என் மலர்
திருவள்ளூர்
- கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
- மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் மக்கள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10 மணிநேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மின்வினியோகம் சீரானது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இடையிடையே சுமார் 10 நிமிடம் மட்டும் மின்வினியோகம் வழங்கபட்ட நிலையில் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது.

இதனால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் விடிய, விடிய தவித்தனர். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட போது அதிகாரிகள் யாரும் பதில் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர், தேரடி பகுதியில் இரவு நேரத்தில் மின் இணைப்பை துண்டித்து ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிக்க விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பக் கட்டணம் மற்றும் முதலீடுகள் செலுத்துவதை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
ஆசை வார்த்தைகளை விளம்பரப்படுத்தும் போலி நிறுவனங்களை நம்பி கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொகை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் வேலை, கல்லுாரிகளில் சேர வாய்ப்புகள் வாங்கித்தர அலைக்கழிக்கப் படும்போது இந்நிறுவனங்களுக்கு அளித்த ஆவணங்கள் மற்றும் முதலீடுகள் திரும்ப பெறுவது கடினமான பணியாகும். மேலும் இந்த பரிமாற்றத்திற்கு முறைப்படி சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டி உள்ளதால் காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இளைஞர்களும் மாணவ, மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது.
- இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் இருந்து முஸ்லிம்நகர் வழியாக ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையில் வந்தடையும் பாயிண்ட் பகுதி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மதனஞ்சேரி, தொண்டுகுழி, கண்டிகை ஆகிய கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் இருந்து ஜீரோ பாயிண்ட்டுக்கு இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு உங்களில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
இதில் தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது. மேலும் தாமரைகுப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே சாலையும் குண்டும் குழியு மாக மாறியது.
இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் ஒத்தையடி சாலையாக மாறிவிட்டது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்ட இடம் ஆபத்தான நிலையில் மெகா பள்ளமாக காட்சி அளிக்கிறது. இது இன்னும் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லவே அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே தாமரைக்குப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைத்து மெகா பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமரைகுப்பம் மற்றும் முஸ்லிம் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.
- திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி:
பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் திருத்தணி கோவிலுக்கு தற்போது வரும் பக்கதர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்ந நிலையில் இன்று வைகாசி மாதத்தில் வரும் முதல் சுப முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
மேலும் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. திருமணகோஷ்டி மற்றும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.
புதுமணத்தம்பதிகள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்போரூர்
இதேபோல் திருப்போரூர் முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
திருமண கோஷ்டியினர் வந்த வாகனங்களால் திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
- புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை.
ஊத்துக்கோட்டை:
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சம
நாயுடு கண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆரணி, புதுவாயல் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.
தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர்மட்டம் பெருக சுருட்டபள்ளியில் 1950- ம் ஆண்டில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பு அணையில் இருந்து ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கார் நகரில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு ஆரணி ஆற்று கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இப்படி திறந்து விடப் படும் தண்ணீர் அண்ணாநகர், ஊத்துக்கோட்டை வழியாக பாய்ந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு செல்லும்.
சுருட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சக்திவேடு சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு 1953-ம் ஆண்டில் ஊத்துக் கோட்டை நகர எல்லையில் சத்தியவேடு சாலையில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.
இந்தப் பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திராவில் உள்ள சத்தியவேடு, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர், ராக்கெட் ஏவுதளம் அமைந் துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.
குறிப்பாக இந்த சாலை வழியாகத்தான் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் ராக்கெட் உதிரி பாகங்கள், கனரக வாகனங்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் நெல்லூர் - சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களை இந்த பாலம் வழியாக ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பாலம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் கடும் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த அதிர்வால் பாலத்தில் சில இடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதேபோல் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களிலும் லேசாக விரிசல் ஏற்பட்டு உள்ளன. பாலத்தில் உள்ள விரிசல்களில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன.
கடந்த சில் நாட்களுக்கு முன்னர் பாலத்தின் இடது புறத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பொதுமக்கள் ஒன்று திரண்டு மெகா பள்ளத்தை பாறாங்கற்களை கொண்டு சீரமைத்தனர்.
இதனை கருத்தில் கொண்டு பழுதடைந்த இந்த பாலத்தை அகற்றிவிட்டு புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன.
- பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். அதில் பல்வேறு நாய்களை அடைத்து வைத்து பராமரித்து வந்தார். அதுமட்டுமின்றி வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்க முடியாத நாய்களை இங்கு கொடுத்துவிட்டு செல்லும் நிலையில் அதற்கான பணத்தை பெற்று பிரியா அந்த நாய்களை பராமரித்து வந்துள்ளார். இதனால் அந்த வீட்டில எப்போதும் அதிக அளவில் நாய்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நாய்கள் பராமரிக்கப்படாமல் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் பிரியாவும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் நாய்களுக்கு முறையாக உணவுகள் ஏதும் வழங்கப்படாமல் அவை குரைக்கத்தொடங்கின. மேலும் அதன் மலம்,சிறுநீர் சுத்தப்படுத்தப்படாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாய்களுக்கு வழங்கப்பட்ட மீதி இருந்த இறைச்சிகள் அழுகிகிடந்தன. மேலும் உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன. பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டு கிடந்தன. இதனை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் தங்களது மாடியில் இருந்து நாய்களுக்கு உணவுகளை வீசினர்.
இதற்கிடையே கடும் துர்நாற்றம் மற்றும் நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தனியார் தொண்டு நிறவனத்தினரிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரிய அமைப்பில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் மதனகோபால் தலைமையில் தனியார் விலங்குயகள் நல ஆர்வலர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் பரிதாபமான நிலையில் நாய்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
3 ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டின் அறைகள், மொட்டை மாடி மற்றும் வீட்டின் பாதை அனைத்தும் நாய்களின் மலம், சிறுநீர் மற்றும் அழுகிய உணவுகளால் துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான நாய்களுக்கு தோல் அலர்ஜி நோய், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டதில் அதன் உடல்களில் காயம் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கிருந்த 18 நாய்களை மீட்டனர். இதுபற்றி பராமரிப்புக்காக விட்டுச்சென்ற அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களது நாய்களை மீட்டுச்சென்றனர். மேலும் உரிமையாளர்கள் வராத நாய்களை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், தனியார் விலங்குகள் நல பராமரிப்பு மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டை வாடகைக்கு எடுத்து நாய்களை பராமரித்து வந்த பிரியா எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரிடம் மனிதாபிமானமற்று நாய்களை பராமரிக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மதன் குமார் என்பவர் கூறும்போது, இங்கு 30 நாய்கள் வரை இருந்தன. ஆனால் அதனை உரிய முறையில் பராமரிக்கவில்லை. நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.
- சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை கூவம் ஆற்றுக்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.
பருவமழையின் போது கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரையோர குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் எடுத்து வருகிறார்கள்.
இதற்காக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் வருவாய்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளை அகற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து திருவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
- மீட்கப்பட்ட நகை, பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு போலீசாரை பாராட்டினார்.
ஆவடி:
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.
இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார் திறமையாக செயல்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 185 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி, 398 செல்போன்கள், ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 யை போலீசார் மீட்டு உள்ளனர்.
மீட்கப்ட்ட நகை, பணம் மற்றும் பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட நகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க தங்க நகை கடை போல் காட்சியளித்தது.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட நகை,பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் ( ஆவடி ) ஐமான் ஜமால், (செங்கு ன்றம்) பாலகிரு ஷ்ணன், போ க்குவரத்து துணை கமிஷனர் ஜெய லட்சுமி, உதவி கமிஷனர்கள் ஆவடி அன்பழகன், பட்டாபிராம் சுரேஸ்குமார், அம்பத்தூர் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.
- விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
- ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஊராட்சியில் ஸ்ரீ மந்தவெளியம்மன் மற்றும் ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் ஜாத்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர்.
ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பம்பை உடுக்கை முழங்க பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கடல் நீர் கரையை தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது.
- கடல் அரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இன்றும் கடல் அலை அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடல் நீர் கரையை தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது.
இந்த நிலையில் அலை சீற்றம் காரணமாக பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி பகுதியில் கடல் நீர் கரையை தாண்டி அருகில் உள்ள பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த சாலை முழுவதும் மணலால் மூடப்பட்டது. சுமார் ½கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மணலால் மூடி துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கும், வடசென்னை அனல் மின்நிலையத்திற்கும் செல்லும் முக்கிய சாலை ஆகும். சாலை முழுவதும் மணல் மூடி கிடப்பதால் ஊழியர்கள் பொன்னேரி- மீஞ்சூர் வழியாக சுமார் 30 கிலோமீட்டர் சுற்றி சென்று வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த மிக் ஜாம் புயலின் போது கடல் அரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது.
அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது வழக்கமான கடல் சீற்றத்தில் சாலை வரை கடல் நீர் வந்து சாலை முழுவதும் மணலாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்காத அளவில் தடுப்பணை மற்றும் உயர்மட்ட பாலம் கட்டி போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.
- பொதுமக்கள் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- தற்போது இக்கோவிலில் இரண்டாவது முறையாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரையின் ஓரத்தில் கிராம தேவதைகளான அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோவில் மற்றும் செவிட்டு செல்லி அம்மன் திருக்கோவில்கள் என இரண்டு திருக்கோவில்கள் உள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு கோவில்களில் பாஸ்கர்(வயது48), கோவிந்தன்(வயது70) ஆகியோர் நேற்று இரவு பூஜையை முடித்துக் கொண்டு கோவில்களை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். இன்று விடியற்காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், கோவில்களில் இருந்த உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், அதிலிருந்த ரொக்க பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இதனால் அந்த உண்டியல்களை இங்குள்ள ஏரியில் வீசிவிட்டு சென்றிருந்தனர். கோவில்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வீசி இருந்தனர். இது குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எரோமியா அந்தோணிராஜ் தலைமையில் போலீசாரும், கிராம நிர்வாக அதிகாரி கோவிந்தசாமி, அருள் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர் டில்லிபாபு வந்து கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்துக் கொண்டு சென்றார். 2கோவில்களில் மொத்தம் மூன்று தாலிகள் அம்மன் கழுத்தில் இருந்தது. இவை மொத்தம் ஒன்றரை சவரன் ஆகும். இரண்டு கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் மொத்தம் ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். செல்லியம்மன் கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், இக்கோவிலில் இருந்த உண்டியல் தொகை ஒட்டுமொத்தமாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், செவிட்டு செல்லியம்மன் திருக்கோவிலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருடு போனது. தற்போது இக்கோவிலில் இரண்டாவது முறையாக திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார்.
- ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார். அவரை மகன் பாலாஜி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது. சொத்துக்கள் மற்றும் பணத்தை பறித்த பாலாஜி தனது தந்தை ரகுநாதனை இரக்கமின்றி வீட்டை விட்டு வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த ரகுநாதன் திருவள்ளூர் வீரராகவர் கோவில் முன்பு உணவின்றி, பிச்சையெடுத்து அங்கேயே ஒரு வாரமாக தங்கி இருந்தார்.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
என் உழைப்பில் வந்த வீடு, நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை எனது மகன் பாலாஜியும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரும் திட்டமிட்டு பறித்து என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். என்னை பசி பட்டினியால் கொடுமை செய்து கொல்லவும் துணிந்து விட்டார்கள்.
அவர்களால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. என் சொத்தையும் எனது மனைவியின் நகைகளையும் அபகரிக்க நினைக்கும் மகன் பாலாஜியிடம் இருந்து என்னை பாதுகாத்து சொத்தை மீட்டு தர வேண்டும்.
இதற்கு உடந்தையாக இருக்கும் மகனின் மனைவி, மாமனார், மைத்துனர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






