என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல்லடம் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் சிறையில் அடைப்பு
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல்லடம் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் சிறையில் அடைப்பு

    • பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • பேராசிரியர் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பாலமுருகன். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி ஆன்லைன் மூலமாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் அகிலன் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியர் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவானார்.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள பேராசிரியரை பிடிக்க பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பேராசிரியர் பாலமுருகன் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பாலமுருகனை கைது செய்தனர்.

    பின்னர் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இதேபோல் ஊட்டி, நாமக்கல் அரசு கல்லூரியில் பணியாற்றிய போது இதே புகாரில் சிக்கி உள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன் வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை பல்லடம் அரசு கல்லூரிக்கு மாற்றியுள்ளனர்.

    இங்கு வந்து சில மாதங்களிலேயே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து பேராசிரியர் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×