என் மலர்tooltip icon

    வேலூர்

    அரக்கோணம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நெமிலி அருகே உள்ள அசனல்லி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை நெமிலி தாலுகா அலுவலகம் எதிரே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பனப்பாக்கத்தில் இருந்து நெமிலி நோக்கி வந்த லாரி சம்பத் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் சலூன் தொழிலாளி ஒருவர் உண்டியல் மூலம் பணம் திரட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #ArakkonamRoad

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நடப்பதற்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் முடிந்தபின்னர் சரிவர மூடப்படவில்லை.

    அரக்கோணம், பழனிப்பேட்டை, வி.பி.கோவில் தெரு மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்புஅந்த வழியாக நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உள்பட பல்வேறு துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரக்கோணம் வி.பி.கோவில் தெருவை சேர்ந்த ஆர்.மோகன் (வயது 40) என்பவர் தனது சலூன் கடை முன்பாக நேற்று தெருவில் உண்டியல் வைத்து தெருவை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வலியுறுத்தி ஒவ்வொரிடமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் வசூலித்து நூதன போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உண்டியலில் ஒரு ரூபாயை செலுத்தினர்.

    இது குறித்து ஆர்.மோகன் கூறுகையில், ‘‘நான் வசிக்கும் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தெருக்களை சீரமைக்க நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது கடை முன்பாக உண்டியல் வைத்து ஒரு நபரிடம் ஒரு ரூபாய் வசூலித்து போராட்டம் நடத்துகிறேன். உண்டியலில் வசூலிக்கப்படும் பணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார்.

    நகராட்சி ஆணையாளர் சண்முகம் (பொறுப்பு) கூறுகையில், ‘‘அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடியாத தெருக்களில் பணிகள் முடிக்கப்படும். மிக விரைவில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.  #ArakkonamRoad

    அரக்கோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல் கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,342 மாணவ, மாண விகள் படித்து வருன்றனர்.

    கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வேலூர் கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு, பேராசிரியர் மீதான பாலியல் புகார் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

    மேலும், பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது. பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூ ரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள சேந்தமங்கலம் ரெயில்வே கேட்அருகில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

    தகவலறிந்துவந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் மாணவ, மாணவிகளை கலைந்து கல்லூரிக்கு செல்லுமாறு எச்சரித்தனர்.

    போராட்டத்தை கைவிட மறுத்தால், கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரித்தனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், மாணவிகளுக்கு ஆதரவாக திரண்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டுவதில் அர்த்தமில்லை. உங்கள் வீட்டு பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினை என்றால் ‘சும்மா விட்டு விடுவீர்களா’ என்று கேள்வி எழுப்பிய பெண்கள், புகார் சம்பந்தமாக பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் சார்பனாமேட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையின் பூட்டை உடைத்து 2 டி.வி.க்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    வேலூர்:

    வேலூர் சார்பனாமேட்டில் ரீபால் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சையத் கலீம்அகமத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவு மாணவர்கள் சேர்க்கும் நோக்கத்தோடு ‘ஸ்மார்ட்’ வகுப்பறை தொடங்கப்பட்டது. அப்போது 2 எல்.இ.டி. டி.வி.க்கள் வாங்கப்பட்டன. அவற்றின் மூலம் ஆசிரியர்கள் எளிய முறையில் மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்தி வந்தனர்.

    மேலும் மாணவ-மாணவி களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு அரிய பொருட்கள் பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

    இப்பள்ளியில் நேற்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் பள்ளி தலைமையாசிரியர் சையத் கலீம்அகமத் பள்ளிக்கு வந்தார். அங்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு வகுப்பறை சுவரில் பொருத்தப்பட்டிருந்த 2 எல்.இ.டி. டி.வி.க்களையும் மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்.இ.டி. டி.வி.க்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சையத் கலீம்அகமத் கூறுகையில், ‘திருட்டை தடுக்க இப்பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடந்தாண்டு பள்ளியின் பின்பகுதி வழியாக மாடிக்கு வந்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களில் தங்கள் உருவம் பதியக்கூடாது என்பதற்காக வெள்ளை தாள்களை ஒட்டி, பின்னர் அவற்றை திருடி சென்றனர்.

    தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பள்ளியின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை பதிவு செய்யும் கருவியையும் (ஹார்ட் டிஸ்க்), மற்றும் 2 டி.வி.க்களையும் திருடி சென்றனர். இந்த நிலையில் 3-வது முறையாக இப்பள்ளியில் மர்மநபர்கள் புகுந்து வகுப்பறையின் பூட்டை உடைத்து 2 எல்.இ.டி. டி.வி.க்களை திருடி சென்று உள்ளனர். பள்ளியில் தொடர்ந்து திருடும் மர்மநபர்களை உடனடியாக பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
    வேலூரில் 28 ஆண்டு ஜெயில் வாழ்க்கைக்கு பின் இப்போது 65 வயதான நபர் தனது காதல் மனைவியுடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று வேலூர் ஆண்கள் ஜெயிலில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் என்ற சுப்பிரமணியம் (வயது 65) என்பவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார்.

    அவரது விடுதலையும் அவர் காதல் மனைவியுடன் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் வருமாறு:-

    இலங்கையை சேர்ந்தவர் பக்கா என்றழைக்கப்படும் விஜயா (60). இவர் இலங்கை தமிழர் பிரச்சினையின் போது அகதியாய் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர். அகதியாய் வந்த அவர் தெருக்களில் நடனம் ஆடி அதில் வரும் வருவாயை கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

    கலைக்கூத்தாடியான விஜயாவின் நடனத்தால் மிகவும் கவரப்பட்டு அவரை காதலித்தார். இந்த காதலை அவரது வீட்டார் ஏற்க மறுத்தனர். இதனால் சுப்பிரமணியம் 1985-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி விஜயாவுடன் சேர்ந்தார். அதை தொடர்ந்து விஜயா, சுப்பிரமணியத்துக்கு நடனம் ஆடவும் கற்றுக்கொடுத்தார்.

    இருவரும் திருமணம் செய்து கொண்டு நடனமாடி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தனர். நடனமாட செல்லும் இடங்களில் தங்கி தங்களது அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். சுமார் 5 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.

    இந்த நிலையில் ஒருநாள் இரவு இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை காலம் புரட்டிப்போட்டது. இவர்கள் நடனம் ஆடி முடித்த களைப்பில் சாலை ஓரம் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பக்கா விஜயாவை ஒருவர் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் விஜயாவை காப்பாற்ற தாக்கியுள்ளார். அதில் அவர் தலையில் அடிபட்டு இறந்தார்.

    வழிப்பறியில் கொலை செய்ததாக தம்பதிகள் 2 பேர் மீதும் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயாவையும், சுப்பிரமணியத்தையும் 1990-ம் ஆண்டு கைது செய்தனர். இருவருக்கும் கோவை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

    இதையடுத்து வேலூர் பெண்கள் சிறையில் விஜயாவும், ஆண்கள் ஜெயிலில் சுப்பிரமணியமும் அடைக்கப்பட்டனர்.

    தங்களுக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில் இருவரும் 25 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். சிறையில் இருந்த விஜயாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனநோயாளியாக மாறினார். அவரது பேச்சும் பறிபோனது. பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தார். பின்னர் அவர் வேலூர் அருகே அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார். அவர், தனது காதல் கணவருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தார்.

    இந்நிலையில் தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி நேற்று வேலூர் மத்திய சிறையில் இருந்த சுப்பிரமணியம் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் தனக்காக காத்திருக்கும் மனைவியை காண முதியோர் இல்லம் சென்றார்.

