என் மலர்tooltip icon

    வேலூர்

    வாணியம்பாடியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவரது வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது.

    இதனால் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அருகில் வசிக்கும் முரளி, செல்வம், ராஜன்பாபு, கர்லின், காசியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இதானல் அந்த வீடுகளில் தீப்பற்றி எரிந்தது. இதனால் 6 வீட்டில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

    தீவிபத்து நடந்த இடத்தை தாசில்தார் கிருஷ்ணவேனி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அ.தி.மு.க.நகர செயலாளர் சதாசிவம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் நிர்வாகிகள் சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரே‌சன் அரிசிமூட்டைகளை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சில நாட்களாக ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துபவர்களை கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையில் 2 லாரிகள், 2 கார், ஒரு பைக் போன்றவற்றில் ரே‌சன்அரிசி மூட்டைகளை கும்பல் கடத்த முயன்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் 2 லாரிகள் தப்பி சென்று விட்டன. மற்ற 2 கார்கள் ஒரு பைக் மட்டும் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரேசன்அரசியை கடத்திய ஆந்திர மாநிலம் ராமக்குப்பத்தை சேர்ந்த கேசவரெட்டி, பானு, கோவர்தணரெட்டி, மஞ்சுநாதன், விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 500கிலோ ரே‌ஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ரூ.50 ஆயிரம்ரொக்கம் 4 செல்போன்கள் கடத்தலுக்குபயன்படுத்திய இரண்டு கார்கள் ஒருபைக்கை பறிமுதல் செய்தனர்.

    மேலும் லாரிகளுடன்தப்பியோடிய கடத்தல் குமபலை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.

    இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணக்கோலத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்தவர் சோனா (வயது 19). வேலூர் அண்ணாசாலையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சோனாவும், ஆரணியை சேர்ந்த கார் டிரைவரான வில்லவன் கோதை (24) என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சோனா திடீரென மாயமானார்.

    மகளை கண்டுபிடித்து தரக்கோரி சத்துவாச்சாரி போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். மாணவியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், மாயமான மாணவி சோனா காதலன் வில்லவன் கோதையை திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    போலீசாரிடம், பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை ராணிப்பேட்டை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #RedSanders
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் சமீபத்தில் 3 செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதையறிந்த தலைமை வனப் பாதுகாவலர் சேவாசிங் தலைமையிலான குழுவினர் செம்மர கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகை அடுத்த ஆந்திர மாநில எல்லையில் உள்ள தாடூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை வனக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, தாடூருக்கு வனக்குழு விரைந்தது. அங்கு உள்ள கரும்பு தோட்டத்தில் மாந்தோப்பிற்கு நடுவில் ரூ.1¼ டன் எடையுள்ள 55 சிறு, சிறு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுற்றியும் தேடி பார்த்தபோது, கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரும் சிக்கவில்லை.

    இதையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் ரக செம்மரக்கட்டைகள் என்பதால், ஆந்திர மாநிலம் சேஷாச்சல வனப்பகுதியில் வெட்டி கடத்தியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ஆனால், அம்மூர் காப்புக்காட்டில் வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் சிக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் பார்கவேதேஜா, உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன், வனச்சரக அலுவலர் மூர்த்தி, வனவர்கள் ஜனார்த்தனன், ரகுபதி ஆகியோர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RedSanders
    வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் நோய் பரவுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் யாஸ்மின் தெரிவித்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நேற்று சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின், சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், சென்னையை சேர்ந்த மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் கீதாலட்சுமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு, குழந்தைகள், பெண்கள், மகப்பேறு பிரிவு, சித்தா, ஹோமியோ, தொழு நோயாளிகள் பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ள பிரிவுக்கு சென்று கொசுகள் கடிக்காத வகையில் இருக்க கொசுவலைகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளதா?, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

    மருத்துவமனை வளாகத்தில் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி உள்ளதா?, அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகள் எவ்வாறு செய்யப்பட்டு உள்ளது, டெங்கு நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் மருத்துவமனையில் இருக்கிறதா? என்று பார்வையிட்டனர்.

    அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது ரத்தத்தில் அணுக்கள் எந்த அளவு உள்ளது. ரத்த அணுக்கள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக தேவையான சிகிச்சைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.

