என் மலர்
வேலூர்
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேரிக்கும் பிரசார பொதுக்கூட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 13 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வருகிறது.

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பா.ம.க. நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பெண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருடன் பாசத்துடனும், தோழமை உணர்வுடனும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. கட்சி கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக மு.க.ஸ்டாலினும், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன், மருமகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆலோசகர்களாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் தி.மு.க. கட்சி முடிவுக்கு வந்து விடுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்துதரப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #Ramadoss
தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 18-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நாளை மாலை 5 மணிக்கு ஆம்பூர் பைபாஸ் சாலையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையடுத்து மாலை 6 மணிக்கு வேலூர் மண்டி தெருவில் பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
வாலாஜா:
ராணிப்பேட்டை மாஹவீர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலீல் (வயது 52) பிஸ்கெட் வியாபாரி. இவர் நேற்று இரவு வேலூரில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வந்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இன்று காலை வீட்டிற்கு திரும்பிய கலீல் வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கலீல் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் 8 வயது சிறுமி லாலாபேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் ராமன் (69) முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நடந்தவற்றை சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் ராமனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு அருகேயுள்ள எரிகுத்தி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் புவனேஷ் (4) பேரணாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த குமரேசன் உறவினரான சங்கர் மகன் மிதிலேஷ் (2½). இருவரும் நேற்று மாலை சுரேஷ் என்பவரின் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர்.
நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு திரும்பவில்லை. குழந்தைகள் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். ஊர் முழுவதும் தேடி பார்த்தனர். குழந்தைகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுரேஷ் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மூடப்படாத குடிநீர் தொட்டியில் இருவரும் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி, அழுதனர். இதுகுறித்து குமரேசன் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்னர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருப்பத்தூர் அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (வயது 46), அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் உமாவின் அண்ணன் கோவிந்தராஜ். இவரது மகன்கள் மணிகண்டன், மாதேஷ் (21). உமாவிற்கும், கோவிந்தராஜுக்கும் இடையே பணப்பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் உமா நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மாதேஷ், உமாவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ் உமாவின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினார். படுகாயம் அடைந்த உமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த கந்திலி போலீசார் இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உமாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாதேஷை கைது செய்தனர். அவர் கந்திலியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.
வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.
விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.
ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan
ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து நொறுங்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ., அவரது மனைவி, டிரைவர் பரிதாபமாக இறந்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல் (வயது 71). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது தினகரன் அணியில் அ.ம.மு.க. நகர செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி விஜயலட்சுமி (65). இருவரும் இன்று காலை காரில் சென்னை ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றனர். டிரைவர் வீரமணி (40) காரை ஓட்டிவந்தார்.
காலை 6 மணிக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே விண்ண மங்கலம் என்ற இடத்தில் வந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்திசெல்ல டிரைவர் முயன்றார்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி லாரிக்குள் புகுந்தது. கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் கார் சிக்கியதால் நொறுங்கி தீப்பொறி பறந்தது.

கார் நொறுங்கியதால் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரிக்குள் கார் சிக்கியதால் உடல்களை மீட்கமுடியவில்லை.
இதனையடுத்து ஆம்பூர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிரேன் மூலம் லாரியை நகற்றி காரை வெளியே கொண்டுவந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டது.
உடல்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை மார்க்கத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சுந்தரவேல் 1991-96 வரை திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் 2001 முதல் 2006 வரை திருப்பத்தூர் நகர மன்ற தலைவராகவும் இருந்தார். அவருக்கு 1 மகள் உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. இறந்த தகவலை அறிந்த அ.ம.மு.க.வினர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர் இறந்தது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #RoadAccident #AKCSundarvel
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள எஸ்.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி ஜானகி அம்மாள் (வயது 83). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனி தனியாக வசித்து வருகின்றனர்.
கணவர் இறந்து விட்டதால் ஜானகி அம்மாள் அகரம்கேரி ஏரிகரையோரம் உள்ள விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவரது மகன் வஜ்ரவேல் நிலத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு மாடுகளுக்கு தண்ணீர் வைத்து விட்டு அவரது தாயாருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வந்தார்.
தனியாக இருந்த ஜானகி அம்மாளை மர்ம நபர்கள் அருகே இருந்த பள்ளத்துக்குள் இழுத்து சென்று கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் சென்று ஜானகி அம்மாளின் 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை வஜ்ரவேல் அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் பால்கறக்க நிலத்துக்கு சென்றனர். வீட்டில் ஜானகி அம்மாள் இல்லை. மேலும் அங்கிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதனைக் கண்டு திடுக்கிட்ட அவர்கள் தேடி பார்த்தனர். அப்போது ஜானகி அம்மாள் பிணமாக கிடந்ததை கண்டு அழுது துடித்தனர்.
இதுபற்றி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இரவு 11 மணிக்கு நிலத்தில் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஜானகி அம்மாள் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் மாயமாகி உள்ளார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர்:
மாதனூரை அடுத்த தோட்டாளம் மற்றும் பாலூர் இடையே வனப்பகுதியையொட்டி வனத்துறையினர் கால்வாய் ஒன்றை வெட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அந்த வழியாக ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் உடல் புதைக்கப்பட்டு, அவரது சேலை மற்றும் காலின் ஒரு பகுதி வெளியே தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெண் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் ஒரு ஜோடி காலணி இருப்பதை கண்டனர். இரவு நேரம் ஆனதால் உடலை மீட்க இயலாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டது. மேலும் உடலின் அருகே போலீசாரும், வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை கைரேகை நிபுணர் விஜய், அவரது குழுவினர் வந்து காலணி, சாராய பாக்கெட்டுகளை மீட்டனர். ஆனால் மதியம் வரை பெண்ணின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாதனூர் - பாலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அண்ணாதுரை என்பவர் தனது மனைவி செல்வி (வயது 40) கடந்த சனிக்கிழமை மாதனூரில் நடந்த சந்தைக்கு சென்று வருவதாக கூறி, தன்னிடம் ரூ.650 வாங்கிக்கொண்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என போலீசாரிடம் கூறினார்.
