என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து ரோட்டில் பீர் ஆறாக ஓடியது.
    • விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமானது.

    ஊத்துக்குளி:

    செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பீர் கம்பெனியிலிருந்து கோயம்புத்தூரில் உள்ள டாஸ்மார்க் குடோனிற்கு லாரியில் 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு கோவையை நோக்கி வந்தது.

    லாரியை பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் ஓட்டி வந்தார். லாரி இன்று காலை 8 மணி அளவில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் அடுத்த பள்ளக்கவுண்ட ன்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து ரோட்டில் பீர் ஆறாக ஓடியது. மேலும் இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கு தேவையான அளவு பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். இதனிடையே பின்னால் வந்த மற்றொரு லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை அருகில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமானது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்
    • ஜூலை 5-ம் தேதி முதல் 26 நாட்களாக 18 மாவட்டங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் முடிவு பெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் நேற்று நிறைவு பெற்றது.நேற்று நடைபெற்ற போராட்டதிற்கு குண்டடம் மேற்கு ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

    சங்கத்தின் பொருளாளர் ரமேஷ் சிவக்குமார், சேமலை கவுண்டன்பாளையம் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆதரவு தெரிவித்தார். கொங்கு பண்பாட்டு மையம் மற்றும் கொங்கு வர்த்தக கூட்டமைப்பின் சார்பாக பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது.

    குழுவினரோடு சேர்ந்து பெருஞ்சலங்கை ஆட்டம் ஆடி விவசாயிகளின் போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆதரவு தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இச்செயல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தது.இதற்கிடையே கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் 26 நாட்களாக 18 மாவட்டங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் முதல் கட்டமாக நேற்றோடு நிறைவடைந்தது.அடுத்த கட்டமாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 7-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியரின் வழியே, தமிழக முதல்வருக்கு, மனு கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அலுவலகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தக் காளி உள்ளிட்ட காய்கறி களை விற்பனை செய்தனர்.
    • 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைத்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள வடக்கு உழவர் சந்தையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்க வந்தனர். சந்தையில் தக்காளி விலை கிலோ 115 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. இங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தக் காளி உள்ளிட்ட காய்கறி களை விற்பனை செய்தனர். சேவூர், பெரியகுரும்பபாளையத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி, தோட்டத்தில் விளைந்த, 1,300 கிலோ தக்காளியை விற்பனைக்காக எடுத்து வந்தார். இதை விற்றதன் மூலம் மொத்தம், 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைத்தது. இதுகுறித்து விவசாயி திருமூர்த்தி கூறியதாவது:-

    கடந்த சித்திரையில், 1 ஏக்கரில், 5,500 நாற்று தக்காளி நடவு செய்தேன். மூன்று மாதம் மிக கவனத்துடன் பாடுபட்டு, விளைந்த தக்காளியை விற்பனைக்கு கொண்டு சென்றேன். வழக்கமாக தோட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த முறை நானே சந்தைக்கு தக்காளி கொண்டு வந்து விற்பனை செய்தேன். தக்காளி கிலோ, 115 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது, இங்கு வந்த பின் தான் தெரிந்தது.

    கடந்த, 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு தொகை கிடைத்ததில்லை. மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு.
    • ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர்,ஜூலை.31-

    இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு. பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள் அதிகம் கிடைக்காது என்பதால் சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

    காரணம் பொருளாதா ரத்தில் பின்தங்கிய நாடு என்ற அடிப்படையில் உலக நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவா னதுதான். இந்தியாவுடன் 2011ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச ஜவுளி இந்தியாவுக்குள் வராதபடி கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி., அமலான பின் அந்த வரி விலக்கப்பட்டதால், எவ்வித தடையுமில்லாமல் வங்கதேச வர்த்தகர்கள், தமிழகத்தின் தென் மாவட்ட எல்லை வரை கடை விரிக்க துவங்கியுள்ளனர். இறக்குமதி வரியும் இல்லாததால் 30 முதல் 40 சதவீதம் குறைவான செலவுடன் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கிறது.

    இவ்வாறு கடந்த ஒரே ஆண்டில் வங்கதேச இறக்குமதி, 113 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது உள்நாட்டு சந்தைகளை பதம்பார்த்துவிட்டது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகளுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போராடி வெற்றி கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக சீனாவின் வர்த்தகர்களும், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

    குறிப்பிட்ட பொருள் இறக்குமதியால் உள்நாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு விவசாயிகள் பாதுகாப்புக்காக பஞ்சு இறக்குமதிக்கு வரி விதிப்பதும் அத்தகைய வரிதான். வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கும் 12 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. 2016 முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கும் ஜி.எஸ்.டி.,க்கும் சம்பந்தமில்லை. உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு மீண்டும் கவுன்டர் வெய்லிங் வரி விதிப்பை தற்காலிகமாக அமலாக்க முடியும்.

