என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் புதுவையில் இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 240-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் பொதுமக்கள் பலர் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்திக்குப்பம், பாண்டி மெரினா, பழைய துறைமுகம், குருசுக்குப்பம் கடற்கரைக்கு பாதுகாப்பாக எடுத்து வந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்து கடலில் கரைத்தனர். நகர பகுதியில் வைத்திருந்த பெரிய அளவிலான ஒரு சில சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    விநாயகர் சிலைகளை கரைத்த நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்தனர். இதனால் இறைச்சி, மீன் கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. காமராஜர் சாலையில் தொடங்கும் இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரைகளில் கரைக்கப்படுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது.
    பேஸ்புக் மூலம் நண்பராக பழகி பெண்ணிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது45). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (42). இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த எரிக் வால்க்கர் என்பவர் அறிமுகமானார். டாக்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் ஜெயந்தியின் 2-வது மகளுக்கு பிறந்த நாள் என்பதால் அதற்கு விலையுயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக எரிக் வால்க்கர் கூறினார். அதன்படி பரிசு பொருளை செல்போனில் படம் பிடித்து ஜெயந்திக்கு அனுப்பினார்.

    இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜெயந்திக்கு போன் வந்தது. அதில் பேசிய அங்கிதா என்ற பெண் தான் விமான நிலையத்தில் பணிபுரிவதாகவும், உங்களுக்கு இங்கிலாந்திலிருந்து விலையுயர்ந்த பரிசு பொருள் வந்திருப்பதாகவும் கூறினார். அந்த பரிசை பெறுவதற்கு பணம் கட்டவேண்டும் என கூறினார். பணம் அனுப்புவதற்காக வங்கி கணக்கு விபரத்தையும் ஜெயந்திக்கு அனுப்பி வைத்தார்.

    இதனை உண்மையென நம்பிய ஜெயந்தி, அங்கிதா அனுப்பிய வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.50 ஆயிரம், 1 லட்சம் என 4 தவணையாக ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் பரிசு பொருள் வீடு வந்து சேரவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் ஜெயந்தி சந்தேகமடைந்தார். பின்னர் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    பின்னர் இதுகுறித்து ஜெயந்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி அரசில் நீண்ட ஆண்டுகளாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல் துறை ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் 431 பேருக்கு ஏட்டு (ஸ்பெஷல் கிரேடு) பதவி உயர்வு வழங்கும் விழா கோரிமேடு காவலர் மைதானத்தில் நடந்தது. விழாவில் போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்ணியா வரவேற்றார். விழாவுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்களுக்கு ஸ்பெஷல் கிரேடு பேட்ஜ் அணிவித்தார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுவை காவல்துறை பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகிறது. மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். காவல்துறையை பலப்படுத்த அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப அரசு முழுமுயற்சி மேற்கொண்டு வருகிறது.

    கொரோனா பரவலின்போது போலீசார் சிறந்த முறையில் பணியாற்றினார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். புதுவை அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக  பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி நிரந்தரம் 2 மாதங்களில் வழங்கப்படும்.

    புதுச்சேரி மிகச்சிறிய மாநிலம். கொரோனா பரவலை தடுக்க அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அரசின் அனைத்து முயற்சிக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி அனைவரும் போட வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா நன்றி கூறினார்.

    மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
    புதுச்சேரி:

    புதுவை மேல்-சபை எம்.பி.க்கான தேர்தல் அடுத்த மாதம் 4-ம் தேதி நடக்கிறது.

    வருகிற 15-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவியை பெறுவதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    புதுவை மேல்-சபை எம்.பி. பதவி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் பாரதியார் நினைவுதினத்தையொட்டி அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் தான் பாரதியார் 10 ஆண்டுக்கு மேல் வசித்தார். அந்த காலத்தில்தான் பல புத்தகங்களை எழுதினார். பகவத் கீதையையும் மொழி பெயர்த்தார்.

    புதுவையில் பாரதியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். கவிஞர்கள், தமிழ் அறிஞர்களை அழைத்து புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 21). கார் டிரைவர். இவருக்கும், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தாமோதரன், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அந்த மாணவியுடன், தாமோதரன் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 111 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

    அதாவது புதுச்சேரியில் 71 பேரும், காரைக்காலில் 30 பேரும், மாகியில் 8 பேரும், ஏனாமில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 178 பேரும், வீடுகளில் 817 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

    புதுவையில் இதுவரை 1,820 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு 1.90 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.

    நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 934 பேரும் தடுப்பூசி செலுத்திகொண்டனர். மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 52 ஆயிரத்து 493 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுவையில் பிரெஞ்சு கல்லூரி பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை ஜெயராம் செட்டியார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி ரீத்தா. இவரது மகள் மிரைலோர் (வயது 32). இவர் புதுவையில் உள்ள அலியான்பிரான்ஸ் பிரெஞ்சு கல்லூரியில் நூலக காப்பாளராக கடந்த சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். பின்னர் அந்த வேலையை அவர் கைவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

    எப்போதும் தனிமையிலேயே இருக்கும் மிரைலோர் சில நேரங்களில் சாப்பிடமாட்டார். குடும்பத்தினர் வற்புறுத்தி சாப்பிட அழைத்தால் மட்டுமே மிரைலோர் சாப்பிடுவார்.

