என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் வரை ஆகும். தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.

    வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சந்திரகிரியில் 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதற்கு துணையாக இருந்த 10 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

    திருமலை:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாகாலா மண்டலம், புலிவருத்திப்பல்லி, ராமச்சந்திராபுரம் மண்டலம் என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம், கேலேபல்லி, குப்பம்பாதுரு ஆகிய 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்தநிலையில் முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட துணையாக இருந்ததாக அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

    ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. சார்பில் பணி அமர்த்தப்பட்டுள்ள முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அவர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    வேலூர் தொகுதியை தவிர 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணும் பணியை மிகுந்த கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கையை முறையாக கையாள வேண்டும் என்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

    இதில் தி.மு.க. சார்பில் கனிமொழி பங்கேற்ற நிலையில் தமிழகத்தின் ஓட்டு எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன், வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதில் பங்கேற்ற ஓட்டு எண்ணும் மைய முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சீல் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் சீல் சரியாக உள்ளதா? என்பதை கட்சியினர் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சீல் சேதாரம் அடைந்தது போன்று காணப்பட்டால் அதில் பதிவான ஓட்டுகளை எண்ணவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மேற்கு மாவட்டம், தெற்கு மாவட்டம், மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    நாளை காலையில் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு தி.மு.க. முகவர்கள் 7 மணிக்கு முன்னதாகவே சென்றுவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் சரியாக இருக்கிறதா? என்பதை கவனமோடு கண்காணிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘எப்போதும் இல்லாத வகையில் கட்சியினருக்கு இந்த தேர்தலில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தில்லுமுல்லு நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஓட்டு எண்ணிக்கையின் போது தி.மு.க.வினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை வெடித்தது.

    இந்நிலையில், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடக்கோரி சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை ஏற்பட்டதால், 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



    அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
    பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஓட்டு எந்திரத்தில் பாரதிய ஜனதா தில்லுமுல்லு செய்து இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டீரிய லோக் சமதா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உபேந்திர குஷ்வகா கூறியதாவது:-

    தேர்தல் கருத்து கணிப்பு என்ற பெயரில் பாரதிய ஜனதா மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான எண்ணத்தை உருவாக்க முயற்சித்துள்ளது.

    பாரதிய ஜனதா எப்படி எல்லாம் மக்கள் மனநிலையை மாற்றும் விளையாட்டுகளை கையாளும் என்பது எங்களுக்கு தெரியும்.


    பாரதிய ஜனதா அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் அந்த கட்சிக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

    ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லுகள் செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் ஓட்டு எந்திரங்கள் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    முஷாபர்பூரில் ஓட்டல் அறையில் ஓட்டு எந்திரங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற வி‌ஷயங்கள் பல சந்தேகத்தை எழுப்புகிறது.

    மக்களின் உரிமையை பறிக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தொண்டர்கள் ஓட்டு எந்திரத்தில் மோசடி நடக்காமல் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    அவர்கள் உரிய ஆயுதங்களை கையில் ஏந்தி செல்வார்கள். தில்லுமுல்லு நடந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உபேந்திர குஷ்வகாவின் கட்சி பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தது.

    அப்போது உபேந்திர குஷ்வகா மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியதுடன் மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் லாலு கட்சி கூட்டணியில் அவர் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக சமூக வலைத்தளங்களில் போலியான அறிக்கையை பரவ விட்டது தொடர்பாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மே 23ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அந்த அறிக்கை அச்சிடப்பட்டிருந்தது.

    தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கு ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவுடனும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்து முயற்சி செய்து வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.



    ஆனால் இந்த அறிக்கை போலியானது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடனடியாக டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. “தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கூறியிருந்தது.

    அத்துடன், போலி அறிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை  ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற மோசடி அறிக்கையை பரவ விட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், இந்த போலி தகவலால் மோசமான விளைவுகள் நிகழ்வதற்கு முன் துரிதமாக நடவடிக்கை எடுத்து, போலி அறிக்கையை பரப்பியதன் பின்னணியில் உள்ளவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
    தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.

    இந்நிலையில், இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.
    வாக்காளர்களின் புனிதமான தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவுகளை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு இயந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி இயந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.

