என் மலர்
விருதுநகர்
- சென்னை வாலிபரின் தொல்லை குறித்து மாணவி தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் பேசிய நபரும், இன்ஸ்டாகிராம் முகப்பில் இருந்த நபரின் புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அது குறித்து கேட்டபோது அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் நபரை சமூக வலைதளத்தில் முகப்பில் வைத்தால் இளம்பெண்களை மயக்கலாம் என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.
அந்த வாலிபரின் இந்த நடவடிக்கை மாணவிக்கு பிடிக்கவில்லை. எனவே தன்னுடன் பழகுவதை விட்டுவிடுமாறு மாணவி கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர், மாணவிக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் செயல்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும் அவர் சென்னை வாலிபரின் தொல்லை குறித்து தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிவா (வயது19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
- விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது.
- 10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 பெரிய அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொலை மிரட்டல் இருப்பதால் ஜெயிலில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளேடு வைத்திருந்ததாக சந்தேகம் ஏற்பட்ட ஒரு கைதி வேறொரு அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு மற்ற கைதிகள் எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர். அப்போது சிறையில் இருந்த பொருட்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கைதிகளை சமரசம் செய்தனர். மேலும் ரகளை செய்த கைதிகள் மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். இதற்காக கைதிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட போது ஒரு கைதி தலையால் வேன் கண்ணாடியில் மோதினார். இதில் கண்ணாடி உடைந்து அந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது.
மேற்கண்ட சம்பவங்களால் விருதுநகர் மாவட்ட ஜெயில் போர்க்களமானது.இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் போலீஸ் சூப்பி ரண்டு ரமா பிரபா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் ஜெயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், 3 பேரையும் தாக்கியதாகவும் வடிவேல் முருகன், கண்ணன், மலைக்கண்ணன், முத்துப்பாண்டி, முத்தழகு, முத்துகிருஷ்ணன், ராமர், பாலாஜி, பார்த்தி, ஜோதி மணி, செந்தில்குமார், பால குமார், கார்த்திக் பாண்டி உள்பட 23 கைதிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். டாக்டரான இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் அலமாரியில் சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை வைத்து பூட்டி, அதன் சாவியை மேலே வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பணத்தை எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் கனகராஜ் தனது குடும்பத்தினர் மற்றும் கிளினிக்கில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தார்.
ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து டாக்டர் கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் கனகராஜ் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணிபுரியும் அழகாபுரி தொட்டிய பட்டிைய சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி குருவம்மாள் (வயது60) பணத்தை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 15-ந் தேதி பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்ட வர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.
- சமத்துவபுரம் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள ஆதித்தனேந்தல் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவ புரம் குடியிருப்பு உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேற்கண்ட வீடுகள் மராமத்து செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. எனவே சமத்துவ புரம் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆதித்த னேந்தல் சமத்துவபுரத்தில் வீடுகளை புனரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படிய அதிகாரிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து வீடுகளை பராமரிக்க பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிதி பரா மரிப்பு பணிக்கு போதாது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமத்துவ புரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்தும், கூடுதல் பராமரிப்பு நிதி ஒதுக்க கோரியும் இன்று காலை நரிக்குடி-ராமேசு வரம் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நிதி விவகாரம் ெதாடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- மாட்டை கொன்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் குல்லூர் சந்தையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ராமுத்தாயி. கருத்து வேறுபாடு காரண மாக இவர் தனது கணவர் மாரிகண்ணனை பிரிந்து வந்து விட்டார்.
சம்பவத்த ன்று மாமனார் வீட்டுக்கு வந்த மாரிகண்ணன் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை கத்தியால் வெட்டி கொன்றார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி ராஜபாளையம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி தலைமை வகித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன், மாவட்ட பொது செயலாளர் போத்திராஜ், பட்டியலின மாவட்ட துணை தலைவர் கதிரேசன் மற்றும் முத்துக்குமார். செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஏராளமான நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசு 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
- ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
- பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தி னர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.
விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
- தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார்.
விருதுநகர்:
விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உள்பட 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் இருப்பதால் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இவர்கள் சிறை அறையில் இருந்து வெளியே வரும்போது மற்ற அறையில் இருக்கும் கைதிகள் வெளி வருவதற்கு அனுமதியில்லை. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைதானவர்கள் தங்களது அன்றாட வேலைகளை முடித்து சிறை அறைக்கு சென்றபின் மற்ற கைதிகள் சிறை வளாகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் குறிப்பிட்ட கைதிகளுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றில் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சிறையில் 5-வது அறையில் அடைக்கப்பட்டிருந்த வடிவேல் முருகன் என்ற கைதி பிளேடு வைத்திருப்பதாக ஜெயில் வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கைதியிடம் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. அதன் பின் கைதி வடிவேல் முருகன் நேற்று 3-வது அறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு அவருடன் தங்கியிருந்த கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயில் வார்டன்களிடம் வாக்கு வாதம், ரகளையில் ஈடுபட்ட னர். மேலும் அவர்கள் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயில் போலீஸ் சூப்பிரண்டு ரமா பிரபா மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட 27 கைதிகளை மதுரை ஜெயிலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை முதற்கட்டமாக 13 கைதிகள் மதுரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். வேனில் ஏறிய ஒரு கைதி திடீரென தலையால் கண்ணாடியில் மோதி ரகளை செய்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதுடன் வேன் கண்ணாடியும் உடைந்தது.
அவருக்கு ஆதரவாக மற்ற கைதிகளும் கோஷமிட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு டன் 13 கைதிகள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஜெயிலில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகளின் ரகளை போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
- சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
- சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.
டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சரை கலெக்டர் அழைத்து செல்லாததால் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்தனர்.
- அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
தமிழக அரசின் நிலமீட்பு நடவடிக்கை தொடர்பாக பேட்டி அளிப்பதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் ஜெயசீலன் அலுவலகத்தில் இல்லை. இந்த நிலையில் அமைச்சர் மட்டும் தனியாக பேட்டி அளித்து சென்றார்.
கலெக்டர் ஜெயசீலன் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் ஆய்வு பணிக்காக சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடக்கும்போது அமைச்சர் பங்கேற்றால், கலெக்டர் அவரை வரவேற்று அழைத்து செல்வது மரபு.
அதன்படி அமைச்சர் கலெக்டர் வருகைகாக காரில் சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் கலெக்டர் வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் விருந்தினர் மாளிகைக்கு சென்று விட்டார். அமைச்சரை கலெக்டர் அங்கு சென்று சந்தித்தார். அப்போது, ஏன் அரசு நடைமுறைகளை மாற்றுகிறீர்கள்? என்று கலெக்டரிடம் அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அமைச்சரை கூட்டத்திற்கு கலெக்டர் அழைத்து சென்றார். அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மூத்த அமைச்சரை கலெக்டர் வந்து கூட்டத்திற்கு அழைத்து செல்லாததால் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.






