search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெட்டப்பாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 வீடுகள்

    நெட்டப்பாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் அருகே நத்தமேடு கிராமத்தில் இலுப்பை தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த சின்னசாமி தனது மனைவி விஜயலட்சுமியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் இவரது கூரை வீடு திடீரென தீபிடித்து எரிந்தது.

    உடனே சின்னசாமியும் அவரது மனைவி விஜயலட்சுமியும் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஒன்றுதிரண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அருகில் உள்ள ராதாரவி, சவுபாக்கியம், மல்லிகாம்பாள், முனியம்மாள், வேல்முருகன் ஆகியோரது கூரை வீடுகளிலும் தீ பரவியது.

    இதையடுத்து தகவலின் பேரில் மடுகரை மற்றும் திருபுவனை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் 6 பேரின் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.5லட்சத்துக்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வருவாய்த்துறையினர் சேதமடைந்த பொருட்கள் குறித்த விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதியே சோகத்துடன் காணப்படுகிறது. 
    Next Story
    ×