    அங்கு தனது கணவருக்காக 28 ஆண்டுகள் காத்திருந்த விஜயா சிறு குழந்தையாக மாறி சுப்பிரமணியத்தை பார்த்ததும் ஓடிச்சென்று கையை பிடித்து அழுது கண்ணீர் வடித்தார். இந்தநிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    சுப்பிரமணியத்தை மாமா என்றழைக்கும் விஜயா தனது மாமாவை முதியோர் இல்லத்தில் கூடியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தார்.

    விஜயாவை பார்த்த சுப்பிரமணியம் 20 முறையேனும் நலம் விசாரித்து சாப்பிட்டாயா.. சாப்பிட்டாயா.. என கேட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அவரது வாழ்வில் காதல் அத்தியாயம் மீண்டும் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியம் கூறும்போது, எங்களை காப்பாற்றிக்கொள்ள செய்த செயலால் நாங்கள் தண்டனையை அனுபவித்து விட்டோம். இனி நாங்கள் இருவரும் எங்களது சொந்த ஊருக்கே செல்ல இருக்கிறோம். அங்கு எங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் கிடைக்கும் வேலையை வைத்து வாழ்ந்து கொள்வோம். எனது உயிர் இருக்கும் வரை அவளை கைவிடமாட்டேன்.

    நான் காப்பாற்றுவேன். இனி அவளுக்கென்று என்னை விட்டால் யாரும் கிடையாது. அவளுக்கு ஒன்றும் தெரியாது. என்னை மட்டுமே நம்பி உள்ள அவளை நான் காப்பாற்றவில்லையெனில் அந்த பாவம் என்னை சும்மாவிடாது என்றார்.

    குடியாத்தம் அடுத்த பிச்சானூரில் உள்ள வெங்கடேச பெருமாள் சிலையில் நீர் வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பிச்சானூர் அப்பு சுப்பையர் வீதியில் தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று காலை வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அப்போது, வெங்கடேச பெருமாள் சிலையின் மூக்கு பகுதியில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்தது. அர்ச்சகர் துணியை வைத்து துடைத்தும் தண்ணீர் வருவது நிற்கவில்லை.

    பக்தர்கள் சாமி சிலையில் வடிந்த தண்ணீரை ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கினர். இத்தகவல், பிச்சனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பரவியது.

    ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்து வெங்கடேச பெருமாளை வணங்கி செல்கின்றனர்.
    அரக்கோணத்திலிருந்து மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TnRain #NDRF

    அரக்கோணம்:

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நாளை மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

    இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களை மதுரை, ஊட்டி, கோவை, குமரி போன்ற 5 மாவட்டங்களுக்கு துனை கமான்டர் ராஜன்பாலு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து உதவி கமான்டர் கூறுகையில்:-

    இந்த குழுவினர் தங்களுடன் மரம் அகற்றும் கருவிகள் பைபர் படகுகள் நீச்சல் வீரர்களுக்கான உடைகள் என பல்வேறு கருவிகளுடன் எதற்கும் தயாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இது தவிர கேரளாவிற்கும் 5 குழுக்கள் சென்றுள்ளனர். ஏற்கனவே திருச்சூரில் 3 குழுக்கள் உள்ளனர் எதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

    இதேபோல் அரக்கோணம் தாலுகாவில் பேரிடர் தாக்கும் பகுதிகள் என 8 கிராமங்களை ஆய்வு செய்து நேற்று மாலை தாசில்தார் பாபு கிராமத்துக்கு 10 பேர் வீதம் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மீட்பு பணிகளுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தயங்காமல் ஒன்றினைந்து செயல்பட்டால் பெரும் சேதம் தவிர்க்க உதவியாக இருக்கும். ஆகவே யார் வேண்டுமானாலும் எதிர்பாராமல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. #TnRain #NDRF

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyFestival #ADMK

    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 95 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 7வது கட்டமாக இன்று காலை மேலும் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 9 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். #MGRCenturyFestival #ADMK

    அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியான வழக்கில் இழப்பீட்டு தொகை செலுத்தாததால் சேலம் கோட்டம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 14). புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 2008-ம் ஆண்டு மாலை பள்ளியிலிருந்து புறப்பட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது திருப்பத்தூரிலிருந்து வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பஸ் சைக்கிள் மீது மோதியதால் மாணவன் படுகாயம் அடைந்தார். பின்னர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சில நாட்களில் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக இறந்த மாணவனின் தந்தை சாமு என்கிற முருகேசன் வாணியம்பாடி கோர்ட்டில் இழப்பீட்டுத்தொகை வழங்ககோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு இறந்த மாணவனுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதுவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரூபாயை சேலம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் இருந்து வந்தது.

    இதுகுறித்து முருகேசன் வாணியம்பாடி கோர்ட்டில் மீண்டும் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராமசந்திரன் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி பஸ் நிலைத்திற்கு வந்த சேலம் கோட்டம் அரசு பஸ்சை கோர்ட்டு பணியாளர்கள், வக்கீல் குணசேகரன் முன்னிலையில் ஜப்தி செய்தனர். #tamilnews
    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர், கமி‌ஷனர் ஆய்வு செய்தனர்.
    வேலூர்:

    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடக்கிறது.

    தமிழகத்தில் பலத்த மழை செய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டு தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தபட்டுள்ளது.

    இதையடுத்து வேலூர் மாநகராட்சி பகுதியில் பணிகள் முன்னேற்பாடு துரிதபடுத்தபட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

    பலத்த மழை பெய்தால் நிக்கல்சான் கால்வாயில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதில் அடைப்பு ஏற்பட்டால் முள்ளிப்பாளையம், இந்திராநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரும். இதனை தவிர்க்க நிக்கல்சன் கால்வாய் தூர்வாரப்பட்டது.

    பெங்களூர் ரோட்டில் மங்காய் மண்டி அருகே கால்வாயில் இருந்த அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது.

    பழைய பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. பணிகளை கலெக்டர் ராமன், சப்-கலெக்டர் மெகராஜ், கமி‌ஷனர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவி கமி‌ஷனர் மதிவாணன், மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதேபோல காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. #tamilnews
    தமிழகத்துக்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TN #RedAlert #NDRF #Rain #TNRain
    வேலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

    இந்த ரெட் அலர்ட்டை தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், கடலில் மீன் பிடிக்க சென்றவர்களை கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மழையில் இருந்து தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்நிலையில், தமிழகத்தின் மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து இந்த மீட்புக்குழு தற்போது இந்த 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. #TN #RedAlert #NDRF #Rain #TNRain
    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் 3 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக் கெடுத்தது. அதிகபட்சமாக வேலூர், ஆம்பூரில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலை சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    வேலூர் கோட்டை சுற்றுச்சாலை புதிய பஸ்நிலையம் பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த தண்ணீரை மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அரக்கோணம், வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் பகுதிகளில் பலத்த மழையும் மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்தது.

    ஏலகிரி மலையில் பலத்த மழையால் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. மதிய நேரங்களில் இதமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வேலூர்-32.3, ஆம்பூர்-32, வாணியம்பாடி-27, ஆலங்காயம்-23.6, அரக்கோணம்-28.2, காவேரிப்பாக்கம்-23, வாலாஜா-18, சோளிங்கர்-22.2, திருப்பத்தூர்-20.2, ஆற்காடு-31, குடியாத்தம்-22, மேல்ஆலத்தூர்-40.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம், இரவு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து கொட்டியது. நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.செங்கம், சாத்தனூர்அணை, கலசப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் மழைவெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஓடியது. அதிகபட்சமாக செங்கத்தில் 64.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-52.8, ஆரணி-49.6, செய்யாறு-32.5, செங்கம்-64.2, சாத்தனூர் அணை-60, வந்தவாசி-40.2, போளூர்-34.4, தண்டராம்பட்டு-40.8, கலசப்பாக்கம்-58.2.

    ×