    இந்த நிலையில் மனநோயாளி போல் இருந்து வந்த மிரைலோர் அறை கதவு நேற்று மாலை வெகுநேரமாக அவரது திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் மிரைலோர் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவரது சகோதரர் நெய்வர்கிள மெண்ட் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மிரைலோர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாஸ்பேட்டை வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் முகமது தல்ஹா. இவரது மகன் முகமது ஹஷீப் (26). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட முகமது ஹஷீப் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று விட்டார். உடனே அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து கன்னியாகுமாரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முகமது ஹஷீபை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முகமது ஹஷீப் இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் முகமது ஜிபைர் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சேதராப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே தமிழக பகுதியான கலித்தீரன்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தனர் காசிநாதன். இவரது மனைவி கனகராணி (வயது62). இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

    காசிநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கனகராணி உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். அதுபோல் கடந்த சில நாட்களாக சேதராப்பட்டு புதுக்காலனியில் உள்ள தனது அண்ணன் மகன் பாபு வீட்டில் கனகராணி தங்கியிருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை கனகராணி சேதராப்பட்டு மெயின் ரோட்டில் சாலை யோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கனகராணி மீது மோதியது.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் உடலில் வெளிக்காயம் ஏற்படாததால் கனகராணி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இதையடுத்து அவர் தனது அண்ணன் மகன் வீட்டுக்கு சென்று தூங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கனக ராணியை சிகிச்சைக்காக அவரது அண்ணன் மகன் குடும்பத்தினர் கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கனகராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வில்லியனூர் அருகே அரியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சாந்தி (வயது57). நேற்று காலை இவர் வில்லியனூருக்கு செல்ல அரியூரில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் வந்தார். வில்லியனூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்ற போது சாந்தி கீழே இறங்குவதற்குள் டிரைவர் பஸ்சை எடுத்து விட்டார்.

    இதனால் சாந்தி தடுமாறி கீழே விழுந்தார். இதில் வலது கை மணிகட்டில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சாந்தியை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இந்த 2 விபத்துக்கள் குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    மதுக்குடிக்க கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் பழனி நகரை சேர்ந்தவர் அங்காளன் (வயது49) இவருக்கு சுமதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    அங்காளன் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு வில்லியனூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    ஒரிரு நாட்கள் அந்த பெண் வீட்டிலேயே அங்காளன் தங்கிவிடுவது வழக்கம். அங்காளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் அங்காளன் தங்கியிருந்தார். அப்போது மது குடிப்பதற்காக கள்ளக்காதலியிடம் அங்காளன் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அங்காளன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கள்ளக்காதலி வீட்டிலேயே எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அங்காளன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் ஹேமக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிறந்தநாளையொட்டி அமைச்சர் நமச்சிவாயம் புதுவை முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உதவிகளை வழங்கினார்.

    இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.

    14 ஆண்டுக்கு பிறகு நேற்று வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.

    நமச்சிவாயம், மனைவி வசந்தி, பேரன் சிவஹரி ஆகியோர் முதல்-அமைச்சரை வரவேற்று அழைத்து சென்றனர்.

    பேரன் சிவஹரியுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி

    பின்னர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். தாத்தா நீண்டகாலத்துக்கு பின் வீட்டுக்கு வந்ததை கண்டு பேரன் மகிழ்ச்சியடைந்தார். தாத்தாவை ஒவ்வொரு அறையாக அழைத்து சென்று வீட்டை சுற்றிக்காட்டினான்.

    தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். தொடர்ந்து ரங்கசாமி, நமச்சிவாயம் வீட்டிலேயே உணவருந்தினார். உணவருந்தும் போது தாத்தா ரங்கசாமியிடம் தனது பெற்றோரை பற்றி பேரன் சிவஹரி புகார் செய்தான். 2 ஆண்டாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என தெரிவித்தான்.

    அவனை தனது மடியில் வைத்து ரங்கசாமி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 45 நிமிடம் அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பேரனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி செலவழித்தார்.

    பின்னர் அங்கிருந்து கிளம்பிய முதல்-அமைச்சர் ரங்கசாமியை, கார் வரை வந்து அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி வசந்தி, பேரன் சிவஹரி வழியனுப்பி வைத்தனர்.


    துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவைக்கு 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.

    அன்று புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய ஓளி மின் பயன்பாடு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து, புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். இதனையடுத்து, புதுவை கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    மறுநாள் (13-ந் தேதி) காலை புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார்.

    பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஓளி மின்பயன்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். 14-ந் தேதி புதுவையில் இருந்து புறப்படுகிறார்.

    புதுவை அரசு

    துணை ஜனாதிபதியின் புதுவை வருகை உறுதியாகி உள்ள சூழலில் அரசு தரப்பில் முறைப்படி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    இதையும் படியுங்கள்... உலக அளவில் கொரோனா பரவல் மந்தம்
    ×