என் மலர்tooltip icon

    திருப்பூர்

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெள்ளகோவில் பகுதிகளில் இறைச்சி கடை நடத்துபவர்கள் கோழி, ஆட்டு இறைச்சி, மீன் கழிவுகளை பொது இடங்களில், சாலைகளில் வடிகால் பகுதிகளில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. ஆகையால் இறைச்சி கடை நடத்தி வருபவர்கள் இறைச்சி கழிவுகளை பெறுவதற்கு என நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் கொடுக்க வேண்டும்.

    அதனை மீறுபவர்கள் மீது அபராதமும் மற்றும் கடை உரிமத்தை ரத்து செய்வது போன்ற சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ்சில் ஏறினால் அவினாசியில் நிற்காது என்று நடத்துனர்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறக்கிவிடுகின்றனர்.
    • உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் முதியவர்கள், பெண்கள்உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    அவினாசி, ஆக.2-

    அவினாசி நகரம் திருப்பூர் மற்றும் கோவை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அவினாசியில் இருந்து கோவைக்கு பல்வேறு அலுவல்களுக்காகவும், மாணவ, மாணவியர் உள்ளிட்ட 500 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சில் தினமும் போய் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள் திருப்பூரிலிருந்து அவினாசி, தெக்கலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல பஸ்சில் ஏறினால் அவினாசியில் நிற்காது என்று நடத்துனர்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து இறக்கிவிடுகின்றனர்.

    அதே போல் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் ஒரு சில பஸ்களை தவிர தனியார் உள்ளிட்ட மற்ற அனைத்து பஸ்களும் அவினாசிக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் முதியவர்கள், பெண்கள்உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    எனவே கட்டாயம்அனைத்து பஸ்களும் அவினாசி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாரம் தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது.
    • வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.

    நேற்று செவ்வாய்கிழமை 146 விவசாயிகள் கலந்து கொண்டு ரூ. 70 ஆயிரத்து 576 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.79 க்கும், குறைந்தபட்சம் ரூ.60.30க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்த ரூ. 53லட்சத்து 36ஆயிரத்து 987க்கு வணிகம் நடைபெற்றது.

    இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது.
    • அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

    அவினாசி, ஆக.2-

    அவினாசியில் கொங்கு லிங்கேஸ்வரர் கோவில். ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. இங்கு ஸ்ரீ கருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசஸ்வரர் அமைந்து ள்ளார். இக்கோவில் கும்பாபி ஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக அவினாசிலிங்கேஸ்வரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை 4ந்தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.

    • யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    உடுமலை,ஆக.2-

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொடுத்து அடைக்கலம் அளித்து வருகிறது. ஆனாலும் வறட்சி காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் பற்றாக்குறையால் உணவு மற்றும் குடிநீரை தேடிக்கொண்டு வனவிலங்கு அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    அப்போது வாகன போக்குவரத்து காரணமாக உடுமலை மூணார் சாலையை கடந்து அமராவதிஅணைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் மனிதன் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. கோடை காலத்தில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதுடன் தடுப்பணையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வனவிலங்குகள் சாலையை கடப்பதற்கான அவசியம் எழவில்லை. அவற்றில் தேங்கி உள்ள தண்ணீரை குடித்து விட்டு வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக இருந்தது.

    இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடை யவில்லை. இதனால் அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இதன் காரணமாக தண்ணீரைத் தேடிக் கொண்டு வரும் வனவிலங்குகள் உடுமலை மூணாறு சாலையை கடந்து அணைப் பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

    • பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
    • முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது

    உடுமலை:

    உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அங்கு சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.அதை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது.இதனால் அலுவலகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகி றார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஒரு சில சேவைகளை தவிர மற்றவை அனைத்தும் ஆன்லைன் செய்யப்பட்டு விட்டது.சர்வர் கோளாறுகள் ஏற்படும் போது அலுவலக த்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் எந்திரம் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால் அலுவலகப் பணிக்காக வரக்கூடிய பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்ப டுகின்றனர். இதுகுறித்து நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

    இதனால் மூத்தகுடிமக்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள் வெளியில் சென்று தண்ணீர் குடித்து விட்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார்.
    • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் இல்லியம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேங்காய் கொப்பரை களத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது கணவர் விபத்தில் இறந்தார். அவருடைய மகனும் வேறொரு விபத்தில் இறந்தார். இதனால் தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தானும் விஷம் குடித்து தனது மகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின் ஆனந்தி உயிர் பிழைத்தார்.

    இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்திற்கு ஆனந்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார்
    • விக்னேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த அந்த சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவினாசி,ஆக.2-

    லால்குடியை சேர்ந்த செல்வநாயகம் மகன் விக்னேஷ்.(26) இவருக்கு திருமணமாகி வைஷ்ணவி (23) என்ற மனைவியும் மற்றும் 4 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது இவர் தனது குடும்பத்துடன் அவினாசியில் தங்கி அங்குள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4 நாட்களுக்கு முன் சேலத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் தனது பெற்றோரை பார்க்க அவினாசி செல்லலாம் என்று அந்த சிறுமியை கூட்டி வந்து அவர்களது வீட்டின் அருகில் விட்டுவிட்டு எனது வீட்டிற்கு சென்று 2 நாட்களில் மீண்டும் உன்னை கூட்டிசெல்வதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சென்றுவிட்டர்.

    இந்தநிலையில் விக்னேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதை அறிந்த அந்த சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
    • வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர், ஆக.2-

    குமார்நகர் தபால் நிலையம், நிர்வாக காரணங்களுக்காக, காந்திநகர் தபால் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

    தற்போது, இடமாற்றம் செய்யப்பட்டு, வளையங்காடு பஸ் ஸ்டாப் அருகில், நம்பர், 14, சாய்பாபா நகர், வளையங்காடு என்ற முகவரியில் இன்று (2ம் தேதி) முதல் செயல்படும். புதிய முகவரியில் மக்கள் தபால் சேவையை பெறலாம்.

    என திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    திருப்பூர், ஆக.2-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில், 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கலைஞா்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்க ளுக்கான ஆலோசனை, வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்களும் வழங்கப்படவுள்ளது.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடா்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

    • பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
    • புரோக்கர்கள் போல் நடித்து நகை பறிக்கும் கும்பல் என தெரியவந்தது

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் பாலகிருஷ்ணன் வெளியில் சென்று விட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் சரஸ்வதியிடம் இப்பகுதியில் இடம் விற்பனைக்கு உள்ளதா? என நில புரோக்கர்கள் போல் விசாரித்துள்ளனர்.

    சரஸ்வதி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர்களில் ஒருவர் சரஸ்வதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் ¼ பவுன் கம்மல் ஆகியவற்றை பறித்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அப்போதுதான் அவர்கள் நில புரோக்கர்கள் இல்லை என்பதும், புரோக்கர்கள் போல் நடித்து நகை பறிக்கும் கும்பல் என தெரியவந்தது.

    இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சரஸ்வதியிடம் நகையை பறித்து சென்றவர்கள் ஊத்துக்குளி கொடியம்பாளையத்தை சேர்ந்த அன்பரசன் (30), அவரது நண்பர்களான ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சிறுவன் காட்டுவலசை சேர்ந்த தாமரைக்கண்ணன் (41),ஈரோடு மாவட்டம் காசிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அறிவழகன் (42) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முருகம்பாளை யத்தை சேர்ந்தவர் சிபி கார்த்திக் (வயது21). இவருக்கும் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த டெய்லர் மோகன் என்ற கபாலிக்கும் இடையே இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் படங்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

    இந்த நிலையில் மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மோகன் திருப்பி தரக்குறைவான பதில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மங்கலம் சாலை புவனேஸ்வரி நகர் பகுதியில் சிபி கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அங்கு மோகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மோகன், அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிபி கார்த்திக்கை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சிபி கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிபி கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்ததாக மூன்று பேரையும் கைது செய்தனர்.

    ×