    மின்னணு இயந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


     
    ’வாக்காளர்களின் தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களை கவனித்து வருகிறேன். நமது ஜனநாயகத்தின் வேர்களுக்கு சவால்விடும் யூகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.

    மக்களின் தீர்ப்பு மிகவும் புனிதமானது. அதில் எள்முனையளவு சந்தேகத்துக்கும் இடமளித்துவிட கூடாது.

    நமது நாட்டின் உயரிய அமைப்புகளின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் இந்த அமைப்புகளின் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவற்றில் பணியாற்றுபவர்கள் கையில்தான் உள்ளது. 

    தேர்தல் கமிஷன் என்னும் உயரிய அமைப்பின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் கமிஷன் பொறுப்பேற்க வேண்டும்.

    அவர்கள் அவ்வாறு செய்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என தனது அறிக்கையில் பிரனாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
    வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்திருப்பதாக கூறி 21 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளன.
    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

    எனினும் மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மீண்டும் தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர்.



    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில், வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுகளுக்கும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தால்கூட, அந்த தொகுதியில் முழுமையாக ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
    அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது என்று நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தென்னிந்திய நாடக சங்க கட்டிடம் கட்ட நிதி வழங்குவதற்காக இன்று நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நான் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவைப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்படும்.

    கருத்து கணிப்பு மீதான நம்பகத்தன்மை போய் விட்டது. தனியார் நிறுவனம் நடத்தும் கணிப்புகள் பொய் கணிப்புகளாக உள்ளன.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என எந்த கருத்து கணிப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் நான் வெற்றி பெற்றேன்.

    3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதில் நம்பகத்தன்மை இல்லை. இதனால் தான் கோர்ட்டு அதற்கு தடை விதித்துள்ளது.



    அ.தி.மு.க.வை பொறுத்த வரை சசிகலா தான் பொதுச்செயலாளர். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் அந்த கட்சியின் நிலைப்பாடு தெரியவரும்.

    அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது தான் என் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.



    இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கிறது என ஆதாரங்கள் இருந்தபோதும் தேர்தல் ஆணையம் அமைதி காப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

    மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து கூறுகையில், ‘பாஜக வெற்றி பெற்றால் அது மக்களின் முடிவு. இதனை யாரும் தடுக்க முடியாது’ என கூறினார்.  

    பாஜக வெற்றி பெறுவதோ, தோல்வி அடைவதோ உலகின் இறுதி நாள் இல்லை எனவும் மெகபூபா குறிப்பிட்டுள்ளார்.

    கேரள தேர்தலில் சபரிமலை கோவில் விவகாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எதிர் கட்சியான காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியும் 3-வது அணியாக களம் கண்டது.

    தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கே அதிக பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், ஆளும் கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விட்டு நேற்று திருவனந்தபுரம் திரும்பினார். கருத்து கணிப்புகள் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பினராயி விஜயன் கூறியதாவது:-

    தேர்தலில் கருத்துக் கணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும் என்று கூற முடியாது. பலமுறை கருத்துக்கணிப்புகள் தோல்வி அடைந்துள்ளது. 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. எனவே தேர்தல் முடிவுகள் பற்றி இப்போதும் யூகமாக எதையும் கூற முடியாது. 23-ந் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    கேரளாவை பொறுத்தவரை நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சபரிமலை கோவில் விவகாரம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் பாதிக்காது. சபரிமலையில் நடக்கக்கூடாதது நடந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

    சபரிமலை ஆச்சாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் போராடவில்லை. சபரிமலை போராட்டங்களின் பின்னணியில் வேறு லட்சியங்கள் இருந்தன என்று ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கூறி உள்ளார். சபரிமலை கோவிலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தான் கேரள அரசு செய்து வருகிறது.

    சபரிமலையில் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகளும், மாநில அரசு சார்பில் நடந்து வருகிறது. அடுத்த சீசனுக்குள் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை விவகாரம் பற்றி கருத்து கூறும்போது சபரிமலை பிரச்சினையில் மக்களை சிலர் திசைதிருப்பி விட்டார்கள். இது பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார்.

    இவரது கருத்து முதல்-மந்திரி பினராயி விஜயனின் கருத்துக்கு நேர்மாறாக இருப்பதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ×