என் மலர்
தூத்துக்குடி
- காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடத்த நிபுணர் குழு முடிவு.
- மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு.
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
அதேவேளையில் அன்றைய தினம் மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில், திருச்செந்தூரை சேர்ந்த சிவராம சுப்பிரமணியன் என்பவர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோவில் நிபுணர்குழு முடிவு செய்த நேரத்தில் குடமுழுக்கு நடத்தலாம். வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது கோவில் விதாயகரிட் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற உத்தரவிட்டுள்ளனர்.
- வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடியில் வீட்டில் திடீரென ஏ.சி. வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளையில் வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அறையில் ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக நீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நல்ல வேளையாக அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை உயிர் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+2
- முதியவர்கள் எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
- இன்று கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூர் சிறந்த ஆன்மீக தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் மற்றும் பஸ்களில் குடும்பத்துடன் வந்து தங்கி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது கோவிலில் பக்தர்கள் திருப்பதிக்கு இணையாக சாமி தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசனம் வரிசையில் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கு அகன்ற டி.வி.களில் படம் பார்த்தவாறு, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்ப்பகுதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8,000 சதுர அடியில் யாக சாலையும், 2,000 சதுர அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது.
இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். யாக பூஜையில் தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கும்பாபிஷேகத் தினத்தன்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
இந்நிலையில், யாகசாலையில் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவை தமிழில் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணிமுதல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்க உள்ளது. இதற்காக 8,000 சதுரடியில் 76 யாக குண்டங்களுடன் பிரமாண்ட வேள்வி சாலை அமைக்கப்படுகிறது.
வேள்வி சாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாதஸ்வர இன்னிசை நடக்கும்.
காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போராட்டத்திற்கு அமலி நகர் ஆலந்தலை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- ஆலந்தலைப் பகுதியில் 100 படகுகளும், அமளி நகர் பகுதியில் 80 படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறி பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்து பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர்.
அதன்படி திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரி கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், இந்து வியாபாரிகள் சங்கம், சைவ வேளாளர் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 29 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து நான்கு ரத வீதி, டி.பி. ரோடு, காந்தி மார்க்கெட், கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்செந்தூர் நகர் பகுதியில் சுமார் 1000 கடைகள் அடைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போராட்டத்திற்கு அமலி நகர் ஆலந்தலை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் 50 சதவீத மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆலந்தலைப் பகுதியில் 100 படகுகளும், அமளி நகர் பகுதியில் 80 படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பனையேறும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழனின் தேசிய பானம் கள். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அங்குள்ள ஒரு பனை மரத்தில் சீமான் ஏறுவதற்கு வசதியாக கட்டைகளை ஏணி போல் கட்டி வைத்திருந்தனர்.
பின்னர் கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் ஏறிய சீமான், கள் இறக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஏராளமான பனை ஏறும் தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.
சீமான் மரம் ஏறியபோது அங்கு திரண்டிருந்த அவரது கட்சியினர் கரகோஷம் எழுப்பினர். அவர்கள் கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என கோஷம் எழுப்பினர். பின்னர் பனை மரத்தின் உச்சிக்கு சென்ற சீமான் கள் இறக்கி கீழே வந்தார். பிறகு இறக்கிய கள்ளை பருகி ருசித்தார்.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை.
- கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம்.
தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம். தாய்மொழி வழிபாடு என்பது அடிப்படை உரிமை. அதை கேட்டு போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.
திராவிட ஆட்சியாளர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறோம் என்கிறார்கள்.
தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது. இது யாருக்கும் பயன் தரும்?
நாட்டில் பாதுகாப்புக்கு உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன? கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன?
அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதலமைச்சர், பிரதமர் மோடியின் கையைப் பிடித்து கொண்டு பேசுகிறார். இங்கு வந்த பிறகு பிரதமர் மோடியை எதிரி என்கிறார்.
நாளை திருச்செந்தூர் அருகே நடக்கும் பனையேறும் போராட்டத்திற்கு காவல்துறை தடை என்றால் அதை உடை. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பனையேறும்போது வெறும் கையோடு இருக்க மாட்டேன். அரிவாளுடன் இருப்பேன்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும்போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருட்கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
நாட்டின் மொத்த அரசியலையும் மாற்றுவதுதான் என்னுடைய கடமை. நாம் தமிழர் கட்சி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். கூட்டணி கிடையாது.
பா.ஜ.க. முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங்.
யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என்பதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.
- முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை.
* தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.
* தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ்மொழியில் குடமுழுக்கு நடக்காது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
* முருகனே தமிழ் தான், முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள்.
* எங்கள் சமயம் சைவம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது.
* முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலக்கரந்தை பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
- படுகாயமடைந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எட்டயபுரம்:
தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் தலைமையில் 6 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டனர்.
இவர்களது கார் தூத்துக்குடி-மதுரை சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த சாலையில் தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக்கொண்டு அரியலூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. மேலக்கரந்தை பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பலியானவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த வக்கீல் தனஞ்செயன் ராமமூர்த்தி, கார் டிரைவர் வாசுராமநாதன் என்பதும், மற்றொருவர் நீதிபதியின் பாதுகாவலராக வந்த போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் படுகாயத்துடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
படுகாயமடைந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு.
திருச்செந்தூர்:
நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா என இந்த அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. அவ்வப்போது கள் இறக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், கள் விற்க அரசு அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கள் விடுதலை மாநாடு நடந்தது.
அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ரஷ்யாவில் வோட்கா போல், தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என்றார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வருகிற 15-ந் தேதி, உழவர் பாசறை சார்பில் கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்ற முழுக்கத்தோடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழை, குலசேகரன்பட்டினத்தில் கள் இறக்கும் போராட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது,
தமிழகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க, பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. மருத்துவ குணம் கொண்ட, ஏராளமான ஊட்டச்சத்து கள்ளில் உள்ளது. கள் மது வகையில் வராது. அது தமிழர்களின் பாரம்பரிய உணவு என்ற கொள்கையுடன், கள் விடுதலை போராட்டத்தில், சீமான் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்த பனை விவசாயிகளின் ஓட்டுகளை கவர, சில அறிவிப்புகளையும், சீமான் வெளியிட உள்ளார். வருகிற 15-ந்தேதி, அவர் பனை மரத்தில் ஏறி, கள் இறக்க உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் சீமான் பனை மரத்தில் ஏறி, பயிற்சி எடுக்க உள்ளார். பனை மரத்தில் ஏற வேண்டாம் என, அவரது கட்சியினர் கூறியபோதும், அவர் பனை ஏறுவதில் உறுதியாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பனை ஏறுவதற்கு தகுந்த மரங்களை தேடும் பணியில், போராட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சீமான் நேரடியாக களமிறங்கும் இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.
- மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம், முடக்குளத்தை சேர்ந்தவர் மோகன் நாயர். இவரது மனைவி அம்பிகா (வயது 67). இவரது மகள் மாலினி (40).
மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் வந்து நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு வைத்து குளிர்பானத்துடன் கலந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.
அப்போது வாந்தி வரவே விடுதி ஊழியரிடம் நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம், ராசையா இருவரையும் போலீசார் சோதனை செய்தனர்.
- 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டு மட்டக் கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 21), ராசையா என்ற கலாம் (23) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






