என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
    • கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

     

    அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விசாகத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாராதனையும் தொடர்ந்து கோவில் சண்முக விலாசம் மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவமும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அந்த வகையில் இன்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்களின் அரோகரா கோஷம் விண் அதிர செய்தது.

    சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

     

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.

    பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக நேற்று காலை 8 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி.ட.பிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 6 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கை பட்டை வழங்கப்படுகிறது.

    கைப்பட்டை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் முதியோர்களுக்கான தனி வரிசையில் எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை வெகு விமர்சையாக நடக்கிறது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வசதிகள் ஆங்காங்கே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரத்து 500 சதுர அடியில் நிரந்தர நிழல் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கூடுதலாக தற்காலிகமாக 8 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக நிழல் கொட்கை அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புதுறையை சேர்ந்தவர்கள் தகவல் நிலையம், நாழிக்கிணறு பகுதி, தேரடித்திடல் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏற்கனவே முதலுதவி மையம் செயல்படுகிறது.

    மேலும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மருத்துவர்கள் தகவல் நிலையம், உள்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் இந்த பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். கடலில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலில் மிதக்கும் கயிறு மிதக்கும் போயாக்கள், மூலமாக கடலில் புனித நீராடும் பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு இன்று காலை 8 மணியில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி. டபிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாத யாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை அங்கு செயல்பட்டு வருகிறது. அந்த தனி வரிசையில் வரக்கூடிய மூத்த குடிமக்களுக்கு இன்று காலை 6 மணியில் இருந்து 10-ந்தேதி மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர், அதிகாரிகள் அலுவலகத்தில் கைப்பட்டை வழங்கப்படுகிறது. கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதை மூத்த குடிமக்கள் மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு கைப்பட்டை வாங்கி பயன்படுத்தி பயனடையுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
    • தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் சரவண பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி மதியம் 12 மணியையும் தாண்டி தொடர்ந்தது.

    இந்த பயங்கர தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • காலை 6.15 முதல் 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
    • திருக்கோயிலின் உப கோயில்களுக்கு குடமுழு நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    காலை 6.15 முதல் 6.50 வரை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான, ஆனந்தவல்லி அம்பாள் திருக்கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், வெயிலு கந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்த குண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோயில்களில் இன்று (ஜூன் 6) குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.

    • புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் 2023-ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

    ஆனாலும் இந்த நெடுஞ்சாலையில் மாதந்தோறும் ரூ.11 கோடியை சுங்க கட்டணமாக வசூலிக்கின்றனர். ஆனால் பராமரிப்பு பணிக்காக வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்கின்றனர். இதனால் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.

    எனவே மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களும் மரங்கள் நட்டு பராமரித்து, வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதனை விசாரித்த நீதிபதிகள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் ஆகிய 2 சுங்கச்சாவடிகளிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து உரிய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சுங்கச்சாவடியில் 6 வாசல்கள் மூலம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை முதல் 6 வாசல்களிலும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வந்ததால் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பல வாகனங்கள் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமம் வழியாக மாற்று வழியில் சென்றது. தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
    • ஜூலை 7ம் தேதி நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததின்படி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட 10 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்து கோவில் பொது தரிசனப்பாதையில் வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குட முழுக்கு பணிகளை இரவு 8 மணியில் இருந்து 12 மணி வரை ஆய்வு செய்தோம்.

    நடைபெறுகின்ற கட்டுமான பணிகள், பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற கூடுதல் வசதிகளை கூட்டம் இல்லாத போது ஆய்வு செய்தால்தான் முழு அளவிளான விபரங்கள் தெரியவரும் என்பதால் கூட்டம் இல்லாத நேரமான நேற்று இரவு முழுவதும் ஆய்வு செய்தோம்.

    சட்டமன்ற அறிவிப்பின்படி காய்ச்சிய சுடு பால் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பேரில் அறிவித்திருந்த 10 கோவில்களுக்கு இன்றைய தினம் அந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

    கோவிலில் நடைபெறுகின்ற திருப்பணிகள், முடி காணிக்கை மண்டபம், அதே போல் நாழி கிணறு செல்லும் பாதையில் உள்ள மண்டபம், அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து அந்த அறுபடை வீடுகளையும் தரிசித்து செல்லுகின்ற சூழல் அதேபோல் பக்தர்கள் தங்கும் விடுதி பக்தர்களுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற கியூ லைன், அந்த கியூ லைனில் பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், விழாக் காலங்களில் போக்குவரத்து நிறுத்தும் இடங்கள் சுமார் 4 இடங்களை நேற்று இரவு ஆய்வு செய்தோம்.

    சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் வந்தாலும் நிறுத்தக் கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த இடங்களையும் ஆய்வு செய்தோம். ஜூலை 7ம் தேதி நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் கழிப்பிட வசதி அதேபோல் சுகாதார வசதி போதிய மருத்துவ வசதி எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நேற்று இரவு அனைத்து துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தோம்.

    குறிப்பாக நெடுஞ்சாலை துறையினரும் அதில் பங்கேற்றார்கள் கோவி லுக்கு வரும் சாலைகளில் உள்ள பழுதுகளை வருகிற கும்பாபி ஷேகத்திற்கு முன்பாக அனைத்து பழுதுக ளையும் நீக்கி தருவதாகவும் தேவைப் டுகின்ற இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் அவர்கள் உறுதி அளித்திருக்கின்றார்கள்.

    அந்த வகையில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் எல்லாம் வல்ல எங்கள் அப்பன் முருகனுக்கு கடந்த முறை கும்பாபிஷேகம் கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்தது. இன்றும் கலைஞர் வழித்தோன்றல் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.

    கும்பாபிஷேகம் பணிகள் எல்லாம் 90 சதவீதம் முடிந்திருக்கும் என்று சொல்ல முடியாது.

    எந்த எந்த பணிகள் எல்லாம் குடமுழுக்கிற்கு முன்பு முடியும் எந்த எந்த பணிகள் எல்லாம் கும்பாபிஷேகமிற்கு பின்னால் முடியும் என பட்டியலிட்டு அடுத்த முறை வருகின்றபோது தெளிவாக ஊட கத்துறையினரோடு கலந்து தெளிவாக சொல்ல இருக்கின்றோம்.

    குட முழுக்கு நடைபெறுகின்ற பணிகளில் குறிப்பாக கோவிலுக்கு வருகின்ற வழிப்பாதையில் இருக்கின்ற பணிகள் முழுவதுமாக கும்பாபிஷேகம் முன்பாக இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறியிருக்கிறார்கள்.

    கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம் பக்தர்கள் தங்கும் விடுதி நாழி கிணறு போன்ற பணிகளை விரைவுபடுத்தி உள்ளோம்.

    அந்த பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகம் முன்பாக முடிக்கப்படும். மீதம் என்ன பணிகள் உள்ளதோ அது கும்பாபிஷேகம் பின்பு முடிகின்ற பணிகள் பட்டியலிட்டு எடுத்து கூறுகிறோம்.

    முக்கியமாக கும்பாபி ஷேகம் மட்டும் அல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதே போல் கிருத்திகை போன்ற நாட்களில் அளவுக்கு அதிகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றார்கள்.

    தேவை கருதி பக்தர்கள் அதிகமாக வருகின்ற கால கட்டங்களில் தேவையான மருந்துவ வசதி போன்ற வற்றையும் கூடுதலாக செய்ய அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    எனவே இந்த குடமுழுக்கிற்கு முன்பு எவ்வளவு பணிகள் முடிக்க முடியுமோ அந்த பணிகள் போர்கால அடிப்படையில் நடத்தப்படும்.

    இந்த ஆய்வு கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ஒரு 4 முறையாவது அனைத்துத் துறை அலுவலர்களோடு இந்த மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி.யும் அடுத்து நடக்கின்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

    அவர்களும்இந்த திருப்பணிக்கு முழு உதவியாக இருக்கின்றார்கள். எனவே இந்த திருப்பணி செம்மையாக நேர்த்தியாக எங்கு பார்த்தாலும் அரோகரா சத்தம் கேட்கின்ற அளவுக்கு இந்த கும்பாபிஷேகம் சீறோடும் சிறப்போடும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.
    • திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது. ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.

    • விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

    முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

    பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சேர்கிறார்.

    பிறகு அன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

    • அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 60 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் உள்வாங்கி காணப்படுகிறது.

    பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் இன்று அமாவாசை தொடங்கி நாளை வரை உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து 100அடி வரை உள்வாங்வதும் வெளியே வருவதுமாக உள்ளது.

    ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.

    • வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு நாள்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    கோவிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் கார், வேன், மற்றும் பஸ்களில் குடும்பத்துடன் வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

    • காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
    • சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் கந்தசாமி (வயது91) என்பவர் நிஷாந்தின் வீட்டு காம்பவுண்டை ஒட்டி வாழை மரத்தை வளர்த்து வந்துள்ளார். வாழை மரத்தின் காய்ந்த இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே வாழை மரத்தின் காய்ந்த கிளைகளை அகற்றுமாறு நிஷாந்த் கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் நிஷாந்தின் மனைவி சிந்துஜா (வயது 30) வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று சொல்லி திடீரென்று சிந்துஜாவின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் அலறியவாறு தெருவில் ஓடினார். ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் அரிவாளுடன் அவரை துரத்தி சென்று வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த முதியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    இதில் காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்,

    அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, வடபாகம் இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி தெருக்கள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் வாள், அரிவாள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்ற தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்த அந்தோணி மைக்கேல் சுகந்தன் (வயது 40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து தப்பி ஓடாதபடி எச்சரிக்கை செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயு தங்களை பறிமுதல் செய்தனர்.

    தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள இவர் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.

    வெடிகுண்டு வீசியும், பழிக்குப் பழியாகவும் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது யாரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தார்? அந்த முக்கிய நபர் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×