என் மலர்
வேலூர்
வாலாஜாவில் பா.ம.க. சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு இளைஞர்கள், மகளிர்கள், பொதுமக்கள் இடையே கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை பா.ம.க. கண்டிக்கிறது.
5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுதேர்வு தேவையற்றது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று விதிகள் இருந்தது.
ஒருசில நபர்களால் கொள்கை முடிவை மாற்றியமைத்துள்ளனர்.கிராமபுறங்களில் 5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் போகும் மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோர்களுடைய வேலையை பார்ப்பார்கள்.
இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகும் சூழல் வரும். உடனடியாக தமிழக அரசு இதனை திரும்பப் பெற வேண்டும். இதனால் கல்வி தரம் உயரும் என்றால் நிச்சயமாக கிடையாது. இதனால் கடுமையான பின்னடைவுதான் வரும்.
இதனை கடுமையாக பாமக எதிர்க்கும் வரும் 28-ந்தேதி சென்னையில் 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது.
ஒரு விவசாயி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை சொல்கிறார் காவிரி டெல்டா பகுதியில் அந்த மண் உணவு அளித்திருக்கிறது. அதனை பாதுகாப்பு கொண்டு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
நீர் மேலாண்மைக்கு தொடர்ந்து பா.ம.க. குரல் கொடுத்து வருகிறது. ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடுக்கு குடிநீர் விவசாயத்திற்கு போதுமான நீரை பூர்த்தி செய்ய வேண்டும்.
பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நீதி நமக்கு கிடைத்திருக்காது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பலவகை போராட்டங்களை நடத்தி வந்தவர்.
இந்த சம்பவங்கள் நடந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினி பெரியார் பற்றி பேசியதை தவிர்த்து இருக்கலாம். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது.
எனவே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து 50 ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயத்தை இன்றைய சூழலுக்காக விவாதம் செய்வது தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் சங்கம் நகர், அடுத்த திரு.வி.க நகரை சேர்ந்தவர் விக்னேஷ் நகை தொழிலாளி இவரது மனைவி ஓவியா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி 7 மாதங்களாகியும் கர்ப்பமடையவில்லை என்ற ஏக்கத்தில் ஓவியா இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த ஓவியா தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஓவியா மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓவியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி சரவணன், மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓவியா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓவியாவிற்கு திருமணமாகி 7 மாதமே ஆனதால் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகின்றார்.
அரக்கோணம்:
சேலம் கெங்கவல்லி கிராமத்தை சேர்ந்தவர் அல்ஜியானி (வயது 31). இவர் ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்து பயணிகளிடம் பணம் வசூல் செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் திருத்தணி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு பயணிகளிடம் அல்ஜியானி டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பயணிகள் டிக்கெட் வைத்திருந்தாலும் ரெயில்வே விதிகளை மீறியதாக கூறி இல்லாத விதிகளை கூறியும் பணம் கேட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். திருத்தணியில் இருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அல்ஜியானியை பிடித்து விசாரித்தனர். அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்று தெரியவந்தது.
அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருத்தணிக்கு சென்று அல்ஜியானியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். எந்தெந்த ஊர்களில் டிக்கெட் பரிசோதகராக நடித்து பணம் பறித்தார். போலி டிக்கெட் ரசீது மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கிறாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அடுத்த லத்தேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகள் நிவேதினி (வயது 14). லத்தேரி குடியாத்தம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை மீட்டு கே.வி.குப்பம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மாணவர்கள் ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் மாணவி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மாணவி எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவரும்.
இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகள் நிவேதினி (வயது 14) லத்தேரி குடியாத்தம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு கே.வி.குப்பம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
லத்தேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த துத்திபட்டை சேர்ந்த மாணவி பென்னாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை மாணவி பள்ளிக்கு தனியாக நடந்து சென்றார். கேசவபுரம் என்ற இடத்தில் சென்றபோது 2 வாலிபர்கள் மாணவியை வழி மறித்து கையை பிடித்து இழுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் மாணவிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் அங்கிருந்து அலறி அடித்து தப்பி ஓடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
எதற்காக மாணவியை வழிமறித்து வெட்டினர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பள்ளிக்கு சென்ற மாணவியை வழி மறித்து கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் வேலூர் கோட்டை பூங்காவில் காதலனை தாக்கி கத்தி முனையில் இளம்பெண்ணை 3 பேர் கற்பழித்த சம்பவம் நடந்த நிலையில் தற்போது மாணவியை நடுரோட்டில் வெட்டிதாக்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூர் பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அதே கடையில் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். காதல் ஜோடியான 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலை முடிந்ததும் வேலூர் கோட்டை பூங்காவில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
கோட்டை பூங்காவில் சிலர் கும்பலாக மது குடிப்பது கஞ்சா என்ற போதை பொருள் பயன்படுத்தி வருகின்றனர். போதையில் அவர்கள் புல்வெளியில் படுத்து விடிய விடிய தூங்குகின்றனர்.
