என் மலர்
வேலூர்
வேலூரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் மாலை வரை வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 1 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழையும், தொடர்ந்து மிதமான மழையும் பெய்தது.
இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தின் உட்புறம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கன்சால்பேட்டை சமத் நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர்- ஆற்காடு சாலையில் மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து ஓடியது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல வாணியம்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூர், திருப்பத்தூர், காட்பாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.வாணியம்பாடியில் அதிகபட்சமாக 50.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
வேலூர்-45.4, ஆம்பூர்- 39.2, வாணியம்பாடி-50.2, திருப்பத்தூர்-20.3.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மாலை மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாத்தனூர் அணை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. மழை வெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து ஓடியது.
போளூர், கலசப்பாக்கம், செங்கம், திருவண்ணாமலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாத்தனூர் அணையில் அதிகபட்சமாக 73.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவண்ணாமலை-28, செங்கம்-21.6, சாத்தனூர் அணை-73.6, போளூர்-48.4, கலசப்பாக்கம்-27, கீழ்பென்னத்தூர்-8.8. #tamilnews
ஆற்காடு அடுத்த கலவை சென்னலேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
ஜெய்சங்கர் தன்னுடைய பைக்கை கலவை காளிஅம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வையாபுரி என்பவரது வீட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வையாபுரி வீட்டு வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஜெய்சங்கர் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தார். அப்போது, பைக் திருடு போயிருந்தது.
உடனடியாக கலவை போலீசில் புகார் அளித்தார். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். கலவை பஸ்நிலையத்தில் திருடு போன ஜெய்சங்கரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.
அங்கிருந்த பைக் திருடிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பள்ளிகொண்டா வேப்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் என்பது தெரியவந்தது.
மற்றொருவர், பள்ளிகொண்டா ஒலகாச்சி தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி மகன் வைரம் என்கிற பிரபு (20) என்பது தெரியவந்தது.
பிளஸ்-1 மாணவனின் பாட்டி வீடு கலவை அகரம் பகுதியில் உள்ளது. இங்கு, மாணவனும், அவருடைய நண்பர் பிரபுவும் அடிக்கடி சென்றனர்.
அப்போது, ஆற்காடு மற்றும் கலவை பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம், வாழத்தோப்பு பகுதியில் பதுக்கியுள்ளனர்.
திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தனர். மது குடிப்பது, பெண்களுடன் சுற்றுவது என பணத்தை அள்ளிவீசி செலவழித்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து, ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மாணவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பிறகு வெட்டுவானம், வாழத்தோப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனையிட்டனர்.
அங்கு 18 திருட்டு பைக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவன் உள்பட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). மோட்டார் சைக்கிள்மெக்கானிக். இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் சுமார் 17 வயதுள்ள மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மாணவி திடீரென காணாமல் போனார். மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை, மாணவியை மெக்கானிக் பிரவீன்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசில் புகார் செய்தனர்.
மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சிறுமியை கடத்தி செல்ல முயன்ற மெக்கானிக் பிரவீன்குமாரை பேரணாம்பட்டு வீ.கோட்டா சந்திப்பு சாலையில் போலீசார் பிடித்தனர்.
இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பான வரவேற்புக் குழு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
பாலியல் தொல்லை பற்றி பெண்கள் தற்போது வெளிப்படையாக புகார் கூறிவருவது வரவேற்கத்தக்கது. பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிகாரம் படைத்த ஆணையத்தை அமைக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த 3-ந் தேதியில் இருந்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணாதது கண்டிக்கத்தக்கது.
பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மணல் குவாரி அமைத்தால் பாலாறு வறண்டு போகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.
எனவே, பாலாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தென்பெண்ணை, பாலாற்றை இணைக்கும் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையை கண்டித்து வரும் 16-ந் தேதி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.

பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 6 மாதங்களாக ஜெயிலில் உள்ளார். நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட பாலியல் புகாரில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியும்.

பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். #mutharasan #nirmaladevi
பெரணமல்லூரை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் ராமலிங்கம் சாமி கோவிலும், வெங்கடேசப்பட்டி கிராமத்தில் அனுமான் கோவிலும் உள்ளது. இந்த 2 கோவில்களிலும் கடந்த 10-ந் தேதி இரவு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், கன்னியப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமணி கிராமத்தில் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) மற்றும் திருமணி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (18) என்பதும், ராமலிங்க சாமி கோவில், அனுமான் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (வயது 31). இவர்களுடைய மகன் நிதிஷ் (6). திப்பசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நிதிசுக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு டாக்டரிடம் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை என்று தெரிகிறது.
இதனையடுத்து சிறுவன் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நிதிஷ் பரிதாபமாக உயிரிழந்தான். மகன் இறந்தது கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜீவிதா மருத்துவ மனையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்காளதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா (வயது 30). இவர் அங்குள்ள 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி வேலூருக்கு அழைத்து வந்தார்.
வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற போகிறோம் என்ற ஆசையில் வேலூர் வந்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சிறுமியை வேலூரில் உள்ள லாட்ஜில் தங்க வைத்த முஸ்கானா சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தினார்.அதற்கு சிறுமி மறுத்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபட மிரட்டினார். அங்கிருந்து தப்பிய சிறுமி கிருஷ்ணா தியேட்டர் அருகே ஓடி சென்றார்.
அவரை பின் தொடர்ந்து சென்ற முஸ்கானா சிறுமியை மடக்கி பிடித்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.
இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முஸ்கானாவை கைது செய்தனர்.
மேலும் அவரது பாஸ்போர்ட் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சரஸ்வதி என்பவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர், சரியாக பணிக்கு வருவதில்லை, குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்குவதில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில், சரஸ்வதி பி.எம்.செட்டி தெருவில் உள்ள சத்துணவு மையத்துக்கு கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டார். சரஸ்வதிக்கு பதிலாக, பவானி என்பவர் மக்கான் பகுதியில் உள்ள மையத்திற்கு நியமிக்கப்பட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட சரஸ்வதி, தான் ஏற்கனவே வேலை பார்த்த அம்பேத்கர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று பவானியை பணிசெய்யவிடாமல் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறையை பூட்டி விட்டு, அதன் சாவியை எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி மற்றும் அதிகாரிகள் மக்கான் பகுதியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்றனர்.
அப்போது சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறை பூட்டப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பூட்டை உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை எடுத்து சமையல் செய்யப்பட்டது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியின் செயல்பாடுகள் குறித்தும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
அதன்பேரில் சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியை கலெக்டர் ராமன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி அருகேயுள்ள சேஷாசலம் வனப்பகுதியில் குர்ராலபாடி என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் சத்தம் கேட்டதால் அந்த பகுதிக்கு போலீசார் சென்று செம்மரம் வெட்டி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அடுத்த பெரிவள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெகன் (வயது 25). வேலூர் மாவட்டம் மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது.
மேலும் ஜெகன் போலீசாரிடம் கூறுகையில் ஒடுக்கத்தூரை சேர்ந்த ராஜாகாந்தி என்பவர் 10 பேரை அழைத்து வந்து திருப்பதி பஸ்சில் ஏற்றி அனுப்பியதாகவும் கடந்த ஒரு வாரமாக செம்மரங்களை வெட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
தருமபுரியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 62). கடந்த 2007-ம் ஆண்டு ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இந்த பெண் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சின்னம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர் ஜெயிலுக்குள் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன் கண்டெடுக்கப்பட்டது.
வேலூர் மத்திய ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது. கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களும் ஜெயிலுக்குள் அதிகமாக புழங்குகின்றன.
குறிப்பாக,ஜெயிலில் அடைக்கப்படும் ரவுடிகள் உள்ளிருந்தபடியே வெளியில் உள்ள கூட்டாளிகளிடம் செல்போனில் பேசி கொலை உள்ளிட்ட குற்றசெயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சமீபத்தில், ஜாமீனில் வெளிவந்த சத்துவாச்சாரியை சேர்ந்த ரவுடி வீச்சு தினேஷை நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூர் ராஜா கூட்டாளிகள் கொல்ல முயன்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஜெயிலில் இருந்து வசூர் ராஜா செல்போன் மூலம் தான் கூட்டாளிகளுக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வசூர் ராஜா திருச்சி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், ஜெயிலில் உள்ள 2-வது கண்காணிப்பு கோபுரம் அடியில் இன்று காலை பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்ததை சிறைக் காவலர்கள் பார்த்தனர். அந்த இடத்தில் தோண்டி பார்த்தனர்.
மண்ணுக்குள் ஒரு செல்போன் இருந்தது. கைதிகள் புதைத்து வைத்தது தெரியவந்தது. செல்போனை கைப்பற்றிய காவலர்கள், சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதுபற்றி பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
செல்போனை புதைத்து வைத்திருந்த கைதி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று இரவு 7 மணிவரை கோவில் அருகே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது.
இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துபந்தல் வாகனத்தில் உற்சவரான ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில், மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்தின் முன்பு கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, திருப்பதி துணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இன்று இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறார்.
விடுமுறை தினத்தில் கருட சேவை வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்க்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திருமலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது.
இதேபோல் பெங்களூரு பகுதியில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருட சேவை அன்று பெங்களூரிலிருந்து வரும் பஸ்கள் அன்னமய்யா சர்க்கிள் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்படும்.
மேலும் சிறப்பு வாகன பராமரிப்பு குழுக்களும் மலைப்பாதையில் தயார் நிலையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் மருத்துவம், சுகாதாரம் சார்பில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple






