என் மலர்tooltip icon

    வேலூர்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.

    இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.

    விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.

    இதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.

    மேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
    வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெல்லக்குட்டை பூவாங்கா மரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (60), விவசாயி. இவர், 80 வயதை கடந்த தாய் காத்தாயி அம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.

    பிரகாசத்திற்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் பிரகாசத்தின் வீட்டிற்குள் இருந்து இன்று காலை திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

    அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டருகே சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுப்பற்றி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பாயில் காத்தாயி அம்மாள் பிணமாக கிடந்தார்.

    பிரகாசத்தின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. உடல்களும் அழுகி துர்நாற்றம் வீசியது. இதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் தாயை கொன்று விட்டு பிரகாசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் பாகாயத்தில் இன்று காலை லாரி மோதி மேஸ்திரி உடல் நசுங்கி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த வாசு மகன் சுபாஷ்(36) மேஸ்திரி. இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாகாயம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின் டயருக்குள் சிக்கினார். அவர் மீது லாரி டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுபாஷ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின் றனர். இந்த விபத்தால் பாகாயத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவனை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் நேதாஜிநகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி பிரபாவதி இவர்களது மகன் சக்திவேல் (வயது 11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    சக்திவேல் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேனில் வந்த 5பேர் கொண்ட கும்பல் மாணவனை திடீரென கடத்தி சென்று விட்டனர். இதனை கண்ட சக்திவேலின் நண்பன் இது குறித்து அவரது அம்மாவிடம் கூறினார்.

    அதிர்ச்சியடைந்த பிரபாவதி இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

    வேலூர் அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறிய புகாரில் ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர் கோவிந்தரெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ள சதீஷ்குமார் என்பவர் சில நாட்களாக மாணவிகள் சிலரிடம் தொடர்ந்து தவறாக நடந்து கொண்டு சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, மாணவிகள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தலைமை ஆசிரியை புகார் தெரிவித்த மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் புலேந்திரனும் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். உடற்கல்வி ஆசிரியர் நேற்று பள்ளிக்கு வரவில்லை.

    மாவட்ட கல்வி அலுவரிடம், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை மாணவிகள் புகாராக பதிவு செய்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலரிடவம் மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார்.

    முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் சதீஷ்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், புகார் தொடர்பாக ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

    வாலாஜா அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்தவர் கல்பனா (வயது 36). கணவர் ரமேஷ்குமாரை பிரிந்த இவர், 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், சென்னை ஆவடியில் போலீஸ் காரராக பணியாற்றிவரும் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் கல்பனாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து போலீஸ்காரர் அடிக்கடி கல்பனா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது, கல்பனாவின் 18 வயது நிரம்பிய மூத்த மகளை அடைய அவர் விரும்பினார்.

    மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு கள்ளக்காதலியை வற்புறுத்தினார். கல்பனா ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    மகள் மீதான மோகத்தில் இருந்த கள்ளக்காதலனை இனிமேல் தன்னை சந்திக்க வீட்டிற்கு வர வேண்டாம் என்று கல்பனா எச்சரித்தார்.

    ஆனால், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் கல்பனா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மகள்கள் கதறி அழுதனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, கல்பனாவின் மூத்த மகள் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், தன்னுடைய தாய்க்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தால் தன்னை திருமணம் செய்து வைக்க குமரேசன் சண்டை போட்டார்.

    தாய் மறுத்தார். இந்த ஆத்திரத்தில் என்னுடைய தாயை போலீஸ்காரர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 9-வது கட்டமாக இன்று காலை மேலும் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 8 கட்டங்களாக மொத்தம் 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 9-வது கட்டமாக இன்று காலை மேலும் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 9 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்த தற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

    ஆம்பூர் அருகே பாலாற்றங்கரையில் சுடுகாட்டில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் பாலாற்றில் உள்ள சுடுகாட்டில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. இங்கு மணல் அள்ளுவதால் உடல்களை அடக்கம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

    மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆம்பூர் தாலுகா போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 29), கோவிந்தன் (24), ராஜா (37), கார்த்திகேயன் (28), கோவிந்தராஜ் (56), கேசவராஜ் (38) ஆகியோரை கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வேலூர் அருகே ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ரவுடி கார் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வீச்சு என்கிற தினேஷ் (வயது 32). இவர் மீது கொலை, கொள்ளை, ஆட் கடத்தல் என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமாரை கொன்று பாலாற்றில் புதைத்த வழக்கு உள்ளது.

