என் மலர்
திருவள்ளூர்
- திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
- தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் ஏ. ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நகராட்சி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.
- அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
பூந்தமல்லி:
திருவேற்காடு அடுத்த காடுவெட்டி தரைப்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். சுடிதார் அணிந்து இருந்தார்.அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
அவர் கொலை செய்யப்பட்டு கூவம் ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களில் மாயமான பெண்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
- புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன்கோவில் முருகப்பெருமானின் 5-வது படைவீடாக உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களிலும், கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இதனால் திருத்தணி நகரின் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருத்தணி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம் 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலமும், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட பாலமும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே கட்டப்படும் பாலப்பணியை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணி முடிந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தை இணைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறையினர் மேற்கொள்ளும் பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருத்தணியில் புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.
- போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா (வயது 21).
இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதன் பின்னர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்காக நேர்முக தேர்வு வரை சென்றும் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்வேதா அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்றார். இதிலும் அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் வீடு திரும்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து பெற்றோர் அறைக்கு வந்து பார்த்த போது மகள் ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் நடத்திய சோதனையின் போது ஸ்வேதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவும். தங்கையை நன்றாக பார்த்து கொள்ளவும். அம்மாவை வேலைக்கு அனுப்ப வேண்டாம். பூனையை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்று எழுதி உள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.
கல்லூரி படிப்பு முடித்து அவருக்கு வேலை கிடைக்காத நிலையில் அவரது தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் வேலை கிடைக்காததால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற மன வேதனையில் அவர் தற்கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
- நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
- சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
பொன்னேரி:
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், சென்னை மக்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரின் தரம் மற்றும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் செ.சரவணன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் எம்.பி.கே.ஜெயகுமார், எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்த ராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர்.
- ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது.
பொன்னேரி:
சென்னை செங்குன்றம் அருகேயுள்ள பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அ.தி.மு.க பிரமுகரான இவர் ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.
இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பாடியநல்லூர் அங்காளம்மன் கோவில் திடல் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்தது.
இந்த திடல் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அங்காளம்மன் கோவிலும் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பகுதியில் பார்த்திபன் கொலை செய்யப்பட்டதால் அந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை தொடர்பாக செங்குன்றம் போலீசார் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களில் முத்து சரவணன் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்தவர். சண்டே சதீஷ் செங்குன்றம் ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர்.
பார்த்திபன் கொலை தொடர்பாக அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்தபடி அவர்கள் பலரை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை தொடர்பாக செங்குன்றம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், செங்குன்றம் துணை கமிஷனர் பால கிருஷ்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் மீஞ்சூர் சுங்கச்சாவடி அருகே மாரம்பேடு கண்டிகை கும்மனூர் வயல்வெளி பகுதியில் பதுங்கி இருந்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் ஜவஹர், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை அடைந்த போலீசார், ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரிடமும் உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம், வெளியில் வாருங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் அதை மீறி ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
ரவுடிகள் சுட்டதில் போலீஸ்காரர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதனால் போலீசார் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டார். அந்த 3 குண்டுகளும் ரவுடி முத்து சரவனன் மீது பாய்ந்தது. இதில் அவருக்கு 3 இடங்களில் குண்டு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சுட்டதில் ரவுடி சண்டே சதீஷ் மீது குண்டு பாய்ந்தது.
இதில் 2 ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்ப முயன்றதால் அதிரடியாக போலீசார் அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்.
இந்த நிலையில் ரவுடிகள் சுட்டதில் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களையும், போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்கவுண்டரில் பலியான ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரின் உடல்களும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் மீதும் தனித்தனியாக 25 வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளும் அடங்கும்.
இவர்கள் செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வந்தனர். பார்த்திபனிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் கொடுக்காததால் தான் அவரை கொலை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 2 ரவுடிகளும் போலீஸ் என்கவுண்டருக்கு பலியாகி உள்ளனர்.
- செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனரான தங்கவேல், கரூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனராக மாற்றப்பட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கமிஷனர் வீரராகவராவ், தொழிற்கல்வி கமிஷனராக மாற்றப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதஞ்சே நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.
வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வாசனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(67). இவர் திருவள்ளூரில் உள்ள உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் வாசனாம்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
கண்ணூர் எடை மேடை அருகே மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாராட்சி கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- வியாபாரி மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடையில் குட்கா, புகையிலை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து வியாபாரி மணிகண்டனுக்கு சொந்தமான குடோனில் ஆய்வு செய்தபோது 50 மூட்டைகளில் குட்கா, புகையிலை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இது தொடர்பாக வியாபாரி மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா? என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அகாரிகள் நேற்று இரவு 'திடீர்' சோதனை மேற்கொண்டனர்.
பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள் உணவகங்கள், மளிகை கடை குடோன்கள் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடந்தது.
சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, முதல் முறை தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5 ஆயிரமும், 3-வது முறை கண்டுபிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அந்த கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது பூந்தமல்லி உணவு பாதுகாப்புதுறை அதிகாரி வேலவன் உடன் இருந்தார்.
- குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதன்காரணமாக 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதேபோல் 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9817 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.
இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு சப்ளை செய்யமுடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சிறிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி.இதில் 2430மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 325 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081மி.கனஅடி. இதில் 498மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 22 கனஅடி தண்ணீர் வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. உபரி நீராக 100 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 237 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் 2589 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கனஅடி தண்ணீர் வருகிறது. 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 480 மி.கனஅடி நீர் நிரம்பி காணப்படுகிறது.
- அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
- போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது75). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்த குப்பைகளை வெளியே கொட்ட வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பத்மாவதியின் முதுகில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மூதாட்டி சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதில் நிலைதடுமாறிய மூதாட்டி பத்மாவதி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்து. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






