search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தம் அருகே எறும்புத்தின்னி செதில்கள் கடத்தல் - வாலிபர் கைது
    X

    குடியாத்தம் அருகே எறும்புத்தின்னி செதில்கள் கடத்தல் - வாலிபர் கைது

    குடியாத்தம் அருகே எறும்புத்தின்னியை வேட்டையாடி செதில்களை கடத்திய ஆந்திர வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி மற்றும் வன அலுவலர்கள் தமிழக-ஆந்திர எல்லையான சைனகுண்டா சோதனை சாவடியில் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, ஆந்திராவில் இருந்து பைக்கில் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் கொண்டு வந்த சிறிய மூட்டையில் 1½ கிலோ அரியவகை கொண்ட எறும்புத்தின்னி செதில்கள் இருந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஆந்திர மாநிலம் பலமனேர் பழையபேட்டை மசூதி தெருவை சேர்ந்த முகமது இஸ்லாமில் (25) என்பது தெரியவந்தது.

    இவர், எறும்புத்தின்னியை வேட்டையாடி செதில்களை வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபரிடம் விற்பனை செய்ய கடத்தி வந்ததாக கூறினார்.

    இதையடுத்து, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முகமது இஸ்மாயில் கைது செய்யப்பட்டார்.

    இச்சம்பவத்தில் தொடர் புடைய வாணியம்பாடியை சேர்ந்த தொழில் அதிபரை பிடிக்கவும் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதிகளில் அரிய வகை எறும்புத்தின்னிகள் அதிகம் உள்ளன.

    கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உண்டு வாழ்கின்றன. எறும்புத்தின்னிகளின் உடல் முழுவதும் கடினமான செதில்கள் நிரம்பியிருக்கும்.

    மனித நடமாட்டம் அல்லது மற்ற விலங்குகள் தாக்க முற்பட்டால் எறும்புத்தின்னி தனது உறுப்புகளை சுருட்டிக் கொண்டு பந்து போன்று தற்காத்துக் கொள்ளும். எறும்புத்தின்னிகளின் செதில்கள் ‘வயகரா’ தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    எறும்புத்தின்னிகளின் செதில்களுக்கு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நல்ல விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால், இங்குள்ள வனப்பகுதிகளில் செதில்களுக்காக எறும்புத்தின்னிகளை வேட்டையாட மர்ம நபர்கள் ஏராளமாக சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×