என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் அருகே எறும்புத்தின்னியை வேட்டையாடி செதில்களை கடத்திய ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி மற்றும் வன அலுவலர்கள் தமிழக-ஆந்திர எல்லையான சைனகுண்டா சோதனை சாவடியில் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஆந்திராவில் இருந்து பைக்கில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சிறிய மூட்டையில் 1½ கிலோ அரியவகை கொண்ட எறும்புத்தின்னி செதில்கள் இருந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஆந்திர மாநிலம் பலமனேர் பழையபேட்டை மசூதி தெருவை சேர்ந்த முகமது இஸ்லாமில் (25) என்பது தெரியவந்தது.

    இவர், எறும்புத்தின்னியை வேட்டையாடி செதில்களை வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபரிடம் விற்பனை செய்ய கடத்தி வந்ததாக கூறினார்.

    இதையடுத்து, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முகமது இஸ்மாயில் கைது செய்யப்பட்டார்.

    இச்சம்பவத்தில் தொடர் புடைய வாணியம்பாடியை சேர்ந்த தொழில் அதிபரை பிடிக்கவும் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதிகளில் அரிய வகை எறும்புத்தின்னிகள் அதிகம் உள்ளன.

    கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உண்டு வாழ்கின்றன. எறும்புத்தின்னிகளின் உடல் முழுவதும் கடினமான செதில்கள் நிரம்பியிருக்கும்.

    மனித நடமாட்டம் அல்லது மற்ற விலங்குகள் தாக்க முற்பட்டால் எறும்புத்தின்னி தனது உறுப்புகளை சுருட்டிக் கொண்டு பந்து போன்று தற்காத்துக் கொள்ளும். எறும்புத்தின்னிகளின் செதில்கள் ‘வயகரா’ தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    எறும்புத்தின்னிகளின் செதில்களுக்கு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நல்ல விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால், இங்குள்ள வனப்பகுதிகளில் செதில்களுக்காக எறும்புத்தின்னிகளை வேட்டையாட மர்ம நபர்கள் ஏராளமாக சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வேலூர் பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

    அதன்படி இன்று பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.

    ஆண்கள் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்றனர். சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஜோலார்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் செல்போன்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய தெருவில் வசிப்பவர் ரஞ்சன் (வயது 67). ரெயில்வே ஒய்வுபெற்ற ஊழியர். இவர் நேற்று இரவு வீட்டின் கதவை லேசாக சாத்தி விட்டு குடும்பத்துடன் மாடியில் படுத்து தூங்கினார்.

    அப்போது வீட்டினுள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 4 செல்போன்களை திருடிச் சென்று விட்டனர்.

    மேலும் அடுத்தடுத்த வீடுகளான முகமது அலி என்பவர் வீட்டில் 3 செல்போனும், நாசர் என்பர் வீட்டில் 3 செல்போனும் உள்பட மொத்தம் 10 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த 3 பேரும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்த வீடுகளில் செல்போன்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூரில் ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இவர், ரெயில் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று அவரது கம்ப்யூட்டர் மையத்தில் சோதனை செய்தனர். அப்போது ராஜேஷ்குமார் தனது சொந்தக்கணக்கில் தட்கலில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் 43 ரெயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாகும். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    குடியாத்தம் அருகே இறந்து போன மகன் பிறந்த நாளில் அவனது பெற்றோர், தம்பி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் பழைய காலனியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பரிமளா (34). தம்பதிக்கு நிகேஷ் (7), நிகில் (3) என்ற 2 மகன்கள். இதில் நிகேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு இறந்தார்.

    நிகேஷ் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் திருவேங்கடம் பரிமளா தவித்தனர். அவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். நேற்று இறந்து போன நிகேஷ் பிறந்த நாளாகும். இதனால் தம்பதியினர் காலையில் சுறுசுறுப்பாக இருந்தனர்.

    வீட்டில் கேக் வெட்டி நிகேஷ் பிறந்த நாளை கொண்டாடினர். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இறந்து போன மகன் பிறந்த நாளை நினைவு கூறி இனிப்பு, கேக் வழங்கினர்.

    நாள் முழுவதும் மகனின் நினைவுகளில் மூழ்கி கிடந்த அவர்களால் மகனை மறக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தங்களது 3 வயது மகன் நிகிஷை தூக்கில் தொங்கவிட்டு திருவேங்கடம், பரிமளா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்றபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 பேரும் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிய அமமுகவை சேர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #ministerkcveeramani
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி ஒருவரின் செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் ஒன்று வந்தது. அதனை பார்த்தபோது அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் தகவல் பரப்பட்டிருந்தது.

    அது குறித்து அவர் ஜோலார்பேட் டை அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஆ.ரமேசுக்கு தகவல் அளித்தார். ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியவர் எண்ணை பார்த்தபோது அந்த எண் புத்துக்கோவிலை சேர்ந்த அ.ம.மு.க.வை சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. அவர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் புகார் அளித்தார்.

