என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு இன்டர்சிப் டிரெய்னிங் வழங்கபடுகிறது.
    • ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளத்துடன் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு 24.5.2023 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு,கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில் நுட்பபடிப்புகளான இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

    டாடா டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவீட்டில் உலகத்தரம் வாய்ந்த இன்டஸ்ட்ரி 4.0 தரத்திலான டெக் சென்டர் – தொழில் நுட்ப மையங்களை உருவாக்கி உள்ளது.இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழில் நுட்ப மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட தொழில் நுட்ப மையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் இதர தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    ஐடிஐ.யில் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு டூல் கிட், தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்துடன் இணைந்து மாதாந்திர உதவித்தொகை ரூ.1750 வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு இன்டர்சிப் டிரெய்னிங் மற்றும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளத்துடன் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால், தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தில் நேரடி சேர்க்கைக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421-2429201,04258-230307 மற்றும் 04252-22334 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

    • குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
    • தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் இருந்து மாதப்பூர் வழியாக ஏராளமான பள்ளி மாணவர்கள், பல்லடம் மற்றும் பொங்கலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பல்லடத்திலிருந்து சமத்துவபுரம், மாதப்பூர் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசு பஸ், ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

    இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மனு அளித்தும் இதுவரை கூடுதல் பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்குவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே நேற்று காலை மாதப்பூரில் இருந்து பொங்கலூர் அரசு பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்களை கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றதால், பள்ளிக்கு செல்ல முடியாமல் அந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இந்தநிலையில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பஸ்சுக்காக நல்லா கவுண்டம்பாளையத்தில் இருந்து மாதப்பூர் வரை 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே வருவதாகவும் மாதப்பூரில் இருந்து பொங்கலூர் செல்ல முறையான பஸ்வசதி இல்லாததால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு பஸ் ஓட்டுனரிடம் கேட்டபோது, பல்லடம், சமத்துவபுரம், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் வருகின்றனர்.

    கூடுதல் பஸ் வசதி இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் இது குறித்து அரசு போக்குவரத்து டிப்போவில் தெரிவித்துள்ளதாகவும், கூடுதல் பஸ்களை இயக்கினால் மட்டுமே இந்தப்பிரச்சனை தீரும் என்று தெரிவித்தார்.

    • தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான(டிஆர்பி., டிஇடி) இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய 2023 ம் ஆண்டுத் திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3587 காலிப்பணியிடங்களுக்கும் (டிஆர்பி., டிஇடி) தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் கொய்யா, வாழை, சப்போட்டா போன்றவை உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
    • பொதுமக்களின் தேவை அறிந்து சில்லறை வியாபாரிகள் சரக்கு வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் காய்கறிகள், கீரைகள்,தானியங்களுக்கு அடுத்த படியாக பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள்,ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, திராட்சை, பிளம்ஸ், சீதாப்பழம், கொய்யா,சாத்துக்குடி, முலாம்பழம், ரம்பூட்டான் உள்ளிட்ட ஒவ்வொரு பழங்களும் மருத்துவ குணங்களை கொண்டு உள்ளது.

    குறிப்பிட்ட இடைவெளியில் அதை உணவாக எடுத்துக் கொண்டு வரும் போது உடலும் உள்ளமும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் கொய்யா, வாழை, சப்போட்டா போன்றவை உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.

    மற்ற பழங்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவை மொத்தமாகவும் சில்லரையாகவும் நடைபாதை வியாபாரிகள் மூலமாகவும் பழங்கள் பொதுமக்களை சென்றடைகின்றது. நகரப்பகுதிகளில் தள்ளுவண்டியில் கூட பழங்கள் விற்பனை செய்வதை காணலாம். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் வெப்பத்தின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். அதைத் தொடர்ந்து வெப்பத்தால் ஏற்படுகின்ற உடல் சூட்டை தணித்து நீர் இழப்பை தடுப்பதற்காக பழச்சாறுகளையும் பழங்களையும் பொதுமக்கள் உணவாக எடுத்து கொண்டு வருகின்றனர்.