அதைத்தொடர்ந்து ஆம்பூர் தாசில்தார் சுஜாதா முன்னிலையில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மேலும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் முகம் சேலையால் இறுக்கப்பட்டும், தலை நசுங்கியும் இருந்தது.
இதனையடுத்து அழுகிய நிலையில் கிடந்த உடலை அண்ணாதுரை, அவரது மகன் ஆனந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அது செல்வி என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த உடலை வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் நாகேந்திரகுமார், பிரபு குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் செல்வியின் உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி ஆம்பூர் அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும், அதே கம்பெனியில் வேலை செய்து வந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மாதனூரை சேர்ந்த வாலிபரிடம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எதிரணி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை பற்றி உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் 10 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு அவர் எதுவும் செய்யவில்லை. இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாலாறு பிரச்சினைகளை தீர்க்க எங்களிடம் மெகா திட்டம் உள்ளது. அதனை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் இவற்றை நிறைவேற்றினால் ஆண்டு முழுவதும் பாலாற்றில் தண்ணீர் ஓடும். அதன்மூலம் குடிநீர் பிரச்சினை தீரும். விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனை எதிரணி வேட்பாளரால் செய்ய முடியாது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். பெட்டி, பெட்டியாக பணம் துரைமுருகனிடம் உள்ளது. அதனால் அவர் தி.மு.க. பொருளாளராக உள்ளார். தி.மு.க. பக்கம் பணம் கொடுக்கும் திட்டம் தான் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டம் அவர்களிடம் இல்லை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்தான் கூறுகிறார். தோற்கப்போகிறோம் என தெரிந்து விட்டதால் அவர் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார். அவர் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் என்னையும் கொச்சையாகவும், அவதூறாகவும் பேசி உள்ளார். நாங்கள் வன்னியர் சொத்துகளை அபகரித்து விட்டோம் என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. உள்பட எந்த விசாரணைக்கும் நானும், எங்கள் குடும்பத்தாரும் தயார். ஒரு சதுரஅடி இடத்தை கூட நாங்கள் அபகரித்து விட்டோம் என்று ஸ்டாலினால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் உங்கள் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. அதனை உங்கள் கட்சியினரே விரும்புகிறார்கள். ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ‘நீட்’ தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும், தி.மு.க.வும் தான். ராகுல்காந்தி ‘நீட்’ தேர்வு நடைமுறையில் இருக்கும். அதனை எதிர்க்கும் மாநிலங்களில் மட்டும் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். அவர்கள் கூட்டணியிலேயே முரண்பாடு. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க.தான். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தி.மு.க. மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அரசு ஊழியர்கள் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க.தான்.
உதயநிதி ஸ்டாலின் தருமபுரியில் பேசும்போது அன்புமணி தவிர வேறு வேட்பாளர்கள் இல்லையா? என்று கேட்டுள்ளார். தி.மு.க.வில் உங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் இல்லையா?, வேறு யாருக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டீர்களா?. அப்படி பார்த்தால் துரைமுருகன் தான் சீனியர். அவருக்கு தான் தி.மு.க. தலைவர் பதவி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்து இப்போது தான் அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கே எதிரணியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன், ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் டி.ஆர்.பாலு ஆகிய 2 பேரும் சாராய முதலாளிகள். பா.ம.க.வில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவசாயிகளின் பிள்ளைகள். இது விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கும் போர். பணத்தை அள்ளி வீசுவார்கள் ஏமாந்து விடாதீர்கள். இலங்கையில் ரூ.26 ஆயிரம் கோடியை ஜெகத்ரட்சகன் முதலீடு செய்துள்ளார். ரஜினிகாந்த் இலங்கை சென்றபோது அவருக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது இலங்கையில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்ததற்கு ஸ்டாலினின் பதில் என்ன?. ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியில் ரூ.1,000 கோடி முதலீடு செய்திருந்தாலே ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
ஒடுகத்தூரை அடுத்த பெரிய எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 60). இவர்களுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.
அதே பகுதியில் விவசாயி செந்தில் என்பவருக்கும் கிணறு உள்ளது. செந்திலின் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் அவர் கிணற்றை ஆழப்படுத்த பாறைகளை உடைப்பதற்காக கடந்த 30-ந்தேதி எந்திர உதவியுடன் வெடிவைத்துள்ளார்.
அப்போது அந்த வெடி, வெடித்ததில் கிணற்றுக்குள் இருந்த பாறைகள் சிதறின. இதில் வள்ளியம்மாள் வீட்டின் கூரை மீது ஒரு கல் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. இதனால் செந்தில் தரப்பினரை வள்ளியம்மாள் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் செந்தில் மற்றும் அவரது தரப்பினர் வள்ளியம்மாளை தாக்கினர்.
தனது தாயார் தாக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த வள்ளியம்மாளின் மகன் கோவிந்தன், அது குறித்து செந்தில் தரப்பினரிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கோவிந்தன் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து தனது ஆதரவாளர் சாமிநாதனிடம் கொடுத்து செந்திலை சுடுமாறு கூறிதாக தெரிகிறது. செந்திலை சுட்டதில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த செந்திலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வள்ளியம்மாள் அளித்த புகாரின்பேரில் செந்தில் (28), வெங்கடேசன் (24), சத்தியராஜ் (22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாமலை (59), ஜெயராமன் (30), கோவிந்தன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருதரப்பிலும் தலைமறைவான சுப்பிரமணி, அண்ணாமலை, சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews






