search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore thief man arrest"

    வேலூர் அருகே ஜோதிடர் போர்வையில் பதுங்கி இருந்த திருடனை பிடிக்க வந்த ஆந்திர போலீசார் 6 பேரை கிராம மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆற்காடு:

    வேலூர் சத்துவாச்சாரி அடுத்த மேலக்குப்பம் மலை இளவன் தோப்பு பகுதிக்கு நேற்றிரவு ஒரு காரில் 6 பேர் கும்பல் சாதாரண உடையில் வந்தனர். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தெலுங்கில் பேசினர். அங்கு வசித்துவரும் ராமகிருஷ்ணன் (33) என்பவர் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்து விட்டு அவரது வீட்டிற்கு சென்றனர்.

    ராமகிருஷ்ணன் வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். ராம கிருஷ்ணனை சுற்றி வளைத்து பிடித்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியை சேர்ந்தவரை மர்ம கும்பல் கடத்திசெல்கிறார்கள் என்று சந்தேகமடைந்து காரை முற்றுகையிட்டனர்.

    ராமகிருஷ்ணனை மீட்டு தெலுங்கில் பேசிய 6 பேர் கும்பலையும், சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். அப்போது அவர்கள் நாங்கள் ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர்கள் திருடனை பிடிக்க வந்தோம் என்று தெலுங்கில் கூறினர்.

    ஆனால் இதை கேட்காத கிராம மக்கள் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். தகவலறிந்ததும், ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். 6 பேரையும் ராமகிருஷ்ணனையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இளவன்தோப்பு மக்கள் சிலரும் சென்றனர்.

    விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ஹர்ஷா மற்றும் 5 போலீஸ்காரர்கள், கார் டிரைவர் என்பது தெரியவந்தது. இவர்கள் பிடித்த ராமகிருஷ்ணன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் என்பதையறிந்து ரத்தினகிரி போலீசாரும், கிராமமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    கொள்ளையன் ராமகிருஷ்ணனும், ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அனந்தபுரம் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள போலீஸ் நிலையங்களில் ராமகிருஷ்ணன் மீது சுமார் 24 கொள்ளை வழக்குகள் உள்ளது.

    தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் ஆந்திராவில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி, மகன், மகளுடன் தப்பித்து மேலக்குப்பத்திற்கு வந்து பதுங்கி கொண்டார். வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தை தங்க வைத்தார். இவரது மனைவி குறிசொல்லி கிராம மக்களிடம் நன்றாக பழகினார். அவரும் ஜோதிடம் பார்த்து வந்தார்.

    அதன்பிறகும், அனந்தபுரத்திற்கு சென்று வழிப்பறி, வீடுபுகுந்து கொள்ளையடித்துக் கொண்டு மேலக்குப்பத்திற்கு வந்துவிடுவார். கிராமமக்களுக்கு சந்தேகம் வராதபடி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநில போலீசார் ராமகிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து வந்தனர்.

    இதையடுத்து, ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு ராமகிருஷ்ணனும், ஆந்திர போலீசாரும் அழைத்து செல்லப்பட்டனர். தமிழகத்தில் ஏதாவது கொள்ளை வழக்கில் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பிருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தமிழகத்தில் நடந்த கொள்ளையில் தொடர்பு இல்லை என தெரியவந்தது. பின்னர், ஆந்திர போலீசாருடன் கொள்ளையன் ராமகிருஷ்ணனை தமிழக போலீசார் அனுப்பிவைத்தனர். குற்றவாளியை பிடிப்பதற்கு வரும்போது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒரு போலீஸ்காரரை உடன் அழைத்துசென்றிருந்தால் இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×