என் மலர்
புதுச்சேரி
புதுவை காமராஜர் சாலையில் ஒரு ஓட்டல் விடுதியில் கடந்த 13-ந் தேதி ஒரு வாலிபர் காஞ்சிபுரத்தை அடுத்து சோழிங்கநல்லூர் கோவிந்தநாயக்கர் வீதி 3-வது குறுக்கு தெரு ரகுநந்தன் (வயது39) என்ற முகவரியை கொடுத்து தங்கினார்.
அவருக்கு விடுதி ஊழியர் லெனின் உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு ரகுநந்தன் பழம் வாங்கி வருமாறு விடுதி ஊழியர் லெனினிடம் கூறியதையடுத்து அவர் பழங்களை வாங்கி வந்து ரகுநந்தனிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி வரை ரகுநந்தன் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி மானேஜர் சண்முகம் மற்றும் ஊழியர் லெனின் ஆகியோர் ரகுநந்தன் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது தரையில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் தலையில் ரத்த காயங்களுடன் ரகுநந்தன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிக குடிபோதையில் ரகுநந்தன் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா மற்றும் மாத்ரு வந்தனா சப்தா நிறைவு விழா மங்கலம் தொகுதி வடமங்கலத்தில்தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பார்வையிட்டார். போட்டியில் தேர்வான ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-
குடும்பத்தின் ஆரோக்கியம் பெண்களின் கையில் தான் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால் தான் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய்கள் வருகிறது. பெரும்பாலான பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சத்து குறைவு நோய் உள்ளதாக இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு காரணம் மார்க்கெட்டில் உள்ள கலப்பட பொருட்கள் தான். பெண்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே பயிரிட்டு சாப்பிட முடியும். இதை செய்தால் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு அரசு சார்பில் விதைகளும், செடிகளும் வழங்கப்படுகிறது. அரசின் சலுகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்குமாறு தாய்மார்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மகளிர் மேம்பாட்டு துறை செயலர் உதயகுமார், இயக்குனர் அசோகன் மற்றும் திட்ட அதிகாரி ரத்னா, டாக்டர் பிரேமா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர் அனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது37). இவர் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
தற்போது கொரோனா காரணமாக வேலை இல்லாமல் ராஜா வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் சிவராந்தகத்தில் உள்ள ஒரு மதுக்கடைக்கு மதுக்குடிக்க சென்றார். அங்கு ஏற்கனவே ராஜாவின் நண்பரான அன்பு மற்றும் செந்தில் ஆகியோர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அன்பு அழைக்கவே ராஜா அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் செந்தில் சிகரெட்டை பிடித்து ராஜாவின் முகத்தில் ஊதினார். இதையடுத்து ராஜா வயது வித்தியாசம் இல்லாமல் என் முகத்தில் ஏன் சிகரெட்டை பிடித்து ஊதுகிறாய் என கேட்டார்.
அப்போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அன்பு இருவரையும் சமாதானம் செய்தார். இதைத்தொடர்ந்து ராஜாவிடம் அன்பு பீர் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு தன்னிடம் இப்போது காசு இல்லை என்று ராஜா தெரிவித்தார்.
அப்போது செந்தில் குறுக்கிட்டு இவனிடம் ஏன் பீர் கேட்கிறாய் என கூறி ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் இப்போதுதான் ஜெயில் இருந்து வந்துள்ளேன் என்னிடம் மோதினால் நடப்பதே வேறு என்று கூறி அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராஜாவின் தலையில் குத்தினார். மேலும் கையிலும் பீர் பாட்டில் குத்து விழுந்தது.
உடனே ராஜா அலறல் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் ஒன்று திரளவே செந்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாவை அவரது நண்பர் அன்பு மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் வி.மணவெளி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா. இவர் நெல்லித்தோப்பில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் விழுப்புரம் அருகே ஆயந்தூரை சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.
அடிக்கடி சுதா நடத்தையில் சந்தேக்கப்பட்டு ராஜா பிரச்சனை செய்து வந்ததால் அவரை விட்டு பிரிந்து சுதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மகன்களை விடுதியில் சேர்த்து விட்டார்.
அதன் பிறகு 2013-ல் கொம்பாக்கத்தை சேர்ந்த பரதன் என்பவரை சுதா 2-வது திருமணம் செய்தார். இருவரது சம்மதத்துடன் மூத்த மகன் சூர்யா (19) இளையமகன் ஸ்ரீராம் தங்கள் வீட்டிலேயே வளர்த்து வந்தனர். இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த விபத்தில் சூர்யாவுக்கு தலையில் அடிப்பட்டதால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் விபத்து நடந்தது முதல் அடிக்கடி கோபம் கொள்வார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சூர்யா வேலைக்கு செல்லாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது தாய் சுதா கண்டித்தார். இதனால் மனமுடைந்த சூர்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
உடனே சுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சூர்யாவை தூக்கில் இருந்து மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சூர்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று நள்ளிரவு சூர்யா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 345 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 87, காரைக்காலில் 29, ஏனாமில் 4, மாகியில் 4 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 108, காரைக்காலில் 31, ஏனாமில் 12, மாகியில் 19 பேர் என 170 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 52, காரைக்காலில் 23, மாகியில் 5 பேர் என 80 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 338 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 467, காரைக்காலில் 184, ஏனாமில் 18, மாகியில் 61 பேர் என 730 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 900 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவையில் 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 8 லட்சத்து 77 ஆயிரத்து 120 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் பலியும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி. ஓவிய கலையில் பட்டம் பெற்றவர்.
இவர், தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவங்களை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி வருகிறார்.
ஏற்கனவே, மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம், முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதர் தெரேசா ஆகியோரின் உருவங்களை ரங்கோலியாக வரைந்துள்ளார்.
இந்த நிலையில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அறிவழகி 7 கிலோ கோல மாவை கொண்டு 10 அடியில் அண்ணாவின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.
6 மணி நேரத்தில் இதை உருவாக்கியுள்ளார். இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் அறிவழகிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டன. இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததால் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருநாள்விட்டு ஒருநாள் என வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் மதியம் வரை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் தவறாமல் வந்து செல்கின்றனர். இதுவரை பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் கரையாம்புத்தூர் பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற வகையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இதற்கிடையே தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் மற்ற வகுப்புகளை தொடங்கலாமா? என்று கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் ஒருசிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்றே கூறியுள்ளனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளை தற்போதைக்கு திறக்கவேண்டாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை சூடு பிடித்துள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 10ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிதி நிறுவனம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி அந்த தொகையை வசூல் செய்வது வழக்கம்.
இந்த நிதி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரபா மானேஜராக உள்ளார். மேலும் உதவி மேலாளராக ஷேமளா உள்பட 8 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிதி நிறுவனம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
கடந்த 8-ந் தேதி முதல் நிதி நிறுவன மேலாளர் ஜெயபிரபா விடுமுறையில் இருந்து வந்தார். இதனால் உதவி மேலாளர் ஷேமளா நிர்வாக பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.
கடந்த 9-ந் தேதி மற்றும் 11-ந் தேதி வசூலான ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்து 750-ஐ அன்று இரவு உதவி மேலாளர் ஷேமளா நிதி நிறுவன அலுவலக லாக்கரில் வைத்துபூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் திறக்கப்படவில்லை.
நேற்று காலை உதவி மேலாளர் ஷேமளா மற்றும் துப்புரவு பணியாளர் சத்யா ஆகியோர் நிதி நிறுவனத்தை திறக்க வந்தனர். அப்போது நிதி நிறுவன முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த மொத்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர். மேலும் நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகும் புட்டேஜ் பாக்சையும் காணவில்லை.
மர்மநபர்கள் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு நிதி நிறுவன பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தை கண்டுபிடிக்காமல் இருக்க அவர்கள் சி.சி.டி.வி. கேமரா புட்டேஜ் பாக்சையும் எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் ஜெயபிரபா கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எந்த நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் மர்மநபர்கள் துணிகரமாக நிதி நிறுவன பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் மதிப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் 221 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 172 உதவியாளர்கள் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணிநிரந்தரம் செய்யப்பட்ட 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு அலுவலக குறிப்பாணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு குறிப்பாணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், சிவசங்கர், சமூக நலத்துறை செயலாளர் உதயகுமார், மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பணிநிரந்தரம் செய்யப்பட்ட 221 ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.48 லட்சத்து 41 ஆயிரத்து 668-ம், 172 ஊழியர்களுக்கு ரூ.34 லட்சத்து 31 ஆயிரத்து 744 என மொத்தம் ரூ.82 லட்சத்து 73 ஆயிரத்து 412 வழங்கப்பட உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான், ஒடிசா கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.






