என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • வேனில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேனில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வந்த சூழலில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.


    இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அத்துடன் தடுப்புகள் வைத்தும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

    பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதவியில், "திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட நாட்டு வெடிகுண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நாட்டு வெடிகள் தயாரித்து வந்ததை விடியா திமுக அரசும், காவல்துறையும் அறிந்திருக்காமல் இருந்தது ஏன்?

    விடியா திமுக ஆட்சியில் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகம் என்பது அறவும் செயல்பாட்டில் இல்லை என்பதையே தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்தும் செய்தி.

    தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் விடியா திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    இந்த விபத்திற்கான காரணத்தை உரிய விசாரணை மூலம் கண்டறியுமாறும், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் குடியிருப்பு பகுதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • காவல் நிலையம் திறக்கப்பட்டு இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 17 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    திருப்பூர் மாநகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்தது.


    இதையடுத்து தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 2.24 ஏக்கர் பரப்பில், 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று காலை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா , அரசு துறை அலுவலர்கள் , காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையம் மற்றும் தெற்கு மகளிர் காவல் நிலையம் பலவஞ்சிபாளையம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

    பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக புகார் அளிக்கவும், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறவும் ஏராளமானோர் தினந்தோறும் காவல் நிலையம் வந்து சென்றனர். போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இட நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் புதிய காவல் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 7000 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாக கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வீரபாண்டி காவல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    • திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் பென்னி (வயது 67), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.

    திருப்பூரில் இருந்து தினந்தோறும் ரெயில் மூலமாக கோவையில் உள்ள கல்லூரிக்கு பணிக்கு சென்று வந்துள்ளார் .

    கடந்த 1-ந்தேதி பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திலிருந்து அவர் வழக்கமாக செல்லும் பாதைகளில் உள்ள சிசிடிவி., கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலை, அய்யப்பன் கோவில் அடுத்த சூசையாபுரம் செல்லும் ரெயில்வே சுரங்க பாலம் வழியே கடந்த 1-ந் தேதி இரவு திரும்பியுள்ளார். அதன் பிறகு கண்காணிப்பு கேமராக்களில் அவர் சென்றது பதிவாகவில்லை.

    எனவே அப்பகுதியில் உள்ள அகன்ற சாக்கடை கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு முதல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சூசையாபுரத்தில் இருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் வேறு பகுதிக்கு அடித்துச்சென்று இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 1-ந்தேதி இரவு திருப்பூரில் கனமழை பெய்தது. அப்போது ராஜன் பென்னி ரெயில் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வழக்கமான பாதையில் திரும்பியுள்ளார். சூசையாபுரம் சுரங்கப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை கடந்து செல்ல முயன்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
    • நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெரமியம் கிராமத்தில் பஜனை கோவில் உள்ளது. இங்கு ராமர் உருவ படம் வைத்து குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பிரிவை சேர்ந்த அண்ணாதுரை உட்பட 25 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தும், பஜனை கோவில் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என கடும் கட்டுப்பாடுகளை ஒரு தரப்பினர் விதித்தனர்.

    இதையடுத்து 25 குடும்பத்தை சேர்ந்தோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாரர் அண்ணாதுரை மூலம் மனு தாக்கல் செய்தனர். எதிர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு பிரிவுகளாக செயல்படாமல் ஒரே பிரிவாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் மற்றொரு தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கென ஒரு தேதியை தேர்ந்தெடுத்து அதில் விழா கொண்டாட தொடங்கினர். இந்தநிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திரவியம் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., தினேஷ்குமார் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

    நீதிமன்ற உத்தரவின்படி கிராம விழாவை இருதரப்பும் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாதுரை தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல்துறை அதிகாரி ஒருவரும் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிலரும் , நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மற்றொரு தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறியும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தும் டி.எஸ்.பி., தினேஷ் குமாரின் காலில் விழுந்து அண்ணாதுரை கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை தூக்கிவிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

    • போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
    • புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் சில நாட்களுக்கு முன் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலருக்கு திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் போலியாக ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் 4 ஆண்டுகளாக மாரிமுத்து உள்ளூர், வெளியூர் நபர்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு ஆதார் பெற்று கொடுத்துள்ளார். மேலும் ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், இ-சேவையில் உள்ள பெண் பணியாளர் மற்றும் பான் கார்டு வாங்கி கொடுத்த வாலிபர் என 3 பேரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் விசாரித்த பின் இந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மாரிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்த அவர் வங்கதேசத்தில் இருந்து வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளார்.

    மேலும் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் பேக் ஒன்றை வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பேக்கை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் போலியாக ஆதார் கார்டு பெற 200 விண்ணப்பங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது மட்டுமின்றி வங்கதேச தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வரும் புரோக்கர்கள் போலியாக ஆதார் கார்டு பெற மாரிமுத்துவை அணுகுமாறு தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). இவர் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி வாட்ஸ்அப் மூலம் அழைப்பு வந்தது. அப்போது அதில் பேசிய நபர் பங்குச்சந்தையில் லாபகரமான பங்குகளுக்கான பரிந்துரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    அந்த நபர் கூறியபடி வாட்ஸ்அப் லிங்க்குக்குள் சென்று உறுதி செய்துள்ளார். பின்னர் ராஜசேகரை வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த வாட்ஸ்அப் குழுவில் வந்த யாதவ் என்பவர், ராஜசேகரிடம் குறிப்பிட்ட பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    ராஜசேகரும் அவருடைய செல்போனில் யாதவ் அனுப்பிய இணைப்பை பதிவேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து யாதவ் கூறியபடி ராஜசேகர், பங்குச்சந்தை வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ.41½ லட்சம் அனுப்பியுள்ளார். அந்த குழுவில் தனது லாப பணத்தை ராஜசேகர் கேட்ட போது எந்த பதிலும் வரவில்லை.

    அதன்பிறகே மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேப்போல் திருப்பூர், காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (29). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி குறுஞ்செய்தி வந்தது. அதில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஞானசுந்தரம் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரமும், திருப்பூரில் ஓட்டல்களை மதிப்பாய்வு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.

    பின்னர் பணத்தை முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பிய ஞானசுந்தரம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். தொடர்ந்து ஞானசுந்தரம் செலுத்திய பணத்திற்கு லாபம் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் குழுவில் கேட்க ஞானசுந்தரத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஞானசுந்தரம் மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப் குழு மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

    • பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது.
    • வெளியில் பிராண்டட் மொபைல் போன் போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த மாநிலங்களை காட்டிலும் அதிக சம்பளம், எப்போதும் வேலை என்ற காரணத்தால் குடும்பத்துடன் குடிபெயர்ந்து திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை திருப்பூரின் புது மார்க்கெட், அனுப்பர்பாளையம், காதர்பேட்டை, பழைய மார்க்கெட் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக சந்தைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர்.

    வடமாநில தொழிலாளர்களின் வருகையை குறிவைத்து ஏராளமான வணிகர்கள் சாலையோர கடைகளையும் அமைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

    இதுபோன்று வரும் வடமாநில தொழிலாளர்களிடம் ஒரு சிலர் தங்களிடம் விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பதாகவும், அவசர தேவை காரணமாக குறைந்த விலைக்கு விற்பதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை 5 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக கூறி விற்பனை செய்து வருகின்றனர்.

    வெளியில் பிராண்டட் மொபைல் போன் போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணாடிகளை வைத்தும், விலை குறைந்த கேமரா லென்ஸ்களை வைத்தும் போலியாக தயாரித்து பிராண்டட் மொபைல் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பர்பாளையம் அருகே தற்காலிக சந்தையில் இது போன்ற செல்போன் வாங்கிய வடமாநில வாலிபர் அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்த போது போலியான உதிரி பாகங்களுடன் செல்போன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நாடோடி நபர்கள் போல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் இவர்களிடம் மீண்டும் இதுகுறித்து கேட்க முடியாததால் ஏமாற்றமடைந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது புகார் கொடுக்க முடியாமலும், ஏமாந்த பணத்தை திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    • கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • சிவன்மலை முருகனிடம் பூப்போட்டு கேட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றுமுன்தினம் முதல் புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இந்த கோவிலின் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், இக்கோவிலின் மூலவருக்கு கருணாமூர்த்தி என்ற பெயர் உள்ளது.

    சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய கூறுவார். அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சாமியிடம் அர்ச்சகர்கள் பூப்போட்டு உத்தரவு கேட்பர். சாமி உத்தரவு கொடுத்தால் அதன் பின்பு உத்தரவு பொருள் மாற்றி வைக்கப்பட்டு பூஜை நடக்கும்.

    உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி முதல் 2 இளநீர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வீரணம் கிராமம் சிவக்குமார் (வயது 30) என்ற பக்தரின் கனவில் சிவப்பு நிற புடவை வைக்க உத்தரவானது. இதையடுத்து சிவன்மலை முருகனிடம் பூப்போட்டு கேட்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்றுமுன்தினம் முதல் புடவை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஜவுளி விலை, ஜவுளி உற்பத்தியில் மாற்றம் வரும் எனவும், இதன் தாக்கம் போக, போகத்தான் தெரியவரும் என கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

    • காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.
    • விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களால் ஆடுகள் தொடர்ந்து வேட்டையாட்டப்பட்டு வருகிறது. ஆடுகளை கடித்து கொன்று வருவதால், கால்நடை விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வீராணம்பாளையம் செந்தில்குமார் என்பவருக்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.

    இந்நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். தொடர்ந்து காங்கயம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, இன்று ஆடுகளை பாடை கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று காலை காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.

    திருப்பூர் மாநகர எல்லையான நல்லூர் சிக்னல் அருகே வரும் போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள், பாடை கட்டி தூக்கி வந்த இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப்பிரச்சனை எதிரொலித்தது.

    ×