் புகார் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையில் போலீசார் ரகசியமாக அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று உருளையன் பேட்டை போலீசார் மாறு வேடத்தில் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று அங்கிருந்த வரவேற்பாளர் பெண்ணிடம் இங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என கேட்டனர்.அதற்கு அந்த பெண் மஜாஜ் மற்றும் விபசாரம் நடப்பதாக கூறினார்.அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் மஜாஜ் சென்டருக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ஒரு அறையில் ஒரு வாலிபர் இளம்பெண் ஒருவருடன் அறைகுறை ஆடையுடன் இருப்பதை போலீசார் கண்டனர்.
உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மசாஜ் சென்டரில் வெளியூர் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் மசாஜ் சென்டரை முருங்கப்பாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் நடத்தி வந்ததும், இந்த மசாஜ் சென்டரில் வரவேற்பாளராக விக்கிரவாண்டி அருகே குராம்பாளையத்தை சேர்ந்த கனி என்ற கிரிஜா (29) என்பவர் இருந்து வாடிக்கையாளர்களை வரவழைத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்கள் மற்றும் வாடிக்கையாளரான கடலூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 இளம்பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் கோபால கிருஷ்ணன் மற்றும் கனி என்ற கிரிஜாவை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்திய அதன் உரிமையாளர் தினேசை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 36). திருமணமாகாத இவர் டிரைவர் வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக வேலை சரியாக இல்லாததால் மகேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
மகேசுக்கு தவளக்குப்பம் வி.ஐ.பி. கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் மகேஷ் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மகேஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீடு பூட்டி இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் கழிவறை பகுதியில் மகேஷ் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
குடிபோதையில் அவர் தவறி விழுந்ததால் இறந்து போய் இருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து அவரது சகோதரர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை தேங்காய்திட்டு கோமல் நகர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 26). இவர் பி.பி.ஏ. படித்து விட்டு எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் விக்னேசை விரும்பவில்லை என தெரிகிறது. எனினும் விக்னேஷ் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே விக்னேஷ் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் விக்னேஷ் விரக்தியில் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை பாராளுமன்ற மேலவை எம்.பி. கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த காலி இடத்துக்கு புதிய எம்.பி.யை தேர்ந்தெடுக்க அக்டோபர் மாதம் 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் சென்னையை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று புதுவைக்கு வந்து சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் புதுவையை சேர்ந்த ஆனந்தன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர்களை எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பத்மராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 1986-ம் ஆண்டு முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். இப்போது 221-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் உள்ளிட்டவர்களையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஜனாதிபதி, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளேன். சில நேரங்களில் 8 தொகுதிகளில் போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.