    இது குறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி, நுால்விலை குறைந்த பின் சீராகி விட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். நுால் விலை உயர்ந்து இருந்த போது, உள்நாட்டு தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அப்போது, வங்கதேச இறக்குமதியை பலரும் ஊக்குவித்தனர். அதன் விளைவு, தற்போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு, உள்நாட்டு சந்தைகளிலேயே மதிப்பில்லாமல் போய்விடும். மலிவான விலையில் வங்கதேச ஆடையை வழங்குகின்றனர். வரிச்சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்துள்ளன. சீனாவில் இருந்து வங்கதேசம் வந்து அங்கிருந்து திருப்பூருக்கு ஆடைகள் வருகின்றன. இது சீனாவின் தலையீடாகவும் மாறியுள்ளது. உற்பத்தி செலவில் 30 சதவீதம் வரை குறைவு என்பதால் வங்கதேச ஆடை குறைவான விலைக்கு கிடைக்கிறது. உள்ளூரில் தயாரித்த ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே வங்கதேச இறக்குமதியை கட்டுப்படுத்தி, தொழிலை பாதுகாக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, சீனாவின் வர்த்தகர்களும் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

    • எம்.எம்.பி.எஸ். படிப்பிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மாணவனின் படிப்பிற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

    திருப்பூர், ஜூலை. 31-

    நடப்பு ஆண்டு எம்.எம்.பி.எஸ். படிப்பிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வான முத்தூர் அரசு பள்ளியில் பயின்ற மோளக்கவுண்டன்புதூரை சார்ந்த ஆறுமுகம் (நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணியாற்றுகிறார்). அவரின் மகன் அபிஷேக் கோவை தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வானார். அவரது படிப்பிற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

    மாணவர் அபிஷேக்கிற்கு, கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஸ்டெதாஸ்கோப், மற்றும் மருத்துவர் அங்கி, ஆகியவற்றை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    உடன் வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன் மற்றும் முத்தூர்பேரூர் கழக செயலாளர் செண்பகம் பாலு ஆகியோர் உள்ளனர்

    • ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய ரெயில் போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
    • தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்

    உடுமலை,ஜுலை.31-

    குறைவான செலவில் நிறைவான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தி தருவது ரெயில் போக்குவரத்து. ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய இந்த போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.இதன் காரணமாக ஆன்மீகப் பயணம் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்பவர்களின் முதல் தேர்வாக ரெயில் போக்குவரத்து உள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு முருகனை தரிசிக்க மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.இந்த நிலையில் சனி ஞாயிறு வார விடுமுறை யொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதன் காரணமாக டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியதால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக அங்கு அமைக்கப்பட்ட தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரமும் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் சென்றனர். மேலும் வார விடுமுறை, பொது மற்றும் அரசு விடுமுறைகள், பண்டிகை நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பொதுமக்கள் அதிகளவில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார்.

    திருப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் ஹஜ் மந்த்சிங் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தனர். அவர்கள் ஹஜ் மந்த்சிங்கை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி கடையில் இருந்த ரூ.16 லட்சம் மற்றும் 4 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கொள்ளை நடந்த கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொள்ளை கும்பல் வந்த கார் திருப்பூர்-பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கேட்பாரற்று நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் காரின் பதிவு எண்ணை கொண்டு நடத்திய விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசின் கணவர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் தனித்தனியாக பிரிந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெண் போலீசின் கணவர் சக்திவேல், அழகர் உள்ளிட்ட 2 பேரை சிவகங்கையில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இவர்கள் ஏற்கனவே இதுபோன்று பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சென்னையில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் வழிப்பறி வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்கள் ஆறு பேரை பிடித்ததுடன் பணத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார்.

    • பி.ஏ.பி., திருமூர்த்தி பாசனத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 330 ெஹக்டர் (3.77 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
    • ஓட்டுப்பதிவு முடிந்ததும உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., திருமூர்த்தி பாசனத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 330 ெஹக்டர் (3.77 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மொத்தம் 134 பாசன சங்கம், 9 பகிர்மான குழு தலைவர், 45 பகிர்மான குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கான தேர்தல் நடந்த நிலையில், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை 1ந் தேதி நடத்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை 1-ந்தேதி நடக்கிறது. திட்டக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் காலை 10 மணிக்குள் வெளியிடப்படுகிறது.

    காலை 10:30 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், காலை, 10:45 மணிக்கு வேட்பாளர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்படும். காலை 11:30 முதல் மதியம் 12:15 மணி வரை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அன்று மதியம் நடக்கிறது. உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்களை மதியம் 1:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை தாக்கல் செய்யலாம்.மனுக்கள் கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும்.மாலை, 3:30 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

    வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மாலை 3:45 மணிக்கு வெளியிடப்படும். மாலை 4:30 மணி முதல் 5:15 மணிக்குள் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

    பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக உடுமலை கால்வாய் பகிர்மான குழு, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பகிர்மான குழுக்களின் தலைவர்கள், அசல் தேர்தல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றனர்.   

    • 2021ம் ஆண்டு, மாங்காபாறை வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது ஆட்டுக்கூட்டத்துடன் வரையாடு ஒன்று சேர்ந்தது.
    • கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டது.

    உடுமலை:

    கேரளா மாநிலம் சின்னாறு வன உயிரின காப்பகம், மறையூர், காந்தலூர், பாலப்பட்டி, மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு, மாங்காபாறை வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது ஆட்டுக்கூட்டத்துடன் வரையாடு ஒன்று சேர்ந்தது.

    இரு ஆண்டுகளாக ஆடுகளுடன் சேர்ந்து, மேய்ந்தும், இரவு நேரங்களில் பட்டிகளில் அவற்றுடனே உறங்கி, கிராமத்திற்குள் வளர்க்கும் ஆடு போல் மாறியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் இயல்புகளில் மாற்றம் ஏற்பட்டது.

    ஆடுகளை தாக்குவது, மனிதர்களை தாக்குவது என தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தியது. வரையாடு தாக்கிய சம்பவங்களில் 8 பேர் காயமடைந்தனர். இதில், 2பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.மனிதர்களை தாக்கிய வன விலங்கான வரையாட்டை பிடிக்க வேண்டும் என, கிராம வனக்குழு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வன அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதனையடுத்து கேரளா வனத்துறையினர், வலை வீசி வரையாட்டை பிடித்து கூண்டுக்குள் அடைத்து, வரையாடு தேசிய பூங்காவான ராஜமலைக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண் வரையாடு குட்டியாக இருந்த போது, மற்ற ஆடுகளுடனும், மக்களுடனும் சகஜமாக இருந்துள்ளது. தற்போது 3 ஆண்டுகள் வளர்ந்த நிலையில் இனப்பெருக்கம் மற்றும் அதன் கூட்டத்தை தேடியுள்ளது.

    அதனை பாதுகாப்பாக பிடித்து ராஜமலையில் வரையாடுகள் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்றனர்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வனத்துறையினர் வைத்துள்ளனர்.
    • மலையின் உச்சியில் பதுங்கி இருந்தால் அதனுடைய நடமாட்டம் தெரியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    காங்கயம்

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையடிவார பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. மேலும் ஆட்டுபட்டி அருகே இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்றது. இதுவரை சுமார் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 2 நாய்கள் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளது.

    இதனால் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்குள் வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என ஊதியூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதி மற்றும் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை குறித்த தகவலோ, கால்தடங்களோ, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளிலோ சிறுத்தை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆடுகளும் மாயமாகவில்லை.20 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தை எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் தினசரி வந்து போகும் இடங்கள், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

    மேலும் வன விலங்குகள் வேட்டையாடப்பட்ட அறிகுறிகளும் கிடைக்க வில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிறுத்தை வேறுபகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது மலையின் உச்சியில் பதுங்கி இருந்தால் அதனுடைய நடமாட்டம் தெரியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பின்னர் சிறுத்தையின் தகவல் குறித்து உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.


    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தளவாய்பட்டிணம் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கன்வாடி மையம் சார்பில் புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலத்துக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுகாதார பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
    • 2-வது மற்றும் 3-வது மண்டலத்தில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலத்துக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சுகாதார பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்ளும் சுகாதார பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் 3-வது மண்டல அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத் மற்றும் 2-வது மற்றும் 3-வது மண்டல கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதுபோல் 1-வது மண்டல அலுவலகத்தில் 1-வது மற்றும் 4-வது மண்டல வார்டுகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி மற்றும் 1-வது, 4-வது மண்டல வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள்.

    ஏற்கனவே 2-வது மற்றும் 3-வது மண்டலத்தில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதே நிறுவனத்துக்கு 4 மண்டலத்துக்கான குப்பை அள்ளும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    அப்போது 1-ந் தேதி முதல் 1-வது மற்றும் 4-வது மண்டல பகுதியில் குப்பை அள்ளும் பணியை தனியார் மேற்கொள்வதை 2 வாரங்களுக்கு பார்வையிட்டு அதன்பிறகு மேல்நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×