    அதில் ஒன்றிய அ.ம.மு.க.செயலாளர் இளங்கோ தூண்டுதலின்பேரில் சேகர் இவ்வாறு ‘வாட்ஸ்அப்’பில் அவதூறு பரப்பியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் சேகர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #ministerkcveeramani 
    மாணவிகளை தொடர்ந்து பேராசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு, பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது.

    பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 8-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, பல்கலைக்கழக விசாரணைக்குழு நேற்று கல்லூரியில் விசாரணையை தொடங்கியது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மூலம் தான் பாலியல் புகார் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடம் பல்கலைக்கழக குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கூறினர். பேராசிரியைகள் சிலரும், பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உண்மைதான். பேராசிரியர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியதால் விசாரணை குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

    கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணைக்கு பிறகு, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    வேலூர் ஜெயிலில் இருந்து செல்போனில் வியாபாரியை மிரட்டிய ரவுடி தியாகராஜன் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு இன்று மாற்றப்பட்டார்.
    வேலூர்:

    காஞ்சிபுரம் பொய்யாங்குளத்தை சேர்ந்தவர் தியாகு என்கிற தியாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தியாகராஜன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்துள்ளனர்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்திருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறினார்.

    இதற்காக ரவுடி தியாகராஜனின் உதவியை நாடினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகராஜனின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு சென்று ரகுநாதனை மிரட்டினர். அப்போது செல்போனில் தொடர்பு கொண்டு ரவுடி தியாகராஜன் ரகுநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றி நேற்று முன்தினம் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் ரகுநாதன் புகார் அளித்தார். இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகு நாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் ரகுநாதனை வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி தியாகராஜன் மிரட்டியது தெரியவந்தது. இது குறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தியாகராஜன் அடைக்கப்பட்டுள்ள அறையில் அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். நேற்று நள்ளிரவு பாகாயம் போலீசார் ஜெயிலுக்குள் சென்று தியாகராஜன் அறையில் சோதனை செய்தனர். அங்கிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த போனில் இருந்து தான் வியாபாரியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ரவுடி தியாகராஜன் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு இன்று மாற்றப்பட்டார்.

    வேலூர் அருகே ஜோதிடர் போர்வையில் பதுங்கி இருந்த திருடனை பிடிக்க வந்த ஆந்திர போலீசார் 6 பேரை கிராம மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆற்காடு:

    வேலூர் சத்துவாச்சாரி அடுத்த மேலக்குப்பம் மலை இளவன் தோப்பு பகுதிக்கு நேற்றிரவு ஒரு காரில் 6 பேர் கும்பல் சாதாரண உடையில் வந்தனர். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தெலுங்கில் பேசினர். அங்கு வசித்துவரும் ராமகிருஷ்ணன் (33) என்பவர் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்து விட்டு அவரது வீட்டிற்கு சென்றனர்.

    ராமகிருஷ்ணன் வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். ராம கிருஷ்ணனை சுற்றி வளைத்து பிடித்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியை சேர்ந்தவரை மர்ம கும்பல் கடத்திசெல்கிறார்கள் என்று சந்தேகமடைந்து காரை முற்றுகையிட்டனர்.

    ராமகிருஷ்ணனை மீட்டு தெலுங்கில் பேசிய 6 பேர் கும்பலையும், சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். அப்போது அவர்கள் நாங்கள் ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர்கள் திருடனை பிடிக்க வந்தோம் என்று தெலுங்கில் கூறினர்.

    ஆனால் இதை கேட்காத கிராம மக்கள் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். தகவலறிந்ததும், ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். 6 பேரையும் ராமகிருஷ்ணனையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இளவன்தோப்பு மக்கள் சிலரும் சென்றனர்.

    விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ஹர்ஷா மற்றும் 5 போலீஸ்காரர்கள், கார் டிரைவர் என்பது தெரியவந்தது. இவர்கள் பிடித்த ராமகிருஷ்ணன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் என்பதையறிந்து ரத்தினகிரி போலீசாரும், கிராமமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    கொள்ளையன் ராமகிருஷ்ணனும், ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அனந்தபுரம் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள போலீஸ் நிலையங்களில் ராமகிருஷ்ணன் மீது சுமார் 24 கொள்ளை வழக்குகள் உள்ளது.

    தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் ஆந்திராவில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி, மகன், மகளுடன் தப்பித்து மேலக்குப்பத்திற்கு வந்து பதுங்கி கொண்டார். வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தை தங்க வைத்தார். இவரது மனைவி குறிசொல்லி கிராம மக்களிடம் நன்றாக பழகினார். அவரும் ஜோதிடம் பார்த்து வந்தார்.

