என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • தசராத்திருவிழா அக்டோபர் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற வேடங்கள் அணிவார்கள்

    குலசேகரன்பட்டினம் கோவிலை பொறுத்தவரை 90 நாள், 48 நாள், 31 நாள், 12 நாள், 10 நாள் என பல்வேறு நாட்கள் விரதத்தை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.

    சிறப்பு வாய்ந்த குலசேகரப்பட்டினம் தசராத்திருவிழா வருகிற அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    இதற்கிடையே, தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குலசேகரன்பட்டி னம் புறவழிச் சாலை, உடன்குடி சாலை, மணப்பாடு சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் 20 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்களில் தற்காலிக நடமாடும் சுகாதார வளாகங்களும் அமைக்கப்பட உள்ளது.

    • ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்பட உள்ளது.
    • 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    திருநெல்வேலியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் பிராந்திய மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.

    கூடங்குளம் ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிநவீன மீட்பு உபரகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் மையம் செயல்பட்டு வருகிறது.

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநில பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், கதிரியக்கம், ரசாயனம், உயிரியல் உள்ளிட்டவை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    • ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.
    • கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சக்திவேல் (வயது 31). டிப்ளமோ பட்டதாரி.

    இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சக்திவேல் கடையத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி சக்திவேல் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி ரூ. 6 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன்(வயது 45). இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஷாப்பிங், பாத்திரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் முதல் தளத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 22-ந்தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை ஆரோக்கிய ரெமன் கடையை திறந்தபோது கடையின் மாடியில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அடகு கடையில் லாக்கரில் வைத்திருந்த 278 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் பிரசன்ன குமார் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அந்த கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சென்று, அதன் அருகே இருந்த கடையின் காம்பவுண்டு சுவரில் ஏறி, கொள்ளை நடந்த கடையின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடையின் அமைப்பை பற்றி முழுமையாக தெரிந்த உள்ளூர் நபர்களின் உதவியுடன் வெளியில் இருந்து வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் பஜார் பகுதியில் இருந்த மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த நபர்கள் 2 பேரும் கொள்ளை நடந்த கடை முன்பு சிறிது நேரம் நின்று விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.

    போலீசார் சந்தேகம் அடைந்த அந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் தொடர்ந்து ஒரு காரும் செல்கிறது. அந்த கார் சென்ற திசையை நோக்கி தனிப்படையினரும் சென்று வருகின்றனர். அந்த கார் செல்லும் பாதையில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து கார் செல்கிறது. இதனால் கொள்ளை அடித்த நகைகளை அந்த காரில் எடுத்துக் கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    அதே நேரத்தில் கேமராவில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்து 2 பேரை போலீசார் சந்தேகத்தில் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதிகளில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் டவர் மூலமாக சோதனை செய்து வருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக 2 பேரை சந்தேகப்படுகிறோம். மேலும் 1 கார், மோட்டார் சைக்கிள் இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் சிக்கிவிடுவார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் சாதாரண டீக்கடைகளில் கூட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி வைத்துள்ளனர். இவ்வளவு நகைகள் உள்ள பகுதியில் பொருத்தப்படாமல் இருக்கிறது. அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். அதுவே அவர்களது உடைமைகளை பாதுகாக்க பெருமளவு உதவும் என்று கூறினர்.

    • போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு மர்மநபர் ஒருவர் போன் செய்துள்ளார்.

    அதில் போலீசுடன் பேசிய மர்ம நபர், பூலித்தேவன் ஜெயந்திவிழாவையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறியுள்ளார்.

    மேலும் புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த நபர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த செல்போன் எண்ணின் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த சிக்னல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை காண்பித்தது. இதனால் தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று சிக்னல் மூலமாக அந்த நபரை கண்டுபிடித்தனர். அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை மெயின்ரோட்டை சேர்ந்த பூசைப்பாண்டியன் என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 32) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை தனிப்படையினர் பிடித்து தென்காசிக்கு கொண்டு வந்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட வெள்ளத்துரை மீது புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

    • நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் ரெமன் (வயது 45).

    இவர் மூலக்கரைப்பட்டி மெயின் பஜாரில் வணிக வளாகம் வைத்துள்ளார். இந்த வணிக வளாகத்தில் அவர் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை, பேன்சி கடைகள் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து சென்றனர். இன்று காலை வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பின்பக்க ஜன்னல் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெமனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் உடனடியாக வணிக வளாகத்துக்கு விரைந்து சென்றார்.

    அங்கு வணிக வளாகத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நிதி நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.