    இதனால் உடுமலையில் உள்ள பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் பழங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. கூடவே அதன் விலையும் கணிசமான அளவில் உயர்ந்து உள்ளது. பொதுமக்களின் தேவை அறிந்து சில்லறை வியாபாரிகள் சரக்கு வாகனத்தின் மூலமாக வீதி வீதியாக பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிரதான சாலையின் ஓரங்கள் முக்கிய சந்திப்புகளிலும் புதிதாக பழக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பொதுமக்களும் உற்சாகத்தோடு பழங்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மையம் ஆக்குவது தொடர்பாக அதற்கான வலை பயன்பாடு ஒன்று டிஎன்இஜிஏ மூலம் தயார் செய்யப்பட்டு, அரசு இ-சேவை மையங்களில் அதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சமூக நலத்துறையின் மூலம் கணவனால் கைவிடப்பட்டவர், விதவை மற்றும் ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

    2023-24ம் ஆண்டிற்கான இலவச தையல் எந்திரம் பெறவிரும்புவோர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும், 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (பள்ளிசான்று அல்லது வயது சான்று), 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று, ஜாதிசான்று, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இனி வருங்காலங்களில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள அரசு இ- சேவை மையங்களை அணுகி விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
    • டிரைவர் லாரியை நடு ரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவண பிரபு. இவர் 2 வருடங்களுக்கு மேலாக திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் லட்சுமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு லாரியானது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வலது கை உட்பட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்தவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடு ரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லாரியை வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    • விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் விஷ்ணு (வயது 10). குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு செல்வதற்காக குன்னத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றான். அங்கிருந்து அணை அணைப்பதி பகுதி வழியாக செல்லும் பஸ்சிற்கு பதிலாக ஆதியூர் வழியாக செல்லும் 10-ம் நம்பர் பஸ்சில் விஷ்ணு ஏறியுள்ளான்.

    சிறிது தூரம் சென்றதும், பஸ் வேறு தடத்தில் செல்வதை கண்ட சிறுவன் அதிர்ச்சியடைந்து, பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் தெரிவித்துள்ளான். பலமுறை கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளான்.

    இதில் விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து ள்ளனர். பின்னர் இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குன்னத்தூர் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை நிறுத்தாததால் பள்ளி மாணவன் பஸ்சில் இருந்து குதித்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
    • பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம்.

    திருப்பூர்,ஆக.22-

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் பார்க் ரோடு அருகில் உள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாரிபாரிகளுக்கு பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம்.அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது 3-வது கடன் ரூ .50,000 பெறலாம்.அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன். மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே. ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நிரந்தரமாக செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும் உள்ளார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் நடந்த அதி.மு.க.வின் மாநாட்டில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும், அநாகரிகமான முறையில் பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதை அனைத்து அ.தி.மு.க.வின் தலைவர்களும் ரசித்து ஏளனமாக கைதட்டி சிரித்து உற்சாகபடுத்தினர். லட்சக்கணக்கான அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் இப்படி பேசியதை பார்த்த எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாநாடு நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
    • சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் சிவபிரகாசம், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ரகுபதி, நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன் செயலாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    • நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
    • அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது அ.தி.மு.க.வின் பலத்தை பறைசாற்றுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவன தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவேரி நதி நீர் பிரச்சினை என்பது தஞ்சை டெல்டா பகுதிக்கு உயிர் பிரச்சினை. கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் வருடத்திற்கு வருடம் மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அறிவு திறனில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களது அறிவு திறனை பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு தமிழக கல்விதுறை ஊக்கம் அளிக்க வேண்டும். ஆனால் ஊக்கம் அளிக்காமல் பின் தள்ள நினைக்கிறது. மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது கல்வி துறையின் கடமை ஆகும்.

    எல்லா மாணவர்களும் நன்கு படித்து தேர்ச்சி அடைய வேண்டும். தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மாணவர்களின் நன்மை கருதி வேறு துறையில் வாய்ப்பை ஏற்படுத்தி தர ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன் வர வேண்டும். நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    கல்வியில் அரசியலை புகுத்த கூடாது. தி.மு.க.வின் பல்வேறு மக்கள் விரோத போக்கால் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. பாராளுமன்றத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தேசிய அளவில் அ.தி.மு.க. பெரிய கட்சியாக திகழ்கிறது. அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் லட்ச க்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது அ.தி.மு.க.வின் பலத்தை பறைசாற்றுகிறது. இது கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவை சேர்த்து வெற்றியை சேர்க்கும். அ.தி.மு.க., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான அங்கீகாரத்தை இந்த மாநாடு எடுத்துகாட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.
    • புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த மணிமுத்து மனைவி சரண்யா தேவி(வயது 42) .இவர் நேற்று பிற்பகல் அவினாசி சேவூர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சரண்யாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார்.

    பதறிப்போன அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×