என் மலர்
வேலூர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவரது மகன் கோகுல் (5), மகள்கள் அஸ்வினி (4), மோனிஷா (1½). நேற்று சக்திவேல் தனது குழந்தைகள் 3 பேரையும் அழைத்து கொண்டு வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, 3 குழந்தைகளின் மீது ஊற்றிவிட்டு, அவரும் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, தடுத்து நிறுத்தினர்.
பின்னர் உறவினர்களுக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உறவினர்கள் சக்திவேலையும், அவரது குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தியதில், குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 30). இவரது கணவர் பாபு, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 8 வயது மகனுடன் வசித்து வந்தார். திருத்தணி அருகில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் செல்வி வேலை செய்துவந்தார்.
செல்வி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்வியை கற்பழிக்க முயன்றுள்ளனர். செல்வி தப்பிக்க முயன்றதாக தெரிகிறது.
ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கி வலுகட்டாயமாக கற்பழித்துள்ளனர். பின்னர், கழுத்தை நெரித்து செல்வியை கொடூரமாக கொலை செய்தனர். உடலை நிர்வாணமாக போட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
செல்வியின் உடலை அவரது மகன் தான் முதலில் பார்த்தார். இந்த சிறுவனின் கதறல் சத்தம் கேட்ட பிறகே அக்கம், பக்கத்தினர் வீட்டு முன்பு குவிந்தனர். இதுபற்றி அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் தகராறில் செல்வி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
வேலூர்:
வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 33). இவர் நேதாஜி மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்று விட்டனர். பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் பிரேம்தாஸ் (வயது 28). வேலூர் வந்த இவர் சி.எம்.சி. அவுட்கேட் அருகே காட்பாடி சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து வேலூர் வடக்கு குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மணியக்கார தெருவை சேர்ந்த பாலு (55). இவரது பைக்கை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். அதனை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டனர்.
அம்மூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த பாஸ்கரன் (52) வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுபற்றி ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆற்காடு தாலுகா மய்யூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (41) என்பவர் பரதராமியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி அருகே பைக் நிறுத்திவிட்டு சென்றார்.அதனை திருடி சென்றுவிட்டனர். திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோடு கலைஞர் நகரில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப் அருகில் இன்று காலை பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, பேரணாம்பட்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் பேரணாம்பட்டு அடுத்த லாலாப்பேட்டையை சேர்ந்த சிங்காரம் மனைவி லலிதா என்பது தெரிய வந்தது.
லலிதாவின் உடலை மீட்ட போலீசார், கொலையாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் கடாம்பூரை சேர்ந்தவர் அமீர் பாஷா (வயது 57). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் நேற்று மாலை கெங்காபுரம் பகுதியில் உள்ள நண்பரின் பீடா கடைக்கு சென்றார்.
அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் அமீர்பாஷாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், 1000 ரூபாயை பறித்தார்.
மேலும் 2 பேரிடம் மிரட்டி பணம் வழிப்பறி செய்தார். இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசுக்கு புகார் சென்றது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆம்பூர் பி.கஸ்பா குமரேசன் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரபுகுமார் (28) என் பது தெரியவந்தது.
பிரபுகுமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மோசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). தம்பதிக்கு ஜோதி (8) என்ற மகள், சூர்யா (7) என்ற மகன் உள்ளனர்.
பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து லட்சுமியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த அவர் தகராறு செய்து அவரது மனைவியை அடித்து உதைத்தார். அக்கம் பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்து வைத்தனர்.
நள்ளிரவு வரை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்டு பிரபு துடிதுடித்து இறந்தார்.
பின்னர் வீட்டுக்குள் இருந்தபடி லட்சுமி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்றனர். அங்கு பிரபு பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிரபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லட்சுமியை கைது செய்தனர். கணவர் குடிபோதையில் அடித்து உதைத்ததால் ஆத்திரத்தில் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கிவிட்டதாக லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர்களது மகன், மகள் தவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் அபிநாத் (வயது 15). நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அபிநாத் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் மாணவர் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து காரை ஓட்டிவந்த ஈரோட்டை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவரை கைது செய்தனர்.
கார் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் விருபாட்சிபுரம் காந்திநகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் சிவா இவரும் தனது நண்பர்களுடன் மைதனத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சத்யராஜ் நண்பர்களுக்கும் சிவாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள். சத்யராஜ் மற்றும் அவரது நண்பர்களை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த சத்யராஜ், மற்றும் செல்வத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து சத்யராஜ் தரப்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பலவன்சாத்துகுப்பம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (வயது 22), சிவா (17), பரத் (21), அருண்குமார் (22), அஜித் (29). ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனப்பாக்கம்:
குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் கோபி (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறை காரணமாக கோபி சென்னையில் இருந்து நேற்றிரவு வீட்டிற்கு பைக்கில் வந்தார். காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். காவேரிபாக்கம் போலீசார் கோபி உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகேயுள்ள கதிர்குளம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கீதா என்ற மகளும், பாலு என்கிற பாலசந்தர் (45) என்ற மகனும் உள்ளனர்.
கீதா திருமணமாகி கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான பாலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலு கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதி கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் பாலு தொடர்ந்து நிலத்தை மாற்றி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பாலு தனது தந்தையிடம் சென்று ‘உங்களுக்கு வயதாகி விட்டதால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டார் அப்போதும் கோபால் மறுத்துள்ளார்.
அதனால் ஆத்திரம் அடைந்த பாலு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பிற்பகல் 3 மணியளவில் கோபால், தனது வீட்டின் எதிரேயுள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலு அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கோபாலின் தலையில் போட்டார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபாகரன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கூடநகரம் பார்வதியா புரத்தை சேர்ந்தவர் வாசு, எலக்ட்ரீசியன். இவரது மனைவி வனிதா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வனிதா இன்று காலை வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள் சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று விரிஞ்சிபுரம் ரெயில் நிலையம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் 1-வது பிளாட்பாரத்தில் மண் ஏற்றி வந்த லாரி எதிர் பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, அவ்வழியே ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய மேலாளர் காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர், காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி மீட்கபட்டது.
இதனால், ஜோலார்பேட்டை மார்க்கமாகச் செல்லும் சங்கமித்ரா, பெங்களூரு, யஸ்வந்த்பூர், திருப்பதி இன்டர்சிட்டி உள்ளிட்ட 8 விரைவு மற்றும் வாராந்திர ரெயில்கள் சுமார் 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
இந்த விபத்தால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு மேல் சென்னை மார்க்கத்திலிருந்து எந்த ரெயிலும் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை மார்க்கத்தில் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டன.






