என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    தூத்துக்குடி தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.ம.மு.க. சார்பில் வக்கீல் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிட்டனர்.

    தொகுதியில் மொத்தம் 14,25,401 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,77,393 ஆண் வாக்காளர்களும், 5,06,578 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 28 பேர் என மொத்தம் 9,83,999 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இது 69.03 சதவீத வாக்குப்பதிவாகும்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    முதலில் தபால் ஓட்டுகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 3 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலையில் இருந்து வந்தார்.
    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங



    வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

    வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், துவக்கம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் முன்னிலை பெற்றார்.



    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் முன்னிலை பெற்றார். காலை 8.30 மணிக்கு பிறகு ராகுல் சற்று பின்தங்கினார். அதேசமயம் வயநாடு தொகுதியில் ராகுல் தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
    புதுடெல்லி:

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துவக்கம் முதலே பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றன. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.



    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றனர். வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றார். இதேபோல் நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் துவக்கம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர்.

    தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 
    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    இதுதவிர ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 8040 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.



    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
    பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
    சென்னை:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது இன்று மாலை தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.



    தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.

    45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும்.

    முடிவுகள் மேஜை வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அங்குள்ள அறிவிப்பு பலகையிலும், வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்றுள்ள வாக்குகள் எழுதப்படும்.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.

    வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகலாம். 
    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஊடகங்கள், இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று செய்திகளை வெளியிடுகிறீர்கள். உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிடுங்கள்.

    இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மண்டியாவில் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

    இவ்வாறு அனிதா குமாரசாமி கூறினார்.
    தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாததால் வெற்றி யாருக்கு? என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா தேர்தல் முடிவுகளை உற்சாகத்துடன் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழகத்தில் கருத்து கணிப்புகள் மாறுபடும். தேசிய அளவில் கணித்து உள்ள இடங்களைவிட அதிகமாக பெறுவோம்.



    தமிழகத்தில் கள நிலவரத்தை யாரும் கணிக்க முடியாத சூழ்நிலையாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பெறும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.

    எல்லா கருத்து கணிப்புகளும் சரி என்று சொல்ல முடியாது. ஆனால் கருத்து கணிப்புகளுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று எப்படி கூறமுடியும்?. தோல்வியை முன் எடுத்து செல்லும்போது, நியாயமாக, ஜனநாயக முறையில் நடந்த தேர்தலையும் கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

    தூத்துக்குடியில் மக்களிடம் தூய்மையான, கடின உழைப்பை கூறி வாக்கு சேகரித்தேன். 20 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் வேண்டும் என்று மக்களிடம் கேட்டு உள்ளேன். எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. நேர்மையான அரசியல்வாதியாக உள்ளேன். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.

    தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு? என கணிக்க முடியாத நிலை உள்ளது. நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான் ஆகிய 3 புதிய முகங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்? என்பது தெரியாது.

    டெல்லியில் நடந்த கூட்டத்தில் மக்களுக்கான பல திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. மோடி மீண்டும் வரவேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.
    சென்னை:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது.

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து இருக்கிறது.



    கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    எனவே மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது இன்று தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

    ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

    தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.

    45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும். முடிவுகள் மேஜை வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அங்குள்ள அறிவிப்பு பலகையிலும், வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்றுள்ள வாக்குகள் எழுதப்படும்.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.

    மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகலாம்.

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் 88 கண்காணிப்பு பார்வையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும் மையங்களுக்கு 2 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவையும் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியும் கையெழுத்திட்டு, அதன் நகலை முகவர்களுக்கு வழங்குவார்கள்.

    பார்வையாளர் அனுமதியை பெற்ற பின்னர் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பார்.

    வாக்கும் எண்ணும் மையங்களில் 1,520 மத்திய துணை ராணுவ படை வீரர்கள், 4,960 ஆயுதப்படை போலீசார், 31 ஆயிரம் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து எப்படி எந்திரங்கள் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து எப்படி மேஜைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது போன்றவை ‘வீடியோ’ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    வாக்குகள் எண்ணும் பணியில் 17 ஆயிரத்து 128 பேர் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்படும் மையங்கள் விவரம் காலை 5 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். எனவே எந்த ஊழியர், எந்த மையத்துக்கு செல்வார்? என்பது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. காலையில்தான் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகலாம்.

    14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுவது வழக்கம். வாக்கு எண்ணும் மையம் சிறியதாக இருந்தால் 10 மேஜைகளும், வாக்கும் எண்ணும் மையம் பெரிதாக இருந்தால் அதிக மேஜைகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று வைக்கலாம். சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக 30 மேஜைகள் போடப்பட்டு இருக்கிறது. நாகர்கோவிலில் 10 மேஜைகள் போட்டு இருக்கிறோம்.

    தபால் ஓட்டுகள், மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் குலுக்கல் முறையில் 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். இதுதவிர ‘17 சி’ படிவம்-மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் இடையே வித்தியாசம் இருந்தாலும், மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியே எடுக்காமல் இருந்திருந்தாலும் விவிபாட் எந்திரங்கள் சரிபார்க்கப்படும்.

    மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே பதிவான வாக்கு எந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டு உள்ளன. அந்த எந்திரங்களில் எண்ணுவதற்கு தகுதி இல்லை என்று குறிப்பு ஓட்டப்பட்டு இருக்கும். எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்பு இருப்பது அவசியம். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
    பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்த தகவல் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சற்று சஞ்சலத்தையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது.

    இந்நிலையில், சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் சுதாரிப்பாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    வாய்மைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் அச்சப்பட தேவையில்லை. போலி கருத்துக் கணிப்பு பிரசாரங்களால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கையாக இருங்கள். உங்களது கடுமையான உழைப்பு வீணாகப்போய் விடாது. ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    முன்னதாக, இதேபோல் காங்கிரசாருக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் பிரியங்கா காந்தியும் இதேபோல் ஆடியோ வடிவில் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர மற்ற 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

    இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 91 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 30 லட்சத்து 96 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும், சுமார் 10 லட்சத்து 74 ஆயிரம் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 91 கோடி வாக்காளர்களில் 67.11 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த தடவைதான் அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது 65.95 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை 1.16 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

    தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக 542 தொகுதிகளிலும் சுமார் 2.70 லட்சம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், சுமார் 20 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான வாக்குகள் பதிவானது.

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதி இடைதேர்தலும், ஏப்ரல் 18, மே 19-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

    7 கட்டமாக நடந்த ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று 5 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. கட்சி முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகளும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஓட்டு எண்ணப்படும் லயோலா கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு

    முதலில் தபால் வாக்குகள், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணப்படும். அது முடிந்ததும் 30 நிமிடங்கள் கழித்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருக்கும் வாக்குகள் எண்ணிக்கைத் தொடங்கும். அதாவது 8.30 மணிக்குத்தான் மின்னணு எந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும். சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 14 முதல் 22 மேஜைகள் வரை போடப்பட்டு ஓட்டு எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பற்றிய தகவல் ஒலி பெருக்கியில் வெளியிடப்படும்.

    காலை 10 மணி அளவில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய வரும். இதைத்தொடர்ந்து முன்னணி நிலவரம் தெரிய வரும். பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புடன் இருக்கும் வேட்பாளர்கள், கட்சி பற்றி தெரிந்துவிடும்.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டு வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 30 ஓட்டுச்சாவடிகளின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும். இப்படி ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்.

    இந்தியா முழுவதும் 542 தொகுதிகளிலும் 20 ஆயிரத்து 625 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்க வேண்டியதுள்ளது. எனவே இந்த தடவை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சுமார் 5 மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று சொல்கிறார்கள்.

    என்றாலும் நாளை மாலை முதலே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் ஓட்டு எண்ணிக்கை வி‌ஷயத்தில் புதிய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட 22 எதிர்கட்சிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளன. அந்த மனுவில், “ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் எண்ணப்படுவதற்கு முன்பு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி முதலில் சரிபார்க்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளும், மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகளும் சரியாக இருந்தால் மட்டுமே ஓட்டு எண்ணிக்கையை தொடர வேண்டும். முரண்பாடு இருந்தால், எந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரச்சினை உள்ளதோ அந்த சட்டசபை பகுதிக்குரிய வாக்குகள் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி வாக்குகளை எண்ணினால் தேர்தல் முடிவை வெளியிட 3 அல்லது 4 நாட்களாகி விடும் என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. 50 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய கோரிக்கையை கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

    ×