search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை
    X

    திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை

    • கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    • 3 பேரையும் கம்பி அல்லது கட்டையால் தாக்கியிருக்காலம் என தகவல் வெளியாகி உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வ சிகாமணி(வயது 76). விவசாயி. இவரது மனைவி அலமேலு(70).இவர்களது மகன் செந்தில்குமார்(48).

    இன்று காலை தெய்வசிகாமணி வீட்டின் வெளியேயும், செந்தில்குமார், அலமேலு வீட்டிற்குள்ளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்த சவரத்தொழிலாளி ஒருவர் உடனே இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தது. மேலும் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையர்கள் 3 பேரையும் அரிவாளால் வெட்டிக்கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய்,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் வரை மோப்பம்பிடித்தப்படி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் நடந்த பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி உள்ளனரா? என்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் தப்பித்து செல்லாமல் இருக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொழிலாளர்கள் மீது சந்தேகம்

    கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணிக்கு சேமலை கவுண்டம்பாளையத்தில் 15 ஏக்கரில் நிலம் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் உள்ளது. எனவே தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.

    இந்தநிலையில் நிலம் மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாமா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தெய்வசிகாமணி தென்னந்தோப்பில் தொழிலாளர்கள் சிலர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×