search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள தேர்தலில் சபரிமலை விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - பினராயி விஜயன்
    X

    கேரள தேர்தலில் சபரிமலை விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை - பினராயி விஜயன்

    கேரள தேர்தலில் சபரிமலை கோவில் விவகாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எதிர் கட்சியான காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியும் 3-வது அணியாக களம் கண்டது.

    தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கே அதிக பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், ஆளும் கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விட்டு நேற்று திருவனந்தபுரம் திரும்பினார். கருத்து கணிப்புகள் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பினராயி விஜயன் கூறியதாவது:-

    தேர்தலில் கருத்துக் கணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும் என்று கூற முடியாது. பலமுறை கருத்துக்கணிப்புகள் தோல்வி அடைந்துள்ளது. 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. எனவே தேர்தல் முடிவுகள் பற்றி இப்போதும் யூகமாக எதையும் கூற முடியாது. 23-ந் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    கேரளாவை பொறுத்தவரை நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சபரிமலை கோவில் விவகாரம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் பாதிக்காது. சபரிமலையில் நடக்கக்கூடாதது நடந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

    சபரிமலை ஆச்சாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் போராடவில்லை. சபரிமலை போராட்டங்களின் பின்னணியில் வேறு லட்சியங்கள் இருந்தன என்று ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கூறி உள்ளார். சபரிமலை கோவிலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தான் கேரள அரசு செய்து வருகிறது.

    சபரிமலையில் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகளும், மாநில அரசு சார்பில் நடந்து வருகிறது. அடுத்த சீசனுக்குள் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை விவகாரம் பற்றி கருத்து கூறும்போது சபரிமலை பிரச்சினையில் மக்களை சிலர் திசைதிருப்பி விட்டார்கள். இது பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார்.

    இவரது கருத்து முதல்-மந்திரி பினராயி விஜயனின் கருத்துக்கு நேர்மாறாக இருப்பதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×