    இதுதொடர்பாக அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது சுமார் 250 பவுன் நகைகள் வரை அடகு வைக்கப்பட்டிருந்ததும், அவை கொள்ளை போயிருந்ததும் தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும். மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ரெமன் மூலக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் பஜாரில் உள்ள வணிக வளாகத்திலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்தது
    • பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று வரை அணைக்கு வினாடிக்கு 835 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு தற்போது 2,295 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 117.20 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 121.45 அடியை எட்டி உள்ளது. இந்த 2 அணை பகுதிகளிலும் இன்றும் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 15.50 அடி மட்டுமே இருக்கிறது.

    அந்த அணைக்கு நீர்வரத்து ஏதும் இல்லை. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 26 அடியை எட்டியுள்ளது.

    • நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலை நம்பி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    மேலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்குறுங்குடி வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.

    இதுபோல நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

    • தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
    • தி.மு.க. தொடர்ந்து நம் உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து சிலர் வழக்கு போட்டனர்.

    இப்போது அதை எதிர்த்து நமது முதலமைச்சர் பெரிய வெற்றியை கண்டிருக்கிறார். தி.மு.க. அரசு ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்க கூடிய அரசு. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்காகவும் உழைக்கக்கூடிய அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபடக்கூடிய அரசு.

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க. தொடர்ந்து நம் உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் போன்றவற்றிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை.

    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் கேட்டு இதுவரை தரவில்லை. இதன்பிறகு அவர்களுடன் என்ன நெருக்கம் இருக்கிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடும், மனிதர்களோடும் எளிமையாக, இனிமையாக பழகக் கூடியவர். எனினும் உரிமை என்று வருகிற போது கருணாநிதி போன்று உறுதியாக இருக்கக் கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ்வரன்(வயது 41), மதியழகன் (39), மதிராஜா (40). இவர்கள் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் மதியழகன், மதிராஜா ஆகியோருக்கு தலா 3 மகள்கள் உள்ளனர்.

    நேற்று கக்கன் நகர் அருகே ஓடைக்கரையில் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் முருகன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நேற்று நள்ளிரவில் கோவிலில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாமிக்கு பூஜை நடைபெற்றதால் கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும், கக்கன் நகரை சேர்ந்த முருகேஷ்வரியின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த வாக்குவாதம் முற்றியதில் முருகேஷ்வரியின் மகன்கள் உள்பட சிலர் சேர்ந்து முருகனின் மகன்களான மதியழகன், மதிராஜா ஆகியோரை ஆடுகளை பலியிடுவதற்காக கொண்டு வந்திருந்த கத்தியால் சரமாரி குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். மேலும் இதனை தடுக்க வந்த மகேஷ்வரனுக்கும் கத்தி குத்து விழுந்தது.

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், வருண்குமார், விபின்.

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார், வருண்குமார், விபின்.

    பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுந்தரவதனம் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேஷ்வரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட 2 பேர் உடலும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தடயவியல் நிபுணர் ஆனந்தி சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்தார். கோவில் கொடைவிழாவில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:-

    முருகன் குடும்பத்தினர் வசிக்கும் அதே தெருவில் முருகேஷ்வரியின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். முருகேஷ்வரியின் மகன்களான வருண்குமார்(27), ராஜ்குமார்(28), விபின்(27) ஆகியோரும் அந்த தெருவிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேருக்கும் மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவில் கோவில் கொடைவிழாவையொட்டி 3 பேரும் போதையில் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது கரகாட்ட நிகழ்ச்சியின்போது முருகனின் 3 மகன்களுக்கும், முருகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே போதையில் இருந்த முருகேஷ்வரியின் மகன்கள் 3 பேரும் சேர்ந்து பதிலுக்கு தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலை சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 8 பேர் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொடுமுடியாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
    • கோவில்பட்டி, கடம்பூரிலும் சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் லேசான சாரல் பெய்தது. நாலுமுக்கு பகுதியில் இதமான காற்று வீசியதோடு சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 4 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்தது. 2 இடங்களிலும் தலா 6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஆனாலும் மாலை நேரத்தில் இதமான காற்று வீசியது. கொடு முடியாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து மிதமாக இருக்கிறது. ஏற்கனவே அங்கு சாரல் திருவிழா நடப்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இன்று காலை முதலே குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பரவலாக பெய்தது. அங்கு அதிகபட்சமாக 30 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விளாத்தி குளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோவில்பட்டி, கடம்பூரிலும் சாரல் மழை பெய்தது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • அண்ணன், தம்பி இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
    • குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை.

    நெல்லை திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அண்ணன், தம்பி இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    காரம்பாடு அருகே நடந்த கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×