என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

    ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


    பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது. காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.

    சுமார் 1240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. 
    ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

    147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) ஆகியவையும் களத்தில் நின்றன. ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இதனால் பிஜுஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை.

    பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது.

    நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி ஆக உள்ளார். அவர் 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்து ஒடிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் 117 தொகுதிகளை வென்று இருந்தது.
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    அரியலூர் :

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867

    சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686

    முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னணியில் உள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரிகிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார்.

    தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை, அ.ம.மு.க. வேட்பாளராக ஞானசேகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அருள், நாம் தமிழர் வேட்பாளராக ரமேஷ்பாபு போட்டியிட்டனர்.

    திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 14,70,203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11,43,570 ஓட்டுகள் பதிவானது. இது 77.78 சதவீதமாகும்.

    சி.என்.அண்ணாதுரை

    (தி.மு.க.)- 32,683

    (அ.தி.மு.க.)- 19,618

    13,065 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னணியில் உள்ளார்.
    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    ஐதராபாத் :

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி, 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.



    வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது.

    காலை 10 மணி நிலவரப்படி 64 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரியவந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 54 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கு தேசம் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 7,39,241 ஆண்கள், 7,68,940 பெண்கள் மற்றும் 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,08,963 வாக்காளர்கள் உள்ளனர்.

    இது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.ம.மு.க. வேட்பாளர் சாரு பாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆனந்த்ராஜ், நாம் தமிழர் கட்சியில் வினோத் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 144 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 68.89 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 25 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவரும், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் 252 பேரும், 36 மாற்றுப் பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 288 பேர் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)-29,742

    இளங்கோவன் (தே.மு.தி.க.)-7,124

    சாருபாலா (அ.ம. மு.க.)-4,991

    முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் முன்னிலையில் இருந்தார்.
    புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஒரே ஒரு எம்.பி. தொகுதி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

    அதேபோல் பாரதிய ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி இருந்தனர்.

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கமும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமியும் போட்டியிட்டனர். அ.ம.மு.க. சார்பில் தமிழ்மாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் எம்.ஏ.சுப்பிரமணியன் போட்டியிட்டார்கள்.

    புதுவை தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் இருந்தார்.

    முதல் சுற்றில் 69 ஆயிரத்து 421 ஓட்டுகள் எண்ணப்பட்டு இருந்தன. அதில், வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகளும், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி 20 ஆயிரத்து 959 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

    இதன் மூலம் வைத்திலிங்கம் 20 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.
    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4552 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அருர்(தனி) ஆகிய சட்டமன்ற இடைத்தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன்.

    இந்த வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுக்களாக எண்ணப்படுகிறது.

    முதல் சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

    பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்-4552 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் டிஎன்வி செ. செந்தில்குமார்-3868 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் பி.பழனியப்பன்- 233 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இதில் அன்புமணி ராமதாஸ் 684 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி 4 மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மலைப்பகுதி மற்றும் சமவெளியில் இந்த தொகுதி அமைந்துள்ளது.

    இந்த தொகுதியில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி தொகுதியும் ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தியாகராஜன், தி.மு.க.வில் ஆ.ராசா, அ.ம.மு.க.வில் ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 10 பேர் போட்டியிட்டனர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 262 வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குகள் ஊட்டி சிக்னல் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டது.

    முதலில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் முடிவு வருமாறு-

    தியாகராஜன் (அ.தி.மு.க.)-17,893

    ஆ.ராசா (தி.மு.க.) - 27,529

    ராமசாமி (அ.ம.மு.க.)-2,948

    ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்)- 1,037

    முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை விட தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 9636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளனர்.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில், தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முந்துகிறது.



    இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது. தற்போதைய முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணிக்கு சிக்கல் உருவாகும்.

    அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், அவர்களின் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படும் பட்சத்தில், இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் லட்சுமணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 2-வது இடத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. கன்னியாகுமரி தொகுதியில் 2 வாக்கு எந்திரங்களை திறக்க முடியாததால் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
    பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பின்னடைவில் உள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23-ந்தேதி ஆகிய 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    இதில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதலே பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவர் தோல்வி முகத்தில் உள்ளார்.

    பாரதிய ஜனதா வேட்பாளர் பி.சி.மோகன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
    ×