காதல் ஜோடி தனிமையில் இருந்த இடத்தின் அருகே வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் (18), சக்தி (18), அடைமணி (18) ஆகியோர் கஞ்சா போதையில் இருந்தனர்.
3 வாலிபர்களும் காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம் பெண்ணை தனியாக இழுத்தனர். அப்போது தடுத்த அவரது காதலனை அடித்து உதைத்தனர். பெரிய கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர்.
பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மலை பறித்தனர். அவரது செல்போனையும் பறித்து விட்டனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை கத்தியால் மிரட்டி 3 பேரும் கற்பழித்தனர். அப்போது அவர் அலறி கூச்சலிட்டார். இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்கினர். முகத்தில் காயம் அடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடிவந்தனர். இதனையடுத்து கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
காதல் ஜோடியிடம் அத்துமீறிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் இளம்பெண்ணின் காதலனிடம் விசாரணை நடத்தினர்.
வேலூர் டவுன் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் இளம்பெண்ணின் காதலனை கற்பழிப்பு நடந்த இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து கும்பல் எப்படி தாக்கினர்.
எந்த இடத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார் என காதலன் கூறினார். இதன் மூலம் கும்பல் பூங்காவில் போதை பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வேலூர் தெற்கு காவல் நிலையம் கோட்டை பின்புறம் உள்ள பெங்களூர் சாலை மக்கான் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் சிக்கினார். அவனிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தது தெரியவந்தது.
இதையைடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வசந்தபுரத்தில் பதுங்கி இருந்த சக்தி, அடைமணி ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் சுற்றித் திரிந்ததும், அங்கு போட்டோ எடுத்ததும் வாட்ஸ்அப்பில் பரவியது.
அவர்கள் தீவிரவாத கும்பலா அல்லது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசார் விசாரணையை தொடங்கினர். கோவில் அருகில் இருந்து பேசப்பட்ட செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், 2 செல்போனும், சிம்கார்டும் ஆம்பூரில் உள்ள கடையில் வாங்கியதாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆம்பூர் வந்த காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
செல்போன் கடையில் இருந்த ஊழியர்களிடம் விவரம் சேகரித்தனர். போலீசார் கைப்பற்றிய 2 முகவரியும் போலியானது என தெரியவந்தது.
இதையொட்டி ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆம்பூரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
காட்பாடி பாரதி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமணய்யா (வயது 63). டாக்டரான இவர் குடியாத்தம் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி குமாரி. மகன் சர்வபள்ளி பல் டாக்டராக உள்ளார்.
நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் தோட்டத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் வழியாக உள்ளே ஏறிக் குதித்தனர். முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் பீரோவை உடைக்க முயற்சி செய்து முடியாததால் பீரோ சாவியை தேடியுள்ளனர்.
பீரோ சாவி அங்குள்ள அலமாரியில் இருந்தது. சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 50 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவி, பாஸ்போர்ட் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.
தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருக்க வீட்டில் கொள்ளை நடந்த அறை மற்றும் வாசல் பகுதி என அனைத்து இடங்களிலும் மிளகாய் பொடியை தூவி விட்டு கும்பல் சென்றுவிட்டனர்.
நேற்று இரவு வீடு திரும்பிய டாக்டர் ரமணய்யா வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காட்பாடியில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார்.
இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர்.
துரைமுருகன் பேசியதாவது:-
நீங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். இந்தியா உங்கள் தாய்நாடு. இந்த நாட்டில் எத்தனையோ இனங்கள் உள்ளன. அதில் நீங்கள் ஒரு இனம். மதத்தால் வேறுபட்டவர்கள், வேறு ஒன்றுமில்லை. ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைக்கிறார்கள். ஹிட்லருக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும்தான். எனவே கட்சி அப்பாற்பட்டு இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
இந்தியா சவாலான இடத்தில் இருக்கிறது. இதுவரை ஆட்சி மாறியிருக்கிறது. பிரதமர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் நடப்பது தவறல்ல. ஆனால் நாட்டின் நடைமுறையை மாற்றுவதை ஏற்கமுடியாது. இந்திய கலாச்சாரம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். நாட்டின் சுதந்திரத்திற்கு போராடி வெற்றி பெற்றது போன்று இந்த போராட்டத்திலும் நாம் வெற்றிபெற வேண்டும் என்றார்.






