என் மலர்
தூத்துக்குடி
- கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதம்.
- சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 10 கார்களில் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் வந்த வாகனங்கள் தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி வந்த போது சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தததால், காரில் வந்தவர்கள் இறங்கி வந்து அங்கிருந்த பேரிகாடை தூக்கி வீசி உள்ளனர்.

மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்ணாடி மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சூறையாடி உள்ளனர்.
மேலும்,அங்கு பணியில் இருந்த ஊழியர்களான தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த பாபு என்ற பரமசிவம் (வயது 45), நெல்லையை சேர்ந்த அண்ணாவி என்ற ஆகாஷ் (27) ஆகியோரை நாற்காலியால் தாக்கி உள்ளனர். இதில் பாபு என்ற பரமசிவத்திற்க்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இயக்க தலைவர் இசக்கிராஜா உட்பட 30 பேர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்,கொலை முயற்சி, தீண்டாமை வன்கொடுமை மற்றும் பொது இடத்தில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
- சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
திருச்செந்தூர்:
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர். விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியவர். ஆன்மீக பணிகளை மேற்கொண்டவர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர், அவரது புகழ் என்றென்றும் வாழ்க! என்றென்றும் வாழ்க!!
இவர் அவர் கூறினார்.
- கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
- வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 13-ந் தேதி சுடலை முத்து மகன் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசன் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மதன் குமார் அவரது சக நண்பரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மதன்குமார் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரில் உள்ள சுடலைமுத்து வீட்டில் யாரும் இல்லாத போது சிலர் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி சென்று பெட்ரோல் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்து கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக நேரில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சுடலை முத்து புகார் அளித்தார். சுடலைமுத்து மகன் மதன்குமார் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும்போது சுடலைமுத்து குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்று இதுபோன்று நடத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
- கைதானவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தேரிப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70).
இவர்களது மகள் சபீதா, மகன் வினோத் ஆகியோர் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனான விக்ராந்த் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
விக்ராந்த் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயபால் இறந்துவிட்டதால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று சபீதா தனது தாயாருக்கு போன் செய்தார். வெகுநேரமாகியும் வசந்தா அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவர் தனது தம்பி விக்ராந்துக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.
உடனே விக்ராந்த் தேரிப்பனையில் உள்ள தனது உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பினார். அவர் வசந்தா வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
அதே நேரம் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதன்மூலம் வீட்டுக்கு சென்றபோது வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வசந்தா அணிந்திருந்த நகைகள் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மகன் விக்ராந்த் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் சுகுமார், மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் நேற்று வசந்தா வீடு அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதும், இதனால் அவரை வசந்தா கண்டித்ததும் தெரியவந்தது.
எனவே இந்த விரோதத்தில் செல்வரதி வசந்தாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து செல்வரதியை போலீசார் தேடியபோது அவர் கணவர் ஊரான மீரான்குளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் செல்வரதியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு வசந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி வந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் செல்வரதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே நகைக்காக சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒரு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் செல்வரதியுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
- குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.
திருச்செந்தூர்:
ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.
மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
- துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தெற்கு வங்கக் கடலில் மையப் பகுதியில் குறைந்த அளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தூத்துக்குடி குமரிக் கடல் பகுதி தென் தமிழக கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அவ்வப்போது சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ரசிகர்கள் அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
- திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இந்த நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் பார்க்க தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவனுக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.
இதையடுத்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.
- திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார்.
- ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.
அவருடன் வேறு யாரும் வரவில்லை. பின்னர் அவர் தனியாக காரில் ஏறி சென்றார். முன்னதாக சென்னையில் தனது பயணம் குறித்து கூறும்போது அவர், திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை. அறிவிக்கப்படாத அவரது வருகை அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
எட்டயபுரம்:
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (வயது 35). இவர் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார்.
கார் இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ராஜ்குமாரின் மனைவி தமிழரசி, அவரது மகன் அஸ்வரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் காரில் சென்ற அண்ணாமலை மனைவி விஜயா (60) செல்வராஜ் மனைவி தாமரைச்செல்வி என்ற சந்தியா (31), மகன் சபரீசன் (12), சித்தன் மகள் சுமதி (46), கோவிந்தராஜ் மகள் ரம்யா (12), காரை ஓட்டி சென்ற ராஜ்குமார் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
- 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் வேலைகளில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று, பகலில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது.
இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.
தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்திமரப்பட்டி, காலங்கரை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நெல் அறுவடை பணியும் பாதிப்படைந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கிடங்குகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வடிகால் இல்லாததால் முழு தண்ணீரும் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி வாகனத்தை உருட்டி சென்று அவதி அடைந்தனர்.
இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் , கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டி னத்தில் 96 மில்லிமீட்டர், தூத்துக்குடி 16.20 மி.மீ, திருச்செந்தூர் 55 மி.மீ, குலசேகரப்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 6.40 மி.மீ, கோவில்பட்டி 18 மி.மீ, கழுகுமலை 80 மி.மீ, கயத்தார் 70 மி.மீ, கடம்பூர் 1.50 மி.மீ, எட்டையாபுரம் 5.10 மி.மீ, விளாத்திகுளம் 17 மி.மீ, காடல்குடி 5 மி.மீ, வைப்பார் 9 மி.மீ, சூரங்குடி 20 மி.மீ, ஓட்டப்பிடாரம் 73.50 மி.மீ, மணியாச்சி 9 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 487.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 25.67 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதியம்புத்தூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
- நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
- 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.






