என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்- 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
- முதியவர்கள் எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
- இன்று கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூர் சிறந்த ஆன்மீக தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் மற்றும் பஸ்களில் குடும்பத்துடன் வந்து தங்கி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது கோவிலில் பக்தர்கள் திருப்பதிக்கு இணையாக சாமி தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசனம் வரிசையில் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கு அகன்ற டி.வி.களில் படம் பார்த்தவாறு, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மற்ற கால பூஜைகள் நடக்கிறது.