    அதன்பிறகும், அனந்தபுரத்திற்கு சென்று வழிப்பறி, வீடுபுகுந்து கொள்ளையடித்துக் கொண்டு மேலக்குப்பத்திற்கு வந்துவிடுவார். கிராமமக்களுக்கு சந்தேகம் வராதபடி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநில போலீசார் ராமகிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து வந்தனர்.

    இதையடுத்து, ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு ராமகிருஷ்ணனும், ஆந்திர போலீசாரும் அழைத்து செல்லப்பட்டனர். தமிழகத்தில் ஏதாவது கொள்ளை வழக்கில் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பிருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தமிழகத்தில் நடந்த கொள்ளையில் தொடர்பு இல்லை என தெரியவந்தது. பின்னர், ஆந்திர போலீசாருடன் கொள்ளையன் ராமகிருஷ்ணனை தமிழக போலீசார் அனுப்பிவைத்தனர். குற்றவாளியை பிடிப்பதற்கு வரும்போது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒரு போலீஸ்காரரை உடன் அழைத்துசென்றிருந்தால் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூரில் வங்கதேச பெண்ணை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரைதேடி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. அருகே ஆற்காடு ரோட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பெண் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்தார். பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். சிறுமியை மீட்டு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    சிறுமியை தாக்கிய பெண் வங்காளதேசத்தை சேர்ந்த முஸ்கான் (வயது 30) என்பதும், இவர் சிறுமிகளை கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபட வைக்கும் புரோக்கர் என்பதும் தெரியவந்தது.

    விபசார பெண் புரோக்கர் முஸ்கான், வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ‘போக்சோ’ சட்டப் பிரிவில் அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அப்பெண் பரபரப்பு தகவல்களை கூறி உள்ளார்.

    அடித்து உதைத்த சிறுமி, முஸ்கானின் உறவினர் மகள். குடும்ப வறுமை காரணமாக தவித்த சிறுமியை வேலையில் சேர்த்து விடுவதாக கூறி வங்காளதேசத்தில் இருந்து அழைத்து வந்துள்ளார்.

    பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அழைத்துச்சென்று, பின்னர் வேலூருக்கு அந்த சிறுமியை முஸ்கான் அழைத்துவந்தார். வேலூருக்கு வந்த பிறகு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தார்.

    மேலும் வங்காள தேசத்தில் இருந்து கடல் மார்க்கமாக கள்ளத் தோணியில் இந்தியாவிற்குள் ஊடுருவி சிறுமியை கடத்தி வந்தாக முஸ்கான் வாக்குமூலம் அளித்தார்.

    வங்கதேசத்தை சேர்ந்த முஸ்கானா 16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து கொண்டு கடந்த ஆண்டு இந்தியா வந்துள்ளார். ஒருவடமாக பாஸ்போர்ட் இல்லாமல் திருப்பூர், சென்னை, பெங்களூர், வேலூரில் தங்கியிருந்துள்ளார்.

    முஸ்கானாவுக்கு கொல்கத்தாவில் உள்ள விபசார கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் உள்ள ஒருவர் மூலம் இந்தியா வந்துள்ளார். பெங்களூர், சென்னை, வேலூரில் விபசார கும்பல் உதவியுடன் தங்கியிருந்தார்.

    அவருக்கு வேலூர் வாலிபர் உள்பட 7 பேர் உதவியாக இருந்தது தெரியவந்தது. அவரது விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    வேலூரில் உள்ள லாட்ஜிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டினர் தங்க அனுமதிக்க கூடாது. அப்படி வந்தவர்கள் குறித்து உடனே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென லாட்ஜ் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    ஜோலார்பேட்டையை சேர்ந்த ரேவதி(39) அவரது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென மண் எண்ணை கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து மண் எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுபற்றி ரேவதி கூறுகையில், எனது கணவர் இறந்துவிட்டார்.அவரது இன்சூரன்ஸ் பணம் வந்தது.அதனை ஜோலார்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கடனாக பெற்றார். அந்த பணத்தை தற்போது தரமறுக்கிறார். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் அதனை வாங்க மறுக்கின்றனர். அதனால் குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்தேன் என்றார். அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மனுகொடுக்க வரும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்குள் மண் எண்ணை கொண்டு வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் கணவனை கத்தியால் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30), உமராபாத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேவதி (25) என்ற மனைவியும், 3 வயதில் நிஷா, 1½ வயதில் சுஜிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு வேலூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த ஒரு வாரகாலமாக செந்தில்குமார் மனநல பாதிப்பிற்கு சரிவர மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் செந்தில்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரேவதியின் பாட்டி வீட்டிற்கு சென்று வேர்கடலை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

    அப்போது மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் வழக்கமான குடும்ப தகராறு தான் என கருதினர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ரேவதி செந்தில்குமாரை கத்தியால் குத்தினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்தனர். #tamilnews
    ×