search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake statement"

    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக சமூக வலைத்தளங்களில் போலியான அறிக்கையை பரவ விட்டது தொடர்பாக டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மே 23ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அந்த அறிக்கை அச்சிடப்பட்டிருந்தது.

    தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கு ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவுடனும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இணைந்து முயற்சி செய்து வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.



    ஆனால் இந்த அறிக்கை போலியானது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடனடியாக டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. “தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கூறியிருந்தது.

    அத்துடன், போலி அறிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை  ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற மோசடி அறிக்கையை பரவ விட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், இந்த போலி தகவலால் மோசமான விளைவுகள் நிகழ்வதற்கு முன் துரிதமாக நடவடிக்கை எடுத்து, போலி அறிக்கையை பரப்பியதன் பின்னணியில் உள்ளவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
    ×