    இதைத்தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் வீச்சு தினேஷ் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஜாமீனில் வெளியில் இருந்த அவர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டார்.

    சத்துவாச்சாரி ரங்கா புரத்தில் கடந்த 22-ந் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவுடி வீச்சு தினேஷை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    வீச்சு மற்றும் கூட்டாளிகள் சத்துவாச்சாரியை சேர்ந்த மணிகண்டன் (27), நவீன் (24) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை ரவுடி வீச்சு தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் காரில் அவரை அழைத்து சென்றனர். கார் ஜெயிலை கடந்து வேலூர் டவுன் நோக்கி சென்றது. தொரப்பாடியில் உள்ள ஏ.டி.எம். அருகே காத்திருந்த 6 பேர் கும்பல் வீச்சு தினேஷ் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    இதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனே கும்பல் அரிவாள்களுடன் காரை நோக்கி வந்தனர். சுதாரித்து கொண்ட வீச்சு தினேஷ் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர்.

    சுதாரித்துக்கொண்ட கும்பல் பைக் மற்றும் காரில் தப்பி சென்றுவிட்டனர். குண்டு வீச்சில் வீச்சு தினேஷ் கார் முன்பகுதி சேதமடைந்தது. காரை நிறுத்தாமல் வந்த அவர்கள் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அருகே காரை நிறுத்திவிட்டு போலீஸ் நிலையத்துக்குள் சென்றனர். சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

    வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதர் இது பற்றி வீச்சு தினேஷிடம் விசாரணை நடத்தினர். மேலும் குண்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    சத்துவாச்சாரி பாலாற்றில் நேதாஜி நகரில் இருந்து காங்கேயநல்லூர் செல்லும் பாதையில் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிச்சை பெருமாள் கொலை செய்யப்பட்டார்.

    இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொர்பாக வீச்சு தினேசை கும்பல் கொலை செய்ய முயன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தொரப்பாடியில் உள்ள காண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குண்டு வீசிய கும்பல் குறித்து துப்புதுலக்கி வருகின்றனர்.

    வேலூரில் ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பட்டபகலில் ரவுடி கார் மீது கும்பல் வெடிகுண்டு வீசியுள்ளனர்.

    இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான சினிமாவில் பள்ளி காதலர்கள் மீண்டும் சந்தித்து காதலிப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதுபோல பள்ளிக் காதலனை மீண்டும் சந்தித்த இளம்பெண் கணவரை பிரிந்து காதலனை மணந்துள்ளார்.
    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது.

    பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே இளம்பெண் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

    சில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர கணவர் சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்ட இளம்பெண், கணவர் சக்திவேலுவுடன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது அவரது மனைவி வேறொரு வாலிபருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியா கிரிவலம் செல்வதை கண்டு திடுக்கிட்டார்.

    அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் புதுமண தம்பதிகள் போல நடந்து கொள்வதை கண்டு சந்தேகம், அடைந்து அவர்களை மறித்துள்ளார்.

    அப்போது இளம்பெண்ணுடன் கிரிவலம் வந்தவர் அவரது பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்பதும் அவரை புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணின் காதல் திருவிளையாடல் வெளிச்சத்துக்கு வந்தது.

    இளம்பெண் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்தார். இருவரும் வெவ்வேறு பிரினர் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணை சாலை நகரில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க வைத்துள்ளனர்.

    அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை கேதாண்டபட்டி இடையே 20 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார்,சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்-நெமிலி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பனபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்மாம்பாக்கம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தென் மாம்பாக்கம் திருமால்பூர் இடையேயான சாலை குண்டும், குழியுமாக உள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பனப்பாக்கம்-நெமிலி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    ×