    காய்ச்சல் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் ‘எலைசா’ பரிசோதனை செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி நோயை கட்டுப்படுத்த வேண்டும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தால் அவர்களை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் இணை இயக்குனர் யாஸ்மின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல், விஷ காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதே நிலை மீண்டும் தமிழகத்தில் வந்துவிடாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர் கலெக்டரின் உத்தரவுபடி போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில், வாலாஜா அரசு மருத்துவமனையில் இப்ராஹிம் (வயது 20) என்பவர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவரை தனிவார்டில் வைத்து 24 மணி நேரம் கண்காணிப்பில் கொசுவலையுடன் கூடிய பாதுகாப்பில் வைத்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் இருப்பது அறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து சுற்றுபுற சுகாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்காக சுகாதார அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது பொதுமக்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அரக்கோணம் மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா, டாக்டர் சங்கர், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.
    காட்பாடியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது.
    வேலூர்:

    காட்பாடி சத்யா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தச்சுத் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சத்தியா 3-வதாக கர்ப்பமானார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்தியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 8 மணியளவில் மணிவண்ணன் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

    அதில் சத்தியாவை ஏற்றிக்கொண்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். ஆம்புலன்சை சரவணன் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் வித்யா உடனிருந்தார். வீட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் சத்தியாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

    உடனே ஆம்புலன்சை அங்கேயே நிறுத்தி சத்தியாவுக்கு மருத்துவ உதவியாளர் வித்யா பிரசவம் பார்த்தார். சத்தியாவுக்கு ஆம்புலன்சிலேயே இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் பெண் குழந்தைகள்.

    உடனடியாக சத்தியாவும், குழந்தைகளும் வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 2 குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மது குடித்த பெயிண்டர் வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள பருத்தி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 55), பெயிண்டர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

    ஜெயகுமாருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்துள்ளார். நேற்றும் மது போதையில் வீட்டிற்கு வந்து வாசலிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

    இன்று அதிகாலை விஜயகுமாருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது, வலி தாங்கமுடியாமல் அலறினார். அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் மேலும் ஒரு கைதி உடல் நலக்குறைவால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் உள்ள கைதிகள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கின்றனர்.

    ராஜீவ்காந்தி கொலை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று, மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன்காந்திக்கு வயிறு பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜாமினில் வெளியே வந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலு என்ற கைதி திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இன்று மேலும் ஒரு கைதி இறந்தார்.

    தர்மபுரி கடத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 54). 2013-ம் ஆண்டு கொலை வழக்கில் 5 வருட தண்டணை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    ஜெயிலில் மேலும் ஒரு கைதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    வரையறுக்கப்பட்ட ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    போராட்டம் நடைபெற இருந்த ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அங்கு திரண்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரம்மாள், மாநில செயலாளர் ஆண்டாள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    ஆம்பூர் அருகே இரு உடல் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்யை அப்பகுதியினர் திரளாக வந்து பார்த்து சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்தவர் உமாபதி(60), விவசாயி. இவர் தனது வீட்டில் 5 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று மதியம் ஒரு வெள்ளாடு 2 பெண் குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சாதாரணமாகவும், மற்றொரு குட்டி ஒரு தலையில் இரு உடல்களுடன், எட்டு கால்களுடனும் பிறந்திருந்தது. இதை அறிந்த அப்பகுதியினர் திரளாக வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்த்து சென்றனர்.

    ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாக இறந்தது.இறந்த அந்த ஆட்டுக்குட்டியை உமாபதி அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தார்.

    பொதுவாக எட்டு கால்களுடன் பிறக்கும் ஆட்டுக்குட்டிக்கு உலக அளவில் ஆக்டா கோட் என்ற பெயரில் அழைக்கப்படுவது வழக்கம்.

    கடந்த 2014ம் ஆண்டு குரோஷியா நாட்டில் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவின.

    இத்தகைய ஆட்டுக்குட்டிகள் பிறந்து ஒருவாரம் வரை உயிர் வாழ்ந்து விட்டால் பின்னர் தங்களது வாழ்நாளை எளிதாக கழித்து விடும் என்றனர்.

    ஜோலார்பேட்டையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்.

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் மசூதி பின்புற பகுதியை சேர்ந்தவர் சுக்காராம் மகன் அசோக் குமார் (வயது29). சென்னை தண்டையார்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    நேற்றிரவு பைக்கில் ஜோலார்பேட்டையில் இருந்து ஆண்டியப்பனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு அசோக்குமார் சென்று கொண்டிருந்தார். பக்கிரிதக்கா மசூதி அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டையை சேர்ந்த குமரேசன் மகன் வினோத் (32) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×