என் மலர்
திருப்பூர்
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முதன்மைத்தேர்வு- திருப்பூரில் 26-ந் தேதி நடக்கிறது.
- தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
திருப்பூர்:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் நிலைய அலுவலர் பணிக்கான முதன்மை தேர்வு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
தமிழ்மொழித்தேர்வு மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக தேர்வுக்கு அறிக்கை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
- கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் மதுரை ஆரப்பாளையம் ஆகும்.
அழகர்சாமி மீது தெற்கு, அனுப்பர்பாளையம், சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தையும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாடு முதலமைச்சரால் 25.8.2023 அன்று இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
- குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்து வது தொடர்பான ஆலோச னைக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கலெக்டர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமை ச்சரின் காலைஉணவுத்திட்டம் செயல்படுத்துவது தொட ர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கமானது மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்க ப்படாமல் இருத்தலை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்கவும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும் மற்றும் கல்வியை தக்க வைத்துக்கொள்ளவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை யை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளின் அலுவ லர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட கண்கா ணிப்பு குழு அமைக்கப்பட்டு வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
வட்டார அளவில் காலை உணவுத்திட்டத்தினை கண்காணிக்க உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர்கள், விரிவுஅலுவ லர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு மையங்களை பார்வையிட்டு வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 25.8.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37,018 மாணவ, மாணவிகளுக்கும், 14 பேரூராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4,555 மாணவ, மாணவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளிகளில் பயிலும் 5,648 மாணவ,மாணவிகளுக்கும் சென்ட்ரலைசடு கிட்சன் மூலம் நகராட்சி பகுதியில் உள்ள 2 பேரூராட்சிகளில் 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120 பள்ளிகளில் பயிலும் 27,477 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,081 பள்ளிகளில் 75,482 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
எனவே சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குறித்த நேரத்தில் உணவு வழங்குவது குறித்தும், தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறு த்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஹேமலதா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- பேராசிரியர் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பாலமுருகன். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி ஆன்லைன் மூலமாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் அகிலன் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியர் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவானார்.
இதையடுத்து தலைமறைவாக உள்ள பேராசிரியரை பிடிக்க பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பேராசிரியர் பாலமுருகன் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பாலமுருகனை கைது செய்தனர்.
பின்னர் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இதேபோல் ஊட்டி, நாமக்கல் அரசு கல்லூரியில் பணியாற்றிய போது இதே புகாரில் சிக்கி உள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன் வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை பல்லடம் அரசு கல்லூரிக்கு மாற்றியுள்ளனர்.
இங்கு வந்து சில மாதங்களிலேயே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து பேராசிரியர் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
- துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
அவிநாசி:
பெருமாநல்லூா், செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் உயரழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
செங்கப்பள்ளி, ஜோதி நகா், சரவண நகா், ப்யூா் டிராப் கம்பெனி பகுதி, கேபிஆா் மில் பகுதி, கருடா நகா்.
பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டி பாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, மற்றும் உகாயனூா்.
- ஒரு தனியார் நிறுவனத்தில் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்
- அந்த வழியாக வந்த கார் டிராக்டர் மீது மோதியது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம், ராம்நகர் காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 60). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை ஓலப்பாளையம் அருகே டிராக்டர் ஓட்டிச் சென்றபோது அந்த வழியாக வந்த கார் டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ரங்கசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு டிரைவர் ரங்கசாமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், காரில் பயணம் செய்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன், விஜயலட்சுமி ஆகியோர் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.
- வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்,ஆக.22-
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளகோவில், மூலனூர் ரோடு, ஈஸ்வரன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அங்குராஜ் (வயது 25),கோபிநாதன் (27), மகாதேவன் (37), கார்த்தி( 28) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன.
- யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது.
உடுமலை:
உடுமலை அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு ,தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியடைந்துள்ளது. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை -மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்வதும் மாலையில் அணை பகுதிக்கு வருவதுமாக உள்ளது.
எனவே யானைகள் சாலையை கடக்கும் வரையில் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து சாலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இஎஸ்ஐ., மருத்துவமனைக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
- மதுக்கடையை அகற்றாவிட்டால் வரும் ஆகஸ்ட் 27 -ந் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
திருப்பூா்:
திருப்பூா் இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கலால் உதவி ஆணையா் ராம்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 -வது மண்டலக் குழு செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ., மருத்துவமனைக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன. மேலும், மதுக்கடையின் அருகில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டு வருகிறது.
இது தொடா்பாக மாவட்ட கலெக்டரிடம் கடந்த ஜூலை 24 ந்தேதி மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இஎஸ்ஐ., மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றாவிட்டால் வரும் ஆகஸ்ட் 27 -ந் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி ராஜேந்திரன் மற்றம் பொதுமக்கள் உடனிருந்தனா்.
- 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2520 ஆக உயர்ந்துள்ளது.
- 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 -ன் திருத்தப்பணிகள் 1.6.2023 முதல் 16.10.2023 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர்- முதன்மை செயலர் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடிகளை உள்ளடக்கிய "வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல்" அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன. எந்தமாற்றமும் இல்லை.
ஆனால் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் 379 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன.
அதன்படி 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து 21.8.2023 முதல் 27.8.2023 வரை கீழே குறிப்பிட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.
மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.
பல்லடம், ஆக.22-
பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.
பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.
- கடந்த 2.5.2023 அன்று வீட்டிலேயே இரட்டை குழந்தைகள் (பெண்-800கிகி., மற்றும் ஆண்- 900கிகி) பிறந்தது.
- குழந்தைகளை சிகிச்சைக்காக சேர்த்த போது பெண் குழந்தை இறந்துவிட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வரதப்பம்பாளையம் காமாட்சி வலசு பகுதியை சேர்ந்த சின்னச்சாமி -வெள்ளையம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2.5.2023 அன்று வீட்டிலேயே இரட்டை குழந்தைகள் (பெண்-800கிகி., மற்றும் ஆண்- 900கிகி) பிறந்தது. குழந்தைகள் பிறக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் காங்கயம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளை சிகிச்சைக்காக சேர்த்த போது பெண் குழந்தை இறந்துவிட்டது. ஆண் குழந்தைக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 10.5.2023 அன்று பெற்றோர்கள், குழந்தையை வேண்டாம் என தெரிவித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுவிட்டு சென்று விட்டனர். 8.8.2023 அன்று குழந்தை நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், குழந்தையின் எடையை (எடை 900கி.கி.,லிருந்து 1.846கி.கி.,) அதிகரித்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, குழந்தையின் எதிர்கால நலன் கருதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக 16.8.2023 அன்று குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்த ப்பட்டு, குழந்தைக்கு நாகேஷ்வர ராவ் என பெயரிடப்பட்டு, குழந்தையை குழந்தைகள் நலக்குழுவின் ஆணைப்படி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் தத்துவள மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ரியாஸ் அகமது பாசா தெரிவித்துள்ளார்.






