search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு - ஆட்சேபனைகள் இருந்தால் அரசியல் கட்சியினர்  தெரிவிக்கலாம்
    X

    வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட போது எடுத்த படம்.

    வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு - ஆட்சேபனைகள் இருந்தால் அரசியல் கட்சியினர் தெரிவிக்கலாம்

    • 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2520 ஆக உயர்ந்துள்ளது.
    • 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2024 -ன் திருத்தப்பணிகள் 1.6.2023 முதல் 16.10.2023 வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பணியான வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர்- முதன்மை செயலர் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்கு ச்சாவடிகளை உள்ளடக்கிய "வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல்" அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன. எந்தமாற்றமும் இல்லை.

    ஆனால் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் 379 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன.

    அதன்படி 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. மாவட்டத்தில் 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து 21.8.2023 முதல் 27.8.2023 வரை கீழே குறிப்பிட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். பின்னர் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான கூட்டம் நடத்தப்படும்.

    மேற்படி கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை இறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தி சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் , உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×