search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக்
    X
    பேஸ்புக்

    பேஸ்புக் மூலம் நண்பராக பழகி புதுவை பெண்ணிடம் ரூ.13½ லட்சம் மோசடி

    பேஸ்புக் மூலம் நண்பராக பழகி பெண்ணிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது45). இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (42). இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த எரிக் வால்க்கர் என்பவர் அறிமுகமானார். டாக்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் ஜெயந்தியின் 2-வது மகளுக்கு பிறந்த நாள் என்பதால் அதற்கு விலையுயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக எரிக் வால்க்கர் கூறினார். அதன்படி பரிசு பொருளை செல்போனில் படம் பிடித்து ஜெயந்திக்கு அனுப்பினார்.

    இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜெயந்திக்கு போன் வந்தது. அதில் பேசிய அங்கிதா என்ற பெண் தான் விமான நிலையத்தில் பணிபுரிவதாகவும், உங்களுக்கு இங்கிலாந்திலிருந்து விலையுயர்ந்த பரிசு பொருள் வந்திருப்பதாகவும் கூறினார். அந்த பரிசை பெறுவதற்கு பணம் கட்டவேண்டும் என கூறினார். பணம் அனுப்புவதற்காக வங்கி கணக்கு விபரத்தையும் ஜெயந்திக்கு அனுப்பி வைத்தார்.

    இதனை உண்மையென நம்பிய ஜெயந்தி, அங்கிதா அனுப்பிய வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.50 ஆயிரம், 1 லட்சம் என 4 தவணையாக ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் பரிசு பொருள் வீடு வந்து சேரவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் ஜெயந்தி சந்தேகமடைந்தார். பின்னர் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    பின்னர் இதுகுறித்து ஜெயந்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×