search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy constituency"

    அ.தி.மு.க. தொண்டர்கள் அளித்த வாக்கால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இதையடுத்து அவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.


    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.

    அதாவது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர்.

    மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

    அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.

    3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும்.

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தோற்கடித்தார்.
    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருச்சி தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் களமிறங்கினார்.

    திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 65 ஆயிரத்து 286 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜா 42 ஆயிரத்து 134 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 7,39,241 ஆண்கள், 7,68,940 பெண்கள் மற்றும் 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,08,963 வாக்காளர்கள் உள்ளனர்.

    இது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.ம.மு.க. வேட்பாளர் சாரு பாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆனந்த்ராஜ், நாம் தமிழர் கட்சியில் வினோத் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 144 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். இது 68.89 சதவீதமாகும்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 25 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவரும், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் 252 பேரும், 36 மாற்றுப் பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 288 பேர் பணியில் இருந்தனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)-29,742

    இளங்கோவன் (தே.மு.தி.க.)-7,124

    சாருபாலா (அ.ம. மு.க.)-4,991

    முதல் சுற்று முடிவின்படி 22 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் முன்னிலையில் இருந்தார்.
    ×