என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.





    • பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் உள்ள வீடுகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்தனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிதண்ணீர் குழாயை சீரமைத்து அதில் கழிவு நீர் கலக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    • இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

    இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்

    பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

    இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்தில் கடந்த ஜூன் 7-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி 14 நாட்கள் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 1303 பல்வேறு மனுக்களில் 249 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் வாகே.சங்கேத் பல்வத் சான்றிதழ் வழங்கினர். மீதம் உள்ள மனுக்களுக்கு பரிசிலனை செய்து வழங்கபடும் என தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த 65 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாகேட்டு கடந்த 3 வருடமாக ஜமாபந்தியில் மனு அளித்தும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறியும் இது வரை நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதேபோல் பொன்னேரி அடுத்த காட்டவூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விடுபட்ட 16 பேருக்கு பட்டா வழங்க கோரியும் 66 பேருக்கு அசைமெண்ட் பட்டாவை கம்ப்யூட்டர் பட்டாவாக மாற்றியமைக்க கோரியும் பலமுறை ஜமாபந்தி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மங்கை உமாபதி, பிரியா ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டனர்.

    • துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (11-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையடுத்து துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அழிஞ்சிவாக்கம் ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர். ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை,கணேஷ் நகர், சாய் கிருப நகர், சங்கீதா ஓட்டல், சித்தி விநாயகர், பண்ணை ஸ்ரீநகர் விஷ்ணு பவன், மாதவராவ் பெட்ரோல் பங்க், இருளிப்பட்டு எம்.கே. கார்டன், அத்திப்பட்டு விருந்தாவனம் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • விசாரணையில் ஆந்திராவில் இந்து குட்காவை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • குட்கா கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் திருவள்ளூர் வழியாக காரில் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரை பெரும்புதுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மொத்தம் 102 கிலோ இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக காரில் இருந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சட்டாராம், தயாராம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவில் இந்து குட்காவை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா, புகையிலை எங்கு கடத்தி செல்லப்பட்டது? அவர்களுடன் தொடர்பில் உள்ள குட்கா கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியில் கஞ்சா விற்ற கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் (36) என்பவரை இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அவருடன் தொடர்பில் உள்ள கஞ்சா கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரம் வேக மாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆடி, தை அமாவாசை நாட்கள் மற்றும் மற்ற நாட்களில் வரும் அமாவாசை நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் கூட்டம், கூட்டமாக சாலையில் ஹாயாக சுற்றி வருகின்றன. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நிற்பதால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் சில நாட்கள் சாலையில் சுற்றிய மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தற்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் திருவள்ளூர் நகர் பகுதியில் மாடுகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எந்த சாலையில் திரும்பினாலும் மாடுகள் ஹாயாக சுற்றி வருகின்றன.

    குறிப்பாக திருவள்ளூரின் முக்கிய பகுதியான ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை செல்லும் சாலையில் பஸ், லாரி, ஆட்டோ, ஆம்னி வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை வழிமறித்து மாடுகள் கூட்டமாக செல்வதால் அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசாரும், வாகன ஓட்டிகளும் சாலையில் நிற்கும் மாடுகளை விரட்ட கடும்பாடுபட்டு வருகிறார்கள்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் வாகனங்க ளுக்கு இடையே புகுந்து சாலையில் படுத்து கொள்கின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி பயணம்செய்து வருகிறார்கள்.

    மேலும் முக்கிய சாலையின் சிக்னல் கம்பம் அருகேயும் மாடுகள் படுத்து கொள்வதால் போக்குவரத்து போலீசார் அதனை விரட்ட தினந்தோறும் தவித்து வருகிறார்கள்.

    எனவே திருவள்ளூர் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவர் கூறும்போது, `நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்வேன்.

    காலையில் வீட்டில் இருந்து செல்லும்போதும், இரவு நேரத்தில் திரும்பி வரும் போதும் தேரடி முதல் ரெயிலடி வரை ஜெ.என் சாலையில் மாடுகள் படுத்து கிடந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    எனவே சாலையில் சுற்றும் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    பெரியகுப்பத்தை சேர்ந்த சம்பத் கூறும்போது, திருவள்ளூரில் உள்ள பள்ளியில் படித்து வரும் எனது மகனை தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வேன். சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயத்தில்தான் தினந்தோறும் செல்ல வேண்டி உள்ளது.

    பலர் மாடுகள் மீது மோதி விழுந்து செல்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

    • லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்.
    • மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அருகே பெரும் பேர்கண்டிகை டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம கும்பல் மதுக்கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றும் முடியாததால் மதுபாட்டில்களை பெரிய பையில் அள்ளினர்.

    அந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து வந்தனர். உடனே மதுக்கடையில் இருந்த கும்பல் அங்கிருந்து மதுபாட்டில்களுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். போலீசார் பிடிக்க முயன்றும் முடிய வில்லை.

    போலீசார் மதுக்கடைக்குள் வந்து பார்த்தபோது அங்கிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயன்று இருப்பது தெரிந்தது. மேலும் கடையில் மின் இணைப்பை துண்டித்தும், கண்காணிப்பு காமிராவை உடைத்தும் கைவரிசை காட்டி உள்ளனர்.

    லாக்கரை உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை பையில் அள்ளி சென்று உள்ளனர். கொள்ளையர்கள் தப்பி ஓடியபோது ஒரு பையில் இருந்த மதுபாட்டில்களை விட்டு சென்று இருக்கிறார்கள்.

    மேலும் அவர்கள் அணிந்து இருந்த 2 சட்டைகளையும் விட்டுச் சென்றுள்ளனர். இதனை கைப்பற்றி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாக்கரில் ரூ.12 லட்சம் விற்பனை பணம் இருந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துஇருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
    • ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள நடுக்குத்தகையில் சுமார் 51.ஏக்கர் நிலபரப்பில் பெரியஏரி உள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏரி நிலத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள், வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இதையடுத்து திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில் 391, வீடுகள் சுமார் 15 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது.

    ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதற்கிடையே தற்போது மேலும் புதிதாக ஏரியை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி இருப்பதாக பொதுப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரின் உதவியுடன் நடுக்குத்தகை பெரிய ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
    • ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த 4ம் தேதி ஆக்கிரப்பு வீட்டை வருவாய்த் துறையினர் அகற்ற முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் 85சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் உயிரிழந்தார்.

    ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    ×