search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saloon worker"

    அரக்கோணம் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் சலூன் தொழிலாளி ஒருவர் உண்டியல் மூலம் பணம் திரட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #ArakkonamRoad

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளிலும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நடப்பதற்காக தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள், பணிகள் முடிந்தபின்னர் சரிவர மூடப்படவில்லை.

    அரக்கோணம், பழனிப்பேட்டை, வி.பி.கோவில் தெரு மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. கடந்த 2 தினங்களுக்கு முன்புஅந்த வழியாக நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி உள்பட பல்வேறு துறையினருக்கு பொதுமக்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரக்கோணம் வி.பி.கோவில் தெருவை சேர்ந்த ஆர்.மோகன் (வயது 40) என்பவர் தனது சலூன் கடை முன்பாக நேற்று தெருவில் உண்டியல் வைத்து தெருவை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வலியுறுத்தி ஒவ்வொரிடமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் வசூலித்து நூதன போராட்டம் நடத்தினார். இதில் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உண்டியலில் ஒரு ரூபாயை செலுத்தினர்.

    இது குறித்து ஆர்.மோகன் கூறுகையில், ‘‘நான் வசிக்கும் தெரு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்து விட்டது. தெருக்களை சீரமைக்க நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எனது கடை முன்பாக உண்டியல் வைத்து ஒரு நபரிடம் ஒரு ரூபாய் வசூலித்து போராட்டம் நடத்துகிறேன். உண்டியலில் வசூலிக்கப்படும் பணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளேன்’’ என்றார்.

    நகராட்சி ஆணையாளர் சண்முகம் (பொறுப்பு) கூறுகையில், ‘‘அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த தெருக்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடியாத தெருக்களில் பணிகள் முடிக்கப்படும். மிக விரைவில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.  #ArakkonamRoad

    ×