என் மலர்
திருப்பூர்
- “சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது
திருப்பூர்:
தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, "சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகுவிமரிசையாக அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுதினம் கொண்டாட ப்படும். ஆங்கிலேயர்களை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று, தூக்கிலிடப்பட்ட வீரன் தீரன் சின்னமலையை அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாடக் கூடிய வகையில், திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தோம். அவர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆடி 18-ம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள்.
- விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது.
திருப்பூர்:
தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினர் பலர் சமையலில் தக்காளியை தவிர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில வாரங்களாகவே தக்காளி பயிர் செய்த விவசாயிகள் பலர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி உள்ளனர் என்ற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தக்காளியை பயிர் செய்த விவசாயி ஒருவர் ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளியை விற்பனை செய்துள்ளார். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜோதியம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் (27) தான் விளைவித்த தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். 3900 கிலோ தக்காளிகளை 260 பெட்டிகளில், பெட்டிக்கு 15 கிலோ வீதம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். ஒரு பெட்டி ரூ.1550 முதல் விற்பனையானது.
தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்த நேரத்திலேயே மளமளவென விற்று தீர தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 160 வரை விற்பனையானது. இதன் மூலம் விவசாயி வெங்கடேசுக்கு ஒரே நாளில் ரூ. 4 லட்சத்து 3 ஆயிரத்திற்கு தக்காளி விற்பனையானது.
திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விற்பனை ஒரே நாளில் லட்சக்கணக்கில் நடந்தது, பல விவசாயிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:-
ஜோதியம்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறேன். தக்காளியை நம்பியே அதிக அளவு பயிர் செய்து வந்தேன். தற்போது 9 ஏக்கர் அளவிற்கு தக்காளி பயிரிட்டுள்ளேன். இந்த தக்காளிகளும் விளைந்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையை தக்காளி விலை அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இவ்வாறு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போலவே வழக்கமாக தக்காளிகளை பயிரிட்டேன். ஆனால் தற்போது தக்காளிக்கு பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்துள்ளதால் தக்காளி விற்பனை விறுவிறுவென நடந்து முடிந்தது. இன்னமும் தக்காளிகள் பறிக்க வேண்டி உள்ளது.
விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள். இதனால் பல விவசாயிகள் பெண் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது. இதுபோன்று திடீரென அதிக அளவு வருவாய் விவசாயத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நம்பிக்கையில் தான் பெரும்பாலான விவசாயிகள், நஷ்டத்தை சந்தித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இனி வருகிற காலத்தில் விவசாயிகளுக்கு பெண் கொடுக்க தயங்க மாட்டார்கள் என நம்புகிறேன். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
- புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்கள் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவிடம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கே என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்துகொண்டு மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு சுவர் விளம்பரம் எழுதுவது, வாகன வசதி ஏற்பாடு, மற்றும் திரளானோர் பங்கேற்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தின் போது திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை மணலூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏவிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பகுதி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- கடந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் 25 குறைந்தது.
- நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இது போல் கடந்த மாத நூல் விலை அறிவிக்கப்பட்டது. இதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் 25 குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் கடந்த மாத விலையே தொடரும் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.165-க்கும், 16-ம் நம்பர் ரூ.175-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.233-க்கும், 24-ம் நம்பர் ரூ.245-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ.270-க்கும், 40-ம் நம்பர் ரூ.290-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.225-க்கும், 24-ம் நம்பர் ரூ. 235-க்கும், 30-ம் நம்பர் ரூ.245-க்கும், 34-ம் நம்பர் ரூ. 260-க்கும், 40-ம் நம்பர் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
- மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்
திருப்பூர்:
திருப்பூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் நடப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், ஓடக்காடு புஷ்பா தியேட்டர் அருகில் செயல்பட்டு மசாஜ் சென்டர் உள்ளிட்ட மூன்று சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் திருப்பூர் பின்னிகா ம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சென்டரை பூட்டிய போலீசார் அங்கிருந்த உரிமையாளர் மற்றும் இரண்டு பெண்களை திருப்பூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது திருப்பூர் மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் செயல்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 59 ஆயிரத்து 315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 4 நாட்கள் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் தொடங்கி 4 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,135 நியாயவிலைக் கடைகளில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 827 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 5,34,460 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
2ம் கட்டமாக, 308 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 2,83,884 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் 2 வது கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.
இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- 7 பேரை போலீசார் கைது செய்தும் தொடர்நது அவர்களிடமிருந்து ரூ.8,350ஐ கைப்பற்றப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராமகிருஷ்ணன் (53), சக்திவேல் (66), ஈஸ்வரன் (60), பழனிச்சாமி (47), அழகர் (55), சண்முகம் (50), கோபால் (65) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.8,350ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 4, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
- பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் கிட்ஸ் கிளப் பள்ளிகளின் நிறுவனர் மோகன் கந்தசாமி நினைவு 5-வது திருப்பூர் மாவட்ட அளவிலான 14, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 13-ந் தேதி அவினாசி அருகே பழங்கரையில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.
98 வகையான தடகள போட்டிகள் நடைபெற இருக்கிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநிலதடகள போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்பார்கள். மாநில தடகளப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், கோவை நேரு விளையாட்டு அரங்கில், நவம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. தடகள சாதனை விவரங்கள், தேசிய, மாநில சங்க தகவல்கள், செய்திகளை www.tirupurathleticassociation.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் entrytaa@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசிநாள் வருகிற 8-ந் தேதியாகும்.
திருப்பூர் தடகள சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்கள் மட்டுமே கிளப் பெயரில் தடகள வீரர்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 86677 99305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறந்த தடகள வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் தடகள சங்கம் சார்பாக தேவையான உதவிகள் செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
- சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.
திருப்பூர்:
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
- சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 9 ஆண்கள், 25 பெண்கள் உள்பட 34 ஆதரவற்றவர்கள் உள்ளனர். அந்த காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' தேவை என்று மாவட்ட சமூகநலத்துறை மூலமாக இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரத்திற்கு தெரிய வந்தது.
இதையடுத்து காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' வாங்கி கொடுக்க இந்திராசுந்தரம் முடிவு செய்தார். இதன்படி ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 'வாட்டர் ஹீட்டரை' மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.
அப்போது அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகி சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெற்று வருகிறது.
- கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடை ந்துள்ளனர்.
திருப்பூர்:
கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை-சேலம் பயணிகள் ரெயில் (எண்.06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (எண்.06803) சேவை இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10-வது முறையாக ப யணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
- மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து முறையிட்டனர்.
மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிதிக்கான ரூ.10